சிருங்காரம்



சிலரது எழுத்துக்களில் ருசி கண்டு விட்டால் பித்துப் பிடித்துவிடும். தொடர்ச்சியாக அவ்வெழுத்தாளர்களின்  படைப்புகள் அனைத்தையும் அள்ளி பருக மனம் துடிக்கும். சில படைப்புகள் அதன் கருத்துக்காக, சிலவை விவரிப்புக்காக, சில சொல்வளத்திற்காக. மயிலனின் கதைகளை அவர் பயன்படுத்தும் சொற்களுக்காகவே படிக்கத் தொடங்கினேன். 


4 மாதங்களுக்கு முன்பு எதார்த்தமாகக் கண்ணில் பட்டது மயிலன் ஜி சின்னப்பன் எழுதிய காலச்சுவடு கட்டுரை. அதன் தொடர்ச்சியாக ‘பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம்’ நாவல் படித்தேன், ‘முப்போகம்’ குறுநாவல் படித்தேன், ‘அநாமதேயக் கதைகளும்’, ‘நூறு ரூபிள்கள்’ சிறுகதைத் தொகுப்பும் படித்து கொண்டிருக்கிறேன், ‘சிருங்காரம்’ சிறுகதை தொகுப்பு ஒரு வாரமாகக் கையிலும் பையிலும் கிடந்து இன்று காலை புத்தக அலமாரிக்குச் சென்றது. 'அகம்தான் இங்கே அவ்வளவு ஆட்டங்களுக்குமான ஆதாரம். மந்தை மனநிலையைக் கடந்து பார்த்தால், ஒரே சம்பவத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் உள்வாங்கியிருப்பார்கள்.' என்று நேர்காணல் ஒன்றில் அழுத்தமாக குறிப்பிட்டதற்கேற்ற கதைகள் கொண்ட தொகுப்பு ‘சிருங்காரம்’. 


மருந்து வாடையும் அதற்கும் அதிகமாக மனித அகத்தின் நறுமணமும் பரவிக் கிடக்கும் கதைகளை படைக்கும்  மயிலன், இந்த தொகுப்பில் மென் காம ரசத்தோடு கூடிய அதிர்ச்சிகளையும்  சாத்தியப்படுத்தி இருக்கிறார். மயிலனின் ஆதர்சங்களான ஆதவனும், அசோகமித்திரனும் இக்கதைகளின்  பல இடங்களில் தோன்றி மறைவதை வாசிப்பவர்கள் உணர முடியும். 



கதைகளின் தலைப்புக்களைப் போலவே கதைகளும் தனித்து மிளிர்கின்றன. முடிவுகளைப் பற்றியே மனம் சிந்தித்து உழல்கிறது. சில பாத்திரங்களும் சம்பவங்களும் இன்னும் மனதை விட்டு அகலவில்லை. கடினமான சொற்கள் கூட படிக்கத் தூண்டுகின்றன. 


கச்சிதமான சொற்களோடு கோர்வையான நடையில் அகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை படிக்க விரும்புவோர், இச்சிறுகதைத் தொகுப்பை ஒரு முறை படித்து பாருங்கள். 


Comments