தங்கலான்
1881 ஆம் ஆண்டு குடிமதிப்பு கணக்கெடுப்பின்போது, பறையர்களை ‘ஒரிஜினல் தமிள்ஸ்’ என்றே அழைக்க வேண்டும் எனும் விண்ணப்பத்தை அயோத்திதாசர் ஆங்கிலயேர்களிடம் சமர்ப்பிக்கிறார். அதாவது சாதியால் ஆட்கொள்ளப்பட்ட தமிழ் குடிகளிடமிருந்து தங்களை வேறுபடுத்திக்கொள்ள இதுபோன்ற அடையாளம் அயோத்திதாசரால் முன்வைக்கப் படுகிறது. பூர்வம் - சமீபம் என்ற அயோத்திதாசரின் கலாச்சார மீட்டெடுப்பு தத்துவம் இந்த கோரிக்கைக்கு அடிப்படையாக அமைகிறது.
பா. இரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் கதையின் கரு இந்த பூர்வம்-சமீபம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலானது. தங்கத்தின் உரிமையாளர்களாக தங்களைக் கூறிக்கொள்வதன் மூலம் தங்களுக்கென தனித்த பண்பாட்டு கலாச்சார கூறுகளும் அவை சமத்துவ தன்மை கொண்டதோடு மட்டுமல்லாமல் பிற பண்பாடுகளை விட மேன்மையுடையதாகவும் இருப்பதைத் தெரிவிக்க முயல்கிறார் இயக்குனர். 19-ஆம் நூற்றாண்டில் வட ஆற்காடு பகுதியில் வசித்த தலித்துகளில் ஒரு பிரிவினரின் வரலாற்றை அரசியலோடு பிணைத்து வெளிப்படுத்தியுள்ளது தங்கலான்.
பண்பாட்டு மீட்டெடுப்பும், அதிகாரம் குறித்த சுய உணர்வும் படத்தில் அவ்வப்போது வந்து சென்றாலும். சமீபத்தில் நமக்குத் தெரிவிக்கப்பட்ட ‘நவீன’ வரலாற்றை, தொன்மங்கள் மூலமும் மொழியின் மூலம் கடத்தப்படும் ‘மரபார்ந்த’ பூர்வமான கதைகளைக் கொண்டு எதிர்கொள்கிறார் ரஞ்சித். ‘எழுதப்படுவது மட்டுமே வரலாறல்ல’ என்ற விளிம்பு நிலையினரின் ஆதங்கம் திரையில் வெளிப்படுகிறது. படத்தில் கூறப்படும் வாதங்கள் உண்மைத்தன்மை கொண்டவையா என்பது கேள்விக்குட்பட்ட. அவற்றை மதிப்பிடுவதில் சிக்கலும் இருக்கிறது.
ஆனால் வெகுஜன சினிமாவில் இத்தகைய கருத்து நிலையைச் சரியாகப் பிரதிபலிக்க முடியவில்லை என்பதையே திரைப்பட அனுபவம் உணர்த்தியது. தங்கலான் Django Unchained திரைப்படத்துடன் ஒப்பிடப்பட்டாலும், மாய யதார்த்தவாதத்திற்குப் பெயர்போன Iñárritu-வின் 'Birdman’ படத்தினுடைய தாக்கமும், Spike Leeயின் தாக்கமும் இப்படத்தில் அதீதமாகவே வெளிப்படுகிறது. தமிழ் வெகுஜன சினிமாவுக்கு பழக்கப்படாத திரைமொழியில் தங்கலான் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறது. புது முயற்சியாக இருந்தாலும் ரஞ்சித் பேச நினைத்த அரசியலை இன்னும் தெளிவாகப் பேசி இருக்கலாமோ என்று தோன்றியது.
காலனிய காலத்தில் தலித்துகளுக்கும்- ஆங்கிலேயர்களுக்கும்- பிற வர்ணத்தாருக்கும் இடையில் நிலவிய உறவை நுணுக்கமாகவும் அடர்த்தியாகவும் படம் கடத்தி இருந்தது. கல்விப் புலத்தில் வளர்ந்துவரும் தலித் வரலாற்று எழுத்துக்களின் தாக்கம் படத்தில் மிக இயல்பாக வெளிப்படுகிறது. காட்சிகள் மிகக் கச்சிதமாகவும் அழகாகவும் திரையாக்கம் பெற்றிருந்தன.
தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியாக எனக்கு உடன்பாடில்லாத கதையாடல் என்றாலும், இயக்குனர் ரஞ்சித் பேச நினைத்த அரசியலை இன்னும் தெளிவாக காட்சிப்படுத்தி இருக்கலாம்.
Comments
Post a Comment