#DMK75

 









1949-ஆம் ஆண்டு No. 7, பவளக்கார தெருவில் விதையிடப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் பவளவிழா ஆண்டை, தொடங்கப்பட்ட சென்னையிலேயே விமர்சையாக கொண்டாடியிருக்கிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்ற பெரும் பிளவுகளுக்கு(சம்பத்-எம்.ஜி.இராமச்சந்திரன்-நாவலர்-வைகோ) மத்தியிலும் 75 ஆண்டுகள் தளராமல் நிலைத்து நிற்பது சாதாரணமான காரியமல்ல. 

இந்த கட்சிக்கு இருக்கும் கிளை-பகுதி-ஒன்றியம்-நகரம்-பேரூர்-மாநகரம்-மாவட்டம்-மண்டலம்-மாநிலம் என்கிற அமைப்பு முறையே அதன் பலம். இந்த நிர்வாக முறை ஆலமரத்தின் வேர்களைக் காட்டிலும் வலிமையானவை, அடர்த்தி நிறைந்தவை, ஆற்றல் பலம் வாய்ந்தவை. 


மூத்த நிர்வாகிகளாலும், முன்னோடிகளாலும் பெறப்பட்ட முக்கால் நூற்றாண்டு கால அக-புற அனுபவமும், படிப்பினையும் பல்வேறு வகையில் அடுத்த தலைமுறைக்குக் கடத்தப் படுகிறது. கடத்தப்படும் முறை ‘கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு’ மிகுந்த நெறிமுறைகளைக் கொண்டது. மிகக் கச்சிதமாக வரைமுறை படுத்தப்பட்ட ‘அனுபவ’ கல்விமுறை அது. 


இந்த கல்வி முறை மூலம் மனித வளத்தைக் கையாள அவசியப்படும் ‘அறிவு’ மூத்த  தலைமுறையிடமிருந்து இளம் தலைமுறைக்குக் கடத்தப்படுகிறது. IIM-ல் படிக்கும் MBA(HRM) பட்டதாரிகளால் சாத்தியப்படாத Man-managemant கட்சியின் கடைக்கோடி அமைப்பை இயக்குபவரான கிளை செயலாளருக்கு மிக இயல்பாகக் கூடி வருவதைப் போராட்டங்களின்போதும், கொண்டாட்டங்களின் போதும் கவனிக்கமுடியும்.  


இளம் தலைமுறையைக் கொண்ட கழகத்தின் சார்பு அணிகள் இப்பெரும் இயக்கத்தை வருங்காலத்தில் வழிநடத்தத் தேவைப் படும் அனுபவங்களை வழங்கும் பயிற்சிப் பட்டறைகளாகச் செயல்படுகின்றன. 

சமகால மாற்றங்களுக்கு ஏற்றார் போல் சில தரவுகளைச் சேகரிக்க consultancy நிறுவனங்களின் உதவியை இப்பெரும் அமைப்பு நாடினாலும், New Public Management என்ற நிர்வாக முறைக்கு மெல்லத் தகவமைத்து கொள்வதன் அறிகுறியாக தான் இம்மாற்றங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

கிளை முதல் மாநிலம் வரை இருக்கும் அமைப்பு, சார்பு அணிகள் ஆகியவை சிறு புள்ளிகளாகவும் மாநிலத் தலைமை இவற்றைக் கூட்டாகக் கொண்டு இயங்கும் பெரும் புள்ளியாகவும் திகழ்கிறது. சாமானிய தொண்டர்களை மட்டுமே நம்பி இந்த அமைப்பு இவ்வளவு சீராகச் செயல்படுகிறது. 


சாமானியர்களுக்கும்  கட்சிக்கும் இடையே நிலவும் குடும்ப உணர்வு ஒரு வித பந்தத்தை ஆழமான பிணைப்பாக ஏற்படுத்தி இருக்கிறது. தம்பி! உடன்பிறப்பே! உங்களில் ஒருவன்! என்று மூன்று தலைமுறையாகத் தொண்டர்களைச் சுட்டும் வார்த்தைகள் தான் வேறே ஒழிய இச்சொற்களுக்குள் படிந்திருக்கும் பாச உணர்வு ஒன்று தான். 


ஆளுங்கட்சியாக இருத்தலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சமகால பொருத்தப்பாட்டுடன் இருப்பதற்குக் கொள்கை தெளிவு கொண்ட தலைமையும், கீழிருந்து மேலாக எழுப்பப்பட்டு நிர்வகிக்கப் படும் அடர்த்தி நிரம்பிய அமைப்பும், தொண்டனுக்கும் தலைவனுக்கும் இடையில் வலுவாக இருக்கும் குடும்ப பாசம் நிரம்பிய அக உணர்வும் தான் மூல காரணம். 


"கழகம் நல்ல கழகம்.. திராவிட முன்னேற்ற கழகம்..! அதன் திருப்பணி என்றென்றும் தொடரும்!" என்று கழகத் தலைவர் பவள விழாவில் பாடிய பாடல், இன்னும் இரண்டு பத்தாண்டுகள் கடந்து நூற்றாண்டு காணும் தருவாயிலும் பொருத்தப்பாடுடையதாகவே இருக்கும். 


#DMK75




Comments