எனக்குள் தாத்தா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!
எனக்கு கொள்கை உணர்வூட்டி வளர்த்த தந்தைவழி தாத்தா ‘பெரியார் பெருந்தொண்டர்’ கொ.வீ. பெரியசாமி அவர்கள் 18/11/2024 அதிகாலை மறைவெய்தினார்.கண் தானம் செய்து, முடிந்து அளவிற்கு சடங்குகளை தவிர்த்து பகுத்தறிவு முறைப்படி அடக்கம் செய்தோம். கருஞ்சட்டையோடு, திராவிடர் கழகத்தின் கொடி போர்த்தப்பட்ட நிலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.
89 வயதில் அவர் கொண்டிருந்த பெரியாரிய கொள்கைகளை மிகத் தீவிரமாக கடைபிடித்து வாழ்ந்து மறைந்துள்ளார். ‘பெரியார் திடலுக்கு லாம் போவியா? அடுத்த முறை மெட்ராஸில் இருந்து வரப்போ விடுதலை ஆண்டு மலர் வாங்கிட்டு வா’ என்ற தாத்தாவுடனான சில நினைவுகளை பகிர்ந்துகொள்வது என்னளவில் அவருக்கு சிறந்த அஞ்சலியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
‘நீ எங்க இருந்து இந்த கொள்கை எல்லாம் தெரிஞ்சிகிட்ட’ என்று என்னிடம் கேட்கப்படும் கேள்விக்கான பதிலை தாத்தாவில் இருந்து தான் தொடங்குவேன். தாத்தா தி.க காரர், திகவில் முன்னாள் ஒன்றிய செயலாளர், பெரியார் கொள்கைகளை உள்வாங்கி அதே உணர்வை அனைவர்க்கும் கடத்த முற்பட்டவர்.
ஊரில் எங்கள் வீட்டிற்கு மட்டும் ‘கருப்பு சட்ட’ காரர் வீடு என்பதே நிரந்தர முகவரியாக இருந்தது, இருக்கிறது. வெறும் அடையாள அளவில் மட்டுமல்லாமல் அன்றாடம் விடுதலை நாளிதழ் வாசிப்பார், உண்மை இதழ் படிப்பார், நிறைய புத்தகங்கள் வாசிப்பார், படிப்பதோடு மட்டும் அல்லாமல், பாமரருக்கும் விளங்கும் வகையில் அவற்றை பிரசங்கம் செய்யவும் தாத்தாவிற்கு தெரியும்.
வீட்டிற்கும் வரும் எவரிடமும் கொஞ்சமும் சளைக்காமல் தான் கொண்ட கொள்கைகளை துணிவுடன் பேசி கொண்டே இருப்பார். உறவுகளைவிட கொள்கை முக்கியம் என்று வாழ்ந்தவர் அவர். ஆனாலும் அவர் கொண்ட குணம், உறவுகளை கூட விலக்கி வைக்கவில்லை என்பது இறுதி சடங்கில் கூடிய கூட்டத்தில் நிரூபணமானது. அவ்வளவு கூட்டத்தையும் பார்த்துவிட்டு பெருமிதம் ததும்ப நல்லடக்கம் செய்தோம்.
நான் சிறுவனாக இருக்கும் போதிருந்தே தாத்தா கருப்பு சட்டை தான் அணிந்து தான் பார்த்திருக்கிறேன். பெரியார் பிறந்தநாள் என்றால் மிட்டாய் கொண்டு வந்து கொடுப்பார். தீவிரமாக அரசியல் பேசுவார். பொதுக்கூட்டம், மாநாடு, தேர்தல் பிரச்சாரம் என்று எந்த இயக்க நிகழ்வென்றாலும் தன்னுடைய TVS 50-ஐ எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவார். 83 வயதுவரை இந்த வழக்கத்தை அவர் கொண்டிருந்தார். பிறகு நடைபெற்ற சிறிய விபத்தாலும், மகன், மகள்களின் வற்புறுத்தலாலுமே அவர் மாநாடுகளுக்கு வண்டியில் செல்வதை நிறுத்தினர். சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு கூட தி.க தோழர்களின் உதவியுடன் சென்று திரும்பினார். அவரிடம் இருக்கும் நேரம் தவறாமை, வேலை நேர்த்தி, நியாபகத் திறன், ஒழுங்கு போன்ற பண்புகளை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை.
பெரியார் பிஞ்சு இதழை தாத்தா எங்களுக்காகவே வாங்குவார். அந்த சிறுவயதில் பெரிதாக கொள்கையை உள்வாங்கவில்லை என்றாலும் இதழை படங்களுக்காகவும் ஓவியங்களுக்காகவும் புரட்டி பார்த்து படிப்பேன். ‘சாமினு ஒன்னு இல்ல’ என்று அவர் சொல்வதை பிடிவாதமாக மறுத்திருக்கிறேன், பெரியார் பேர்லையும் உங்க பேர்லையும் இருக்கே சாமி-னு என்ற வயது கோளாறு வாதங்களுடன் அவரை உதாசீன படுத்தியிருக்கிறேன். கையில் கயிறு கட்டி கொண்டு திரிவது அநாகராகீகமானது என்று அவர் சொல்வதை கேட்டு கோபித்து கொண்டிருந்திருக்கிறேன். இருந்தாலும் அவர் பகுத்தறிவு பிரச்சாரம் செய்வதை நிறுத்தியதே இல்லை. நான் ஒரு கட்டத்தில் அறியாமையில் இருந்து தெளிந்தபோது தாத்தாவின் மகத்துவம் புரிந்தது.
அதன் பிறகு அவரிடம் கதைகள் கேட்பது, அரசியல் பேசுவது, கொள்கைகளை தெளிவது என நெருங்கி பழக தொடங்கினேன். பெரியாரை நேரில் கண்ட அனுபவங்களை விவரிக்கும் போது அவர் குரலில் உற்சாகம் தெறிக்கும். அதற்காகவே அவற்றை மீண்டும் மீண்டும் சொல்ல சொல்லி கேட்பேன் . கொரோன காலகட்டத்தில் ஒன்றரை ஆண்டுகள் வீட்டில் இருக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது அவர் விடுதலையில் வரும் சில கட்டுரைகளை வாசிக்க கொடுப்பார், இந்தா இதை படி என்று. படித்து அதுபற்றி அவரிடம் உரையாடியும் இருக்கிறேன்.
வேலைக்கு செல்ல தொடங்கியதும், புத்தக கண்காட்சியில் புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’ உள்ளிட்ட சில நூல்களை வாங்கி சென்றேன். அந்த புத்தகத்தை ஒரு வாரத்தில் தினம் கொஞ்சமா ஆர்வத்துடன் படித்து முடித்தார். அவருடையா வேகம் வியப்பாக இருந்தது.
தாத்தா பெரிய படிப்பெல்லாம் படிக்கவில்லை, பாதியில் நின்று போன பள்ளி கல்வி தான். ஆனாலும் பிழையின்று தமிழை எழுதுவார் பேசவும் செய்வார். தி.க காரர்களுக்கே உரிய பாணியில் இராமாயணம், மனுதர்ம சாஸ்திரம் போன்றவற்றில் இருக்கும் செய்யுளை மனதிலிருந்து சரளமாக சொல்வார். தன்னுடைய தம்பிகளுள் இருவரை படிக்க வைத்தார், மூன்று மகள்களையும் உயர்கல்வி வரை படிக்க வைத்தார். தன்னுடைய திருமணத்தில் தொடங்கி தன் பிள்ளைகளின் திருமணம் வரை அனைவருக்கும் சடங்குகழற்ற சுயமரியாதை திருமணமே செய்து வைத்தார்.
வருடத்தில் அவருக்கான கொண்டாட்ட நாள் என்றால் பொங்கலும் பெரியார் பிறந்தநாளும் தான். இதை இரண்டு நிகழ்வுகளின்போதும் அதுவரை இல்லாதா உற்சாகம் அவர் செயலில் தெரியும், பரபரப்பாக பணிகளை மேற்கொள்வார்.
என்னுடைய 13-வது வயதில் சைக்கிள் வேண்டும் என்றேன், அடுத்த ஒரு வாரத்தில் சைக்கிள் வாங்கி கொடுத்தார். வயது முதிர்ந்த காலத்தில் அவரை வாக்களிக்கவும், நியாய விலை கடைக்கும், நண்பர்களை மற்றும் உறவினர்களை பார்க்கவும் வண்டியில் அழைத்து சென்றது மனதில் நிழலாடுகிறது. 2022-ஆம் ஆண்டு பெரியார் பிறந்தநாளான சமூகநீதி நாளில், கொடியேற்றி, உறுதிமொழியேற்று, அவர் உரையை கேட்டது இப்போது ஆறுதலாக இருக்கிறது.
இந்த தீபாவளிக்கு ஊருக்கு சென்றாலும், அத்தை வீட்டில் இருந்த அவரை பார்க்க செல்லவில்லை. ‘வந்துட்டு போய்ட்டானா, சரி போகட்டும்’ என்று சொல்லி வருத்தப்பட்டாராம். அதன் பிறகு ஒரு நாள் Video Call-ல் அழைத்து பேச என்னை ஆற்றுப்படுத்தி கொண்டேன்.
இந்த சனிக்கிழமை அதிகாலை பிரவீன்(அத்தை மகன்) அழைத்திருந்தான், மூச்சு திணறல் காரணமாக தாத்தாவை மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம், உன்ன கேக்குறாரு என்றான். மாலை 6 மணி அளவில் மருத்துவமனைக்கு சென்று அவரை பார்த்தேன். கையை பிடித்துகொண்டேன். அழுகை தானாக வந்தது. வீட்டில் கண்ணாடி மாட்டிக்கொண்டு செய்தித்தாள் வாசிக்கும் அவருடைய பிம்பம் கண் முன் தோன்றி மறைந்தது. அவரை இந்த நிலையில் பார்க்க வருத்தமாக இருந்தது. அன்றிரவு முழுக்க அவர் அனுமதிக்க பட்டிருந்த ICU வார்டுக்கு வெளியே தான் படுத்தும் கிடந்தோம் நானும் கௌசிக்கும். நள்ளிரவில் ‘தலையை கொஞ்சம் நீவி விடு’ என்றார் அதை கேட்டதும் கண்ணில் நீர் ததும்பியது, தலையை நீவி விட்டேன்.
அடுத்த நாள் சேலம் அரசு மருத்துவமனையில் ICU வார்டில் அனுமதிக்கப்பட்டார், Dialysis முடிந்ததும் நன்றாகதான் பேசி கொண்டிருந்தார். எங்க வேலை செய்யுற, சம்பளம் எவ்வளவு, திடலுக்கு போவியா, புத்தகம் வாங்கிட்டு வா, தண்ணி குடிக்கணும் போல இருக்கு என்றெல்லாம் அவர் பேசிய போது தேறி வந்துவிடுவார் என்று தான் நினைத்தேன். அவரது பேச்சு வழக்கம் போலவே எனக்கு தைரியமூட்டுவதாக இருந்தது. அடுத்த வாரம் விடுதலை மலர் வாங்கிட்டு வந்து கொடுக்கணும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன்.
திங்களன்று அதிகாலை 5:15 மணிக்கு வீட்டுக்கு போகணும், பல் துலக்கனும் என்றார். “போலாம் தாத்தா சரி ஆகிரும் எல்லாம்” என்று ஆறுதல் வார்த்தைகள் கூறினேன். மாஸ்க் அணிந்திருந்த என்னை அகற்ற சொன்னார், அவருடைய கண்களை பார்த்து அவருடன் பேசி கொண்டிருந்தேன். சின்ன வயதில் ஏர் கலப்பை பிடித்து வயல் உழுக கற்றுத் தந்தது, தென்னங் கீற்றில் பாம்பு, வாட்ச், மோதிரம் செய்ய சொல்லி கொடுத்தது, மரத்தில் கிரிக்கெட் பேட் செய்துகொடுத்தது என அனைத்தும் ஒவ்வொன்றாக நினைவில் தோன்றி அழுகை பீறிட்டது. 7:35-க்கு சேலம் அரசு மருத்துவமனையில் அவர் உயிர் பிரிந்தது. இந்த நவம்பர் 26 வந்தால் எனக்கு 90 வயது என்றவர், 89 வயதில் புகழ் எய்தினார். இரண்டு நாள் அவருடன் இருந்தது ஆறுதலாக இருந்தது. பெரிய சிரமம் இன்றி மரித்துள்ளார் தாத்தா என்ற நிம்மதியும் ஏற்படுகிறது.
“நீங்க செத்தா உங்களுக்கு என்னலாம் செய்யணும்” என்று மிக சமீபத்தில் பாட்டி தாத்தாவிடம் கேட்க. “எல்லாம் கெளதம் பார்த்துக்கொள்வான்” என்று சொல்லி இருக்கிறார். முடிந்த அளவுக்கு அவர் கொண்டிருந்த கொள்கைகளுக்கேற்ப அவர் வாழ்ந்த நிலத்திலையே அடக்கம் செய்தோம். சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏதுமற்று கொடி போர்த்தப்பட்ட நிலையில் இறுதி ஊர்வலம் நடைபெற்றது.
வருகிற டிசம்பர் 1(ஞயிற்றுக்கிழமை) அன்று இல்லத்திலையே படத்திறப்பு விழாவும் நினைவஞ்சலி கூட்டமும் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
எனக்குள் தாத்தா வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்!
எனக்கு கொள்கை உணர்வூட்டி வளர்த்த ‘பெரியார் பெருந்தொண்டர்’ கொ.வீ. பெரியசாமி அவர்களுக்கு வீர வணக்கம்!
🫂🫂🫂
ReplyDeleteWarm hugs! Inspiring
ReplyDelete