கே.கே. என்

 செப்டம்பர் 17, சென்னை, ஜார்ஜ் டவுன், பவழக்காரத் தெரு 7-ஆம் நம்பர் வீட்டில் 1949 ஆம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட செய்தியை அரசியல் ஆர்வலர் அனைவரும் அறிவர். ஜார்ஜ் டவுன்  சுற்றுவட்டார பிரஜைகளிடம் கழகம் தோன்றிய இல்லத்திற்கு ‘அண்ணாதுரை வீடு’ என்ற பெயர் நெடு நாட்கள் நிலைத்திருந்ததாம். அந்த இல்லம் அண்ணாவிற்குச் சொந்தமான இல்லம் அல்ல. 




நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவரும் திருவொற்றியூர் நகர்மன்ற தலைவருமான சண்முகம் பிள்ளையின் இல்லமாக இருந்த வீடது. இன்றைக்கு அந்த இடம் கட்சிக்குத் தொடர்பற்ற  5 மாடி கட்டிடமாக உருமாறி உள்ளது என்பதைத் தமிழ் வரலாற்றியலின் நிலைமைக்கு உவமையாகச் சுட்டலாம்.  


சரி இதைச் சொல்ல வந்த காரணமே வேறு, திமு கழகம் தோன்றக் காரணமாக இருந்த அந்த திராவிடர் கழக நிர்வாகக் கமிட்டி கூட்டத்தை கூட்டிய குழுவின் துணைத் தலைவர்  கே.கே. என் (எ) குடந்தை பெரியார் கே.கே.நீலமேகம் அவர்களின் நினைவு நாள் இன்று. பேரறிஞர் அண்ணாவை விட வயதில் முதியவர், அண்ணாவின் தலைமையைத் தயங்காமல் ஏற்றவர்,அதனால் தான் அண்ணா அவரை ”பெரியவர்” என்றே விளித்தார். 


 கழகத்தின் ஆரம்பக்காலத்தில் கழக பொருளாளராகப் பொறுப்பேற்றிருந்தவர் கே.கே.என். 1951 ஆம் ஆண்டு டிசம்பர் 13, 14, 15, 16 ஆகிய தேதிகளில் சென்னையில் மிகப்பெரிய எழுச்சியுடன் பேரறிஞர் அண்ணா தலைமையில் நடைபெற்ற மாநாட்டின் திறப்பாளர் கே.கே. என் அவர்கள். இவரை இன்றைய திராவிட இயக்க தீரர்கள் பகுதியில் நினைவு கூர்ந்திருந்தது முரசொலி நாளிதழ். பாசறை பக்கத்தில் கழக முன்னோடிகள் குறித்து சனிக்கிழமை தோறும் வெளியாகும் உடன்பிறப்பே தொடரில் இவரைப் பற்றி நெடுங்கட்டுரை ஒன்றும் வெளியாகி இருக்கிறது.(செப்ட் 23 2023)


Roja Muthiah Research Library அண்மையில் தொடங்கிய மின்னூலகத்தில், மேலுமொரு பொக்கிஷத்தையும் இன்றைய தினத்தில் கண்டடைய முடிந்தது. —------ அந்த நூலைக் கவனப்படுத்தினர். திமுக சட்டதிட்டக் குழுவினரால் தயாரிக்கப்பட்டு, பொதுக்குழுவில் திருத்தப்பட்டு முதல் மாநில மாநில மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்டங்கள் அடங்கிய ஆவணம் அது. 





பெயருக்கு கட்சி தொடங்கி வீட்டிலிருந்து வேலைசெய்து கொண்டிருக்கும் திடீர் அரசியல்வாதிகளுக்குப் பாடநூலாக இடம்பெறும் அளவுக்குக்காணக் கருத்துக்களைக் கொண்ட அடர்த்தி நிறைந்த ஆவணம் இது. அதே நேரத்தில் எளியவர்களும் எளிதாக விளங்கிக் கொள்ளும் அளவுக்குச் சுலபமான ஆவணமும் கூட. 


கிளை, நகரம், வட்டம், மாவட்டம், பொதுக்குழு, செயற்குழு, பொதுச்செயலாளரின் அதிகாரங்கள் என படிப்படியாக ஒரு கட்சி எப்படிக் கட்டமைக்கப்பட்ட வேண்டும், அதன் நிர்வாகம் எப்படிச் செயல்பட வேண்டும், குறைந்தபட்சமும் அதிகபட்சமும் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டிருக்கலாம் என்பதை எல்லாம் மிகத் தெளிவாகவும், அதிகார கட்டமைப்பு எவ்வகையானது, தேர்தல் நடத்த விதிமுறைகள் என்னென்ன, ஒருவரை நீக்க என்னென்ன நிபந்தனைகள் என்பதை எல்லாம் பொருள்பட  விளக்குகிறது இந்த ஆவணம். அன்றைய காலகட்டத்தில் இந்த ஆவணத்தில் விலை இரண்டு அணா. (ஒரு ரூபாயில் 1/16 அணா. ஒரு அணாவில் நான்கு பைசாக்கள்) 



பவள விழா கண்டுள்ள ஒரு கட்சியின் அமைப்பு ரீதியிலான வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் தீணா மூனா கானாவிற்கு இந்த ‘இரண்டணா’ ஆவணம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்துள்ளது என்பதை உணர முடிகிறது. 


வரலாறு வெளிப்படும்போது பிரமாண்டமாகக் காட்சியளிக்கத் தவறுவதேயில்லை!


Comments