அரசியல் பிழைத்தோர்
தமிழில் சுவாரசியமான அரசியல் கட்டுரைகளை வாசித்தே நெடுநாட்கள் ஆனது, கடைசியாகச் சின்ன குத்தூசியின் ‘பூக்கூடை’ கட்டுரை தொகுப்பை வாசித்ததாக நியாபகம்.
சமகால அரசியலையும் முந்தைய வரலாற்றையும் கோர்த்து இரண்டுக்கும் இடையும் நிலவும் ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டி ஒரு கதையாடலைக் கட்டமைத்து, வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் அரசியல் கட்டுரை எழுத்தாளர்கள் தமிழ் சூழலில் அருகி விட்டதாகவே படுகிறது.
அண்மையில் அலுவலக நூலகத்திலிருந்து ‘அரசியல் பிழைத்தோர்’ என்ற கட்டுரை தொகுப்பை எடுத்துப் படித்தேன், R.P. ராஜநாயஹம் எழுதி இருந்தார். கலைஞருக்கு சமர்ப்பித்திருந்தார். அதுவே நூலுக்குள் சுண்டி இழுத்தது.
இவரது எழுத்துக்களில் கிசுகிசு தன்மை வெளிப்பட்டாலும், அவை வதந்தி அல்ல உண்மை என்ற உணர்வைக் கட்டுரையின் ஏதோ ஒரு பகுதி ஏற்படுத்தி விடுகிறது. வாசகனின் சுவாரஸ்யத்திற்காக அந்த கிசுகிசு பயன்பட்டாலும், அந்த கட்டுரை கொண்டிருக்கும் ஆழத்தை எவ்வகையிலும் அந்த நடை தொந்தரவு செய்வதில்லை.
கண்ணதாசன், மதுரை முத்து, ஈ. வெ. கி. சம்பத் , தீப்பொறியார், நாவலர், வெற்றிகொண்டான், காளிமுத்து என இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் அரசியல் ஆளுமைகள் அனைவரும் ஏதோ ஒருவகையில் சர்ச்சையில் சிக்கியவர்கள், தமிழ்நாட்டில் அரசியலின் திசையைத் தீர்மானித்து வரும் இருபெரும் திராவிட கட்சிகளில் பல காலம் பயணித்தோர். இவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்குள் இத்தனை கேலியும் கிண்டலும் மனோகரமும் நிறைந்திருப்பதை இந்த கட்டுரை தொகுப்பு தான் வெளிக்கொணர்கிறது.
முகநூல் பதிவு போலவே இக்கட்டுரைகள் தோற்றமளித்தாலும், ரசமான ஒரு நிகழ்வை, சம்பவத்தை, வரலாற்றை நமக்குக் கடத்துகின்றன. எள்ளல் ததும்பும் சில இடங்களில் குத்தூசியார் நினைவுக்கு வருகிறார். பல இடங்கள் முகச்சுளிப்பை ஏற்படுத்தின. புன்னகித்து, கருத்தைப் பகிர்ந்து, சிந்தித்து, லயித்துப் படித்த தொகுப்பு.
திரட்டப்பட்ட தகவல்களையும், கடினமான சொற்களையும் கொண்டு கட்டமைக்கப்படும் சமகால அரசியல் கட்டுரைகளுக்கு இடையே, இப்படியும் எழுதலாம், இடையில் ஒரு வரலாற்றைச் சொருகலாம் என்று காட்டி இருக்கிறார் R.P. ராஜநாயஹம். திருவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் எஸ்.எம்.டி. சந்திரன் அவர்களின் மருமகன் இந்நூலாசிரியர் R.P. ராஜநாயஹம். அவரே கூறி இருக்கா விட்டால் இந்த தொகுப்பின் ஓரிடத்தில் கூட அந்த தொனி வெளிப்பட்டிருக்காது. அரசியல் பிழைத்தோர் என்பது நூல் ஆசிரியருக்கும் பொருந்திப் போகிறது.
Comments
Post a Comment