கலை நிர்பந்திக்கும் அக்கறை
இரண்டாண்டுகளுக்கு முன் சலபதியை சந்தித்தபோது அவர் எனக்கு ‘Beyond Tranquebar’என்ற நூலைப் படிக்க கொடுத்தார். சலபதி, Esther FIhl ஆகியோர் இணைந்து தொகுத்த 24 கட்டுரைகள் அடங்கிய இந்த தொகுப்பை Orient Blackswan பதிப்பகம் வெளியிட்டிருந்தது. சில கட்டுரைகளை மட்டும் படிக்க முயன்று பின் அலமாரியில் வைத்துவிட்டேன்.
டானிஷ் பேரரசால் அனுப்பப்பட்ட வர்த்தக குழு வந்திறங்கிய இடத்தை, தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கனோடு ஒப்பந்தம் செய்துகொண்டு, ஆண்டுக்கு 3111 ரூபாய் குத்தகை வழங்கி அங்கு ஒரு கோட்டையைக் கட்டியெழுப்பவும் திட்டமிட்டது. அப்படி அமைத்த காலனிதான் தரங்கம்பாடி. அவர்கள் எழுப்பிய ‘டான்ஸ்பர்க் கோட்டை’ 2004 சுனாமியில் சிக்குண்டு சிதைந்த நிலையில் இன்றைக்கும் அங்கு தான் அமைத்திருக்கிறது.
இந்த வர்த்தக குழு பெரும் சிரத்தை எடுத்தும் அல்லலுக்கு மத்தியிலும் மனம் தளராமல் இலக்கை நோக்கி மேற்கொண்ட இரண்டாண்டு கப்பற் பயணமும், அதில் நிகழ்ந்தேறிய காதல், நோய், களிப்பு, ஆகியவை தான் கதை நிகழும் களங்கள்.
வெறுமனே வரலாற்றைக் கதையாக்கி நாவல் என்று நம் மீது திணிக்காமல், மனிதர்களைப் பிரதானமாகக் கொண்டு, அவர்களின் அகத்தில் நடக்கும் மாற்றங்கள் புறத்தையும், புறம் அகத்தில் உண்டாக்கு தாக்கத்தையும் இந்நாவலின் வழியே பேசுபொருளாகியுள்ளார் மயிலன்.
நாவலின் நாயகர்களான விர்க்ஸுக்கும் நேதாவுக்கும் இடையே கலை குறித்து நடைபெற்ற தத்துவார்த்த உரையாடல் இப்படி நீள்கிறது, “கலை நிர்பந்திக்கும் அக்கறையும் சிரத்தையும் மிதவை மனங்களால் எட்டமுடியாதது. உத்தேசிக்கும் வெளியீடு, காதலாகவோ களிப்புணர்வாகவோ கொண்டாட்டமாகவோ இருந்தாலும் அதற்கான அழுத்தமான, பிரத்யேகமான ஊன்றல் வேண்டும், செலவச் செழுமை அந்த ஊன்றலாய் அனுமதிக்காது.” தனது சொத்தை விற்று காதலுக்காகவும் லட்சியத்திற்காகவும் பயணத்தை மேற்கொள்ளும் விர்கஸே ‘தன்னிலையுணர்தலே நற்கலையின் தோற்றுவாய்’ என்ற அர்த்தப்பாட்டுடன் உதிர்த்த கலை பற்றிய இந்த வரிகளைத் தான் நாவலின் கரு என்று சொல்லத் தோன்றுகிறது.
மயிலன் இந்த பாத்திரத்தை மையமாக வைத்து நம்மிடையே ஒரு உளநிலைப் பகுப்பாய்வை நிகழ்த்துகிறார். உளச்சவால்கள், உளநெருக்கடி, பிறழ்வு, உளவதை, மனவழுத்தம், மனப்புழுக்கம், அகச்சிதைவுகள், சுரத்தற்ற உளப்போக்கு, அகவிடுதலை, உளப்பிணி, நிறுவன மனநிலை, அகவோட்டம் என அவர் அகம் குறித்தும் மனம் குறித்தும் பயன்படுத்தும் சொற்கள் நாவலின் ஆழத்தைத் தெரிந்துகொள்ள உதவுகின்றன.
பிரபாகரனின் போஸ்ட்மார்ட்டம் நாவலிலும், மயிலனின் இதர சிறுகதைகளிலும் வெளிப்படும் மருத்துவ நெடி இந்நூலில் பெரிதாக வீசவில்லை. கதை நிகழும் காலம் இந்த இன்மைக்குப் பிரதான காரணமாக இருக்கலாம். பயணத்தின் இடையே பிரஜைகளுக்கு ஏற்படும் பிணியை பேசுமளவிற்கு அதற்கான மருத்துவத்தைப் பேசவில்லை, பாதிரியின் பிரார்த்தனையுடன் அவை நிறைவுறுகின்றன.
கத்தோலிக்கமும் லூதரியமும் முரண்பட்டு விர்க்கஸுக்கும் ரூதட்டுக்கும் இடையே நிகழ்ந்த காதலை அடுத்த நிலை நகர்வுக்குச் சாத்தியமில்லாமல் செய்கிறது. அதுவே அவர்களின் பயணத்திற்கு மூலமாக அமைகிறது. பயணத்தின்போது தான் அத்தனையும் நிகழ்ந்தேறுகிறது. மாற்றத்தை விரும்பி மேற்கொள்ளப்பட்ட பயணம் ஏமாற்றத்தை மட்டும் வழங்கி அவனை முடக்கிப் போடுகிறது. இழப்பில் உழன்று துயருறுகிறான். ஆனாலும் அவனிடம் ஒரு ஊன்றல் இருக்கிறது.
Gabriel García Márque-ன் The Autumn of the Patriarch நாவல் தான் இதைப் படைக்க உந்துதலாக அமைந்ததென்கிறார் மயிலன். Gabo-வின் தாக்கம் நாவல் முழுக்கவே வெளிப்படுகிறது.
காதல் ஒரு ஆகச்சிறந்த புத்திக்கொல்லி.
புறம்பேசுவதைத் தவிர பிழைத்திருக்க வேறெந்த குறிக்கோளும் இல்லாதவர்கள்.
ஒருபோதும் முடியாத பயணத்தைக் கனவுகொள்ளாதே.
நீண்ட ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்டு பிரகாசிக்கும் வண்ணங்களால் நிறைந்திருந்தது அந்த வாழ்க்கை.
நிகழ்த்தருணத்திலிருந்து தவணையாக தப்பித்துக்கொண்டிருந்தான்.
போன்ற இலக்கிய உச்சம் நிறைந்த வாக்கியங்கள் Gabo-வை நினைவூட்டத் தவறவில்லை. குறியீடுகள், சமிக்ஞைகள், நிகழ்வு பொருத்தம் ஆகியவற்றைக் கொண்டு சொற்களின் வழியே மயிலன் பெரும் ஜாலத்தை நிகழ்த்தி இருக்கிறார். மார்க்கேஸின் நாவலின் வரும் ‘தங்க மீன்கள்’ போல் இதில் பூஞ்சை படிந்த ‘சீனி வள்ளி கிழங்கு’ உவமிக்கபடுகிறது.
வழக்கமாக மயிலனின் எழுத்து நோக்கி நம்மை உந்தும் கச்சிதமான மொழி அமைவும், சொற்பிரயோகமும் இந்த குறுநாவலில் மேலும் மெருகேறியுள்ளது. இந்த மெருகேற்றம்தான் ஊன்றிப் படிக்க நம்மை வித்திடுகிறது. ‘கலை நிர்பந்திக்கும் அக்கறையும் சிரத்தையும் மிதவை மனங்களால் எட்டமுடியாதது’ என்ற அனுமானம் நாவலின் இறுதியில் அர்த்தப்படவே செய்கிறது.
#நீஸெவின்_வேர்க்கனி #Books
Comments
Post a Comment