தனியிசை: எதிர் கலாச்சாரம் பிறக்கிறது
தமிழ் இசை குறித்து உ.வே.சாமிநாதையர் தொடங்கி சஞ்சய் சுப்பிரமணியம் வரை இசை உலகத்திற்கு உள்ளிருந்தும் வெளியே இருந்தும் பல்வேறு குறிப்புகளையும் சங்கீத நுணுக்கங்களையும் வரலாற்றையும் எழுதியுள்ளனர். மிருதங்கம் பற்றியும் மிருதங்கம் உருப்பெறும் வரலாற்றையும் இசைக் குடும்பங்களில் வரலாறாக டி.எம். கிருஷ்ணா எழுதி இருக்கிறார். கர்நாடக இசை குறித்த ஒரு பெரும் அறிமுக நூலும் அவர் பெயரில் அடங்கும். எம்.எஸ் பற்றி டி.ஜே.எஸ். ஜார்ஜ், கேஷவ் தேசிராஜூ எனப் பலர் எழுதிய புத்தகங்கள் வெளியாகி இருக்கின்றன. திரையிசை ஜாம்பவான்களான எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் பற்றியும் குறிப்பிடும்படியான நூல்கள் வெளியாகி இருக்கின்றன.
மரபிசை, திரையிசை என வெகுஜன மைய இசைக்கு இணையாக எதிர் கலாச்சாரமாக வளர்ந்து வருவது தனியிசை(Indie Music) என்று விளிக்கப்படுகிறது. ஆனால் தமிழ்ச் சூழலில் தனியிசை என்பது திரைத் துறையில் நுழைய வாசலாகவே இதுவரை பயன்பட்டு வருகிறது. அல்லது திரைத்துறை மாறிவரும் போக்கிற்கு ஏற்ப தனியிசையையும் உண்டு செரிக்கும் நெகிழ்வுத்தன்மையையும் கொண்டே இருக்கிறது.
அகராதி படி தனியிசை என்பது புரவலர் அற்ற, பொருளாதார பின்புலமற்ற, கலைஞர்/கள் தன்னிச்சையாக உருவாக்கும் இசையைக் குறிக்கிறது. சிறு குறு இசை நிறுவனங்களின் துணை கொண்டு உருவாக்கப்படும் ராக் மற்றும் பாப் இசை வகைகளும் இப்படிச் சுட்டப்படுகின்றன.
அப்படியான தனியிசையை தமிழ்ச் சூழலில் பொருத்திப்பார்த்து அதன் தோற்றம், வளர்ச்சி , அடைந்துவரும் மாற்றம், தற்கால போக்கு ஆகியவற்றை விவரிக்கும் நூல் தான் ஆர். ஸ்ரீனிவாசன் எழுதி இருக்கும் ‘தனியிசை: எதிர் கலாச்சாரம் பிறக்கிறது’. ஆழி பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது.
நானறிந்த வரையில் தமிழில் தனியிசை குறித்து வெளியாகும் முதல் நூல் இதுவென்று நினைக்கிறேன். 110 பக்கங்களில் தனியிசை குறித்துத் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும் பல புதிய திறப்புக்களை அளிக்கிறது இந்நூல்.
20-ஆம் நூற்றாண்டில் திரைத்துறைக்கும் இசைக்குமான இணைவை தியோடர் பாஸ்கரன் துணை கொண்டு நமக்கு விளக்குகிறார் நூலாசிரியர், பின்னாட்களில் திரையிசை பெற்ற மாற்றங்களைச் சுட்டிக்காட்டி, இந்தியாவில் நிலவிய தற்சார்பு பொருளாதாரம் 80கள் வரையிலும் மேற்குலகில் நடைபெற்ற இசை வடிவ மாற்றங்களை இந்தியச் சூழலுக்குக் கடத்த தவறியதையும் கவனப்படுத்துகிறார். சந்தை மெல்லத் திறக்கப்பட்ட பிறகு, உலகமயமாக்கலும், தாராளமயமாக்கல், தனியாரின் வருகையும் இசைக்கும் திரைக்குமான உறவில் ஒரு நெகிழ்வை ஏற்படுத்துகிறது. திரை இசையில் புது முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. ராஜா, ரகுமான், ஹாரிஸ் போன்ற இசையமைப்பாளர்களே பல நேரம் இதனை முயன்று பார்த்து வெற்றிகண்டும் இருக்கிறார்கள்.
21-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளில் ராப், ஹிப்ஹாப் போன்ற வடிவம் தமிழ்ச் சூழலில் எழுச்சி பெறுகிறது. அத்தகைய இசை உருவாவதற்கான சமூகச் சூழல் இங்கு நிலவவில்லை என்றாலும், மேற்கத்தியக் கலாச்சாரத்தின் வருகை அதனைச் சாத்திய படுத்துகிறது. இதன் விளைவாகத் தான் பால் ஜேக்கப் போன்ற இசைக் கலைஞர்கள் தனியிசை முயற்சியில் இறங்குகிறார்கள். நாட்டுப்புறம் சார்ந்த மரபிசையை நவீன பெருநகரங்களில் இசைக்கும் சென்னை சங்கமம் போன்ற நிகழ்ச்சியின் தோற்றத்தில் பால் ஜேக்கப் போன்ற தனியிசை கலைஞர்கள் தாக்கம் செலுத்தி இருக்கும் செய்திகளை எல்லாம் இந்நூல் நமக்களிக்கிறது.
இந்த நூற்றாண்டின் முதல் பத்தாண்டுகளிலிருந்து இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தனியிசை முயற்சிகளை விடுபாடுகள் எதுவும் இல்லாமல் பதிவு செய்திருக்கிறது இந்த நூல். மரபையும் நவீனத்தையும் பறைசாற்றும் இசைத் துணுக்குடன் வெளியான ‘செம்மொழி கீதம்’ பற்றிய குறிப்புகள் இல்லாமல் இருந்தது ஏமாற்றம் அளிக்கும் ஒன்றாக இருந்தது.
தத்துவார்த்த உள்ளடக்கங்களோடு பாடல்களை வடிக்கும் குரங்கன், சியென்னார். அடிமைத்தனத்திற்கு எதிராகவும் தலித் மக்களின் வாழ்வியலையும் அரசியல் கலந்த இசையாக்கும் தெருக்குரல் அறிவு, The Casteless Collective, சமகால தன்மைக்கேற்ப ஆழமான உள்ளடக்கம் ஏதுவுமின்றி அன்றாடத்தின் பாடுகளை ஆங்கிலம் கலந்த ஊதாரித்தனம் மிகுந்த சொற்கலவையில் தனியிசையாக்கும் பால் டப்பா, அசல் கோலார் போன்றவர்கள் பற்றி விவரமான குறிப்புகள் இந்நூலின் தனிச் சிறப்பு என்றே நினைக்கிறேன். படிக்கும்போதே பல்வேறு பாடல்களைக் கேட்டு ரசிக்கும் வகையில் மேற்கோள்களுக்குப் பஞ்சமில்லாமல் இந்நூல் வடிவம் பெற்றுள்ளது.
தனியிசையில் இருந்து திரை இசைக்குள் நுழைந்து கோலோச்சும் பிரதீப் குமார், அந்தோணி தாசன், டென்மா, ஷான் ரோல்டன், ஹிப்ஹாப் தமிழா போன்ற கலைஞர்களின் தனியிசை முயற்சிகளையும் இந்நூல் கவனப்படுத்துகிறது.
ஈழத் தமிழர்களிடத்தில் பல்வேறு தனியிசை குழுமங்கள் இருப்பதை அண்மையில் அறியமுடிந்தது, சர்வதேச அளவில் அவர்கள் பெற்றிருக்கும் வாய்ப்பும் செல்வாக்கும் பல புதுமைகள் கலந்த தனியிசை படைக்க உந்தி இருக்கிறது. இயல்பாகவே மொழி வளத்தையும், எழுச்சியையும் இந்த தனியிசை கலைஞர்கள் கொண்டிருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய குறிப்புகள் இந்நூலில் இடம்பெறவில்லை. போலவே இசைவாணி தவிர்த்து பெண் தனியிசை கலைஞர்களின் முயற்சிகளையும் இந்நூல் கவனப்படுத்தத் தவறுகிறது.
ஆனால் இந்த நூல் ஒரு திறப்பைத் தமிழ் எழுத்துலகில் ஏற்படுத்தி இருக்கிறது. தனியிசை மீது இன்றுள்ள தலைமுறையினரிடம் பெரும் ஈர்ப்பும் வரவேற்பும் இருக்கிறது. அது குறித்த புரிதலோடு எதிர்வரும் காலங்களில் பல புதிய நூல்கள் வெளியாக இந்நூல் தொடக்கமாக இருக்கும். சென்னை சங்கமம், The Castelesss Collective போன்ற முயற்சிகளை நாம் ஆவணப்படுத்த வேண்டும். அதற்கான உந்துதலை இந்த நூல் வழங்குகிறது. நிறைவான நூலாக இருந்திருக்கலாம் என்ற ஏக்கம் ஏற்பட்டாலும் புது முயற்சியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
Comments
Post a Comment