தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்!
அண்ணல் அம்பேத்கர் மறைத்த(06.12.1956) போது, தி.மு.கழகம் அவருக்குச் செலுத்திய இரங்கலையும் வழங்கிய மரியாதையையும் முனைவர் ஜெ. பாலசுப்ரமணியம் தொகுத்த ‘தமிழகத்தில் அம்பேத்கரிய இதழ்கள்’ புத்தகத்தில் படிக்க நேர்ந்தது.
அன்றைய கழகப் பொதுச்செயலாளர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் “அரசியல் பேரறிஞரில் ஒருவரும் சிறந்த பகுத்தறிவுவாதியுமான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் திடீரென மறைவெய்திய செய்தி அறிந்து திடுக்குற்றேன்” என்று ஆழ்ந்த அனுதாபத்தை அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார். அப்போதைய கழக தலைமை நிலையமான அறிவகத்தில் இருவண்ணக் கொடி தாழப் பறக்கவிடப்பட்டிருக்கிறது.
பெரியாரிய தொண்டர்களும், திராவிடர் கழக தோழர்களும் மௌன ஊர்வலம் நடத்தித் தங்களுடைய இரங்கலைத் தெரிவித்திருக்கின்றனர். தி.மு.கழகத்தின் அதிகாரபூர்வ ஏடான ‘நம் நாடு’ இதழிலும், பெரியாரின் விடுதலை இதழிலும் முழு பக்க அளவில் பெரிய தலைப்புகளுடன் இறப்புச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஜி. சுப்பிரமணிய அய்யரால் தொடங்கப்பட்ட சுதேசமித்திரன் நாளிதழ் முகப்பு பக்கத்தில் பெட்டிச் செய்தியாக அம்பேத்கரின் படம் கூட இல்லாமல் இறப்பு செய்து வெளியிட்டுள்ளது.
இந்த தொகுப்பிலிருந்த சில கட்டுரைகளை நீலம் இதழில் அவ்வப்போது வாசித்து இருந்தாலும், ஒரு தொகுப்பாக வாசிக்க நிறைவான அனுபவமாகவே இருக்கிறது. அம்பேத்கரின் வாழ்நாளில் அவருக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டின் தலித் இயக்கங்களாலும் தலைவர்களாலும் நடத்தப்பட்ட இதழியல் முயற்சியை இந்நூல் ஆவணப்படுத்தியிருக்கிறது.
இந்த இதழ்கள் மூலம் தலித் இயக்கமும் திராவிட இயக்கமும் கொண்டிருந்த நட்பையும் முரனையும் விளங்கிக் கொள்ள முடிகிறது. பெரும்பாலான இதழ்கள் பெரியாரின் பணிகளைப் போற்றியுள்ளன, பெரியார் பற்றிய செய்திகளும் இந்த இதழ்களில் பரவலாக இடம் பெற்றுள்ளது.
1990-களுக்கு பிறகு தான் தலித்திய இயக்கம் எழுச்சி பெற்றது என்ற கூற்றை இந்த தொகுப்பு கேள்விக்குட்படுத்துகிறது. விளிம்புநிலை மக்களின் அறிவு செயல்பாடு 1960-களுக்கு முன்பே இத்தனை தீர்க்கமாகவும் காட்டமாகவும் இருந்துள்ளது தலித் இயக்கத்திற்கு இருக்கும் வரலாற்றுத் தொடர்ச்சியை நமக்கு தெரிவிக்கிறது.
திராவிட இயக்கம் மிகத் தீவிரமாக செயற்பட்ட காலத்திலேயே தலித் தரப்பிலிருந்து இதுபோன்ற பன்மைத்துவம் வாய்ந்த குரல்கள் ஒலித்துக் கொண்டு தான் இருந்துள்ளன. அம்பேத்கரின் எதிர்பாரா மறைவும், அந்த இயக்கத்தை முன்னெடுக்கத் தலைவர்களின் இன்மையும் இந்த செயல்பாடுகளை முடக்கிப் போடுகிறது.
இந்த முயற்சிகள் பின்-அம்பேத்கரிய காலகட்டத்தில் முழுதாக முடங்கியதா அல்லது ஆங்காங்கே சில இடங்களில் சிறு அளவில் உயிர்ப்புடன் இருந்ததா என்பதை அறிய இதைப் போலவே ஆழ்ந்த ஆய்வு அவசியப்படுகிறது.
எழுத்தாளர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்களின் ‘நெடுவழி விளக்குகளு’ம், ‘எழுதா கிளவி’யும் எப்படி தலித் ஆளுமைகளை ஆவணப் படுத்தியதோ, இந்த நூல் 20-ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற தலித் இதழியல் முயற்சிகளைக் குறிப்பாக அம்பேத்கரிய சார்புநிலை கொண்ட இதழியல் முயற்சிகளை ஆவணப் படுத்துகிறது. அம்பேத்கர் தொடங்கி நடத்திய இயக்கங்களும் இதழ்களும் முதல் பகுதியில் விரிவாகவே வழங்கப்பட்டிருக்கிறது.
திராவிட இயக்கத்திற்கும் தலித் இயக்கத்திற்கும் இடையே நடைபெற்ற கருத்து மோதல்களும் உரையாடலும் இன்னும் பிற ஊடாட்டங்களையும் புரிந்து கொள்ள இன்றியமையா தொகுப்பாக வெளியாகி இருக்கிறது.
Comments
Post a Comment