தமிழ் பார்ப்பனர்களின் தேவையில்லாத அச்சம்!

 





2025 ஜனவரி மாத The Caravan இதழின் கவர் ஸ்டோரி, இந்தியத் தொல்லியல் ஆய்வகம்(ASI) எப்படி இந்துத்துவ- வட இந்திய- சங் பரிவார் பக்கச் சார்பு கொண்ட ஒரு அமைப்பாக மாற்றம் அடைந்துள்ளது என்பதைப் பற்றிப் பேசுகிறது. மோடி பிறந்த ஊரான வாத்நகரில் விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தி ஒரு மாபெரும் அருங்காட்சியகத்தை அமைத்து வருகிறது ASI . இந்தியாவின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று வாத்நகர் என்பதால் அதனைக் காட்சிப்படுத்த அருங்காட்சியகம் அமைக்கப்படுவதாகக் கூறப்பட்டாலும், பாஜக அரசின் ஆதிக்கம் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையின் கழுத்தை நெருக்கி வருவதையே இது உணர்த்துகிறது.


Gyanvapi, Kamal Maula போன்ற மசூதிகள் அமைந்திருக்கும் இடங்களை மட்டும் உள்நோக்குடன் தொல்லியல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்வது, கலாச்சார முக்கியத்துவம் கொண்ட தொன்மையான இஸ்லாமிய வழிபாட்டுத் தளங்களை டால்மியாவின் Sabhyata Foundation போன்ற தனியாருக்கு வழங்கி, அங்குப் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடத்துவது, உணவகங்கள் அமைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்து மத வழிபாட்டுத் தளங்களில் இத்தகைய நிகழ்வுகள் நடைபெறுவதில்லை.


மேலும் கீழடி போன்ற வேதகால சுவடுகளற்ற திராவிட-தமிழ் பண்பாடு தொடர்பான அகழாய்வுகள் ASI மூலம் தொடர்ந்து புறக்கணிப்புக்கு உள்ளாகியும் வருகின்றன. அதில் ஆர்வம் செலுத்திச் செயல்பட்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் போன்ற தொல்லியல் அதிகாரிகளும் உள்நோக்கத்துடன் மாற்றப்படுகிறார்கள்.


ஒன்றியத்தில் இருக்கும் சார்பற்ற நிறுவனங்கள் அனைத்தும் இந்துத்துவ அரசியலுக்காக பலிகடாவாகப் பட்டு வருகின்றன. நாளை அதிகாரம் வேறொரு கைகளுக்கு மாறலாம் ஆனால் சிதைவுற்ற இது போன்ற அமைப்புகள் சரிவிலிருந்து மீளப் போவதே இல்லை. இந்திய ஒன்றியம் நம்மை நிதி பகிர்வில் மட்டும் வஞ்சிக்கவில்லை, பண்பாடு, கலாச்சாரம், அதிகார பகிர்வு என ஏகத்துறைகளிலும் வஞ்சித்துக் கொண்டு தான் இருக்கிறது.


கைவிடப்படப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் கொண்ட அகழாய்வுகளையும் தமிழ்நாட்டுத் தொல்லியல் துறை தான் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. அண்மையில் அப்படியான ஆய்வை உள்ளடக்கமாகக் கொண்டு வெளியான நூல் ‘இரும்பின் தொன்மை’.


ஆனால் அதிகார பீடத்தின் உச்சியில் அமர்ந்துகொண்டு நக்கலடிக்கும் அக்கிரகாரத்து அறிவுஜீவிகள் ‘கீழடி நிச்சயம் நகர நாகரிகம் இல்லை’ என்றும் இந்த நூல் கீழடி வியாதியின் நீட்சி என்றும் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

காலனியம் நம்மைச் சுரண்டுவதற்கு முன்பே உழைப்பையும் அறிவையும் சுரண்டி கொழுத்த பார்ப்பனிய பரம்பரையைச் சேர்ந்தவர்களிடம் பாராட்டையெல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்.

ஆனால் தங்களைத் தமிழர்களாக உருவகப்படுத்திக் கொள்பவர்கள் தமிழ் தொன்மை குறித்து வெளியாகி இருக்கும் பெருமிதத்தை ஏன் பகிர்ந்து கொள்ளத் தயக்கம் கொள்கிறார்கள்? தமிழ்ப் பண்பாட்டின் வளர்ச்சிக்கான சாத்தியங்களை இத்தனை சிறுமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லையே? தெற்காசிய வரலாறு தமிழ் நிலத்திலிருந்து எழுதப்பட வேண்டும் என்பது வட இந்திய அதிகார வர்க்கத்திற்கு அச்சமளிப்பதை புரிந்து கொள்ள முடிகிறது, தமிழ் பார்ப்பனர்கள் ஏன் துடிக்கிறார்கள்?


Comments