தமிழ் கிராபிக் நாவல்களும், திராவிட இயக்க வரலாறும்!
சி.சு செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவல், கிராபிக்(சித்திரக் கதை) வடிவம் பெற்றுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் எழுத்தாக்கத்தில் கிராஃபிக் நாவலாசிரியர் அப்புபன் ஓவியங்களோடு இந்த நாவல் நூலாக்கம் பெற்றுள்ளது. காலச்சுவடு பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
அப்புபன் என்றால் மலையாளத்தில் தாத்தா என்று அர்த்தமாம். இயற்பெயர் ஜார்ஜ் மாத்தன். அவரின் The Dystopian Times கிராபிக் தொடரை Frontline இதழில் ரசித்து படிப்பதுண்டு. எள்ளல் நிறைந்த கருத்தியலுக்குப் பஞ்சமில்லாத கலை, கலைஞர்.
வாடிவாசல் க்ராபிக் நாவலில் இடம்பெற்றுள்ளவை கருப்பு வெள்ளை ஓவியங்கள்தான் என்றாலும் சி.சு செல்லப்பாவின் எழுத்திற்கு நிகரான விறுவிறுத்தன்மையை ஓவியங்கள் கொண்டிருக்கின்றன. ஓவியங்களுக்கு எழுத்தும் எழுத்துக்கு ஓவியமும் உயிரூட்டியுள்ளது.
நாவலில் வரும் தாத்தா பாத்திரம் ஜி. நாகராஜனின் தோற்றத்தைக் கொண்டிருப்பதாகப் பட்டது. நாவலில் தொனிக்கும் சாதி, வர்க்கம் குறித்த உரையாடல்கள் கிராபிக் நாவலில் பெரிய அளவில் காட்சிப்படுத்தப்பட வில்லை. மற்றபடி சல்லிக்கட்டு விளையாட்டு மைதானத்தை உயிரோட்டத்துடன் முழுமையாகப் பிரதி ஆக்கி இருக்கிறது இந்த கிராபிக் நாவல்.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மாண்புமிகு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் 06/01/2024 மாலை இந்நாவலை வெளியிட்டிருக்கிறார். ஜெய்ப்பூர் இலக்கியத் திருவிழாவில் சலபதி நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டுப் பேசவுள்ள செய்தியை நேற்று காலை பெருமாள் முருகன் எழுதி இருந்த பதிவின் வாயிலாக அறிந்தேன். பிற இந்திய மொழிகளிலும் உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யும் திட்டம் இருப்பதாக பெ.மு எழுதி இருந்தார். பிற மொழி வாசகர்களுக்கு ஜல்லிக்கட்டு பற்றிய புரிதலை ஊட்டும் எளிதில் வாசித்துவிடக்கூடிய பயனுள்ள ஒரு கிராபிக் நாவலாக இது திகழும் என்பதில் இரண்டு கருத்தில்லை.
கிராபிக் நாவலோடு சேர்த்து பெரியளவில் வாசகர் கவனம் பெறாத மற்றொரு வரலாற்று படக்கதை தொகுப்பையும் அறிமுகப்படுத்தத்தான் இந்த பதிவு.
திராவிட இயக்கம் குறித்து வெகுஜன வாசிப்புக்கென குறிப்பிடத்தகுந்த நூல்கள் என்று கணக்கிட்டால் பெரும் பற்றாக்குறை தான் தமிழ் இலக்கிய சூழலில் நிலவுகிறது. ஆய்வு நூல்களையும், காலவரிசையில் தரவுகளை அடக்கிய ரசமற்ற வரலாற்று அப்புனைவுகளும், வெட்டுப்புலி, சாலாம்புரி, பயணம், தீராக்களம் என்று விரல்விட்டு எண்ணினாலும் ஒரு கையில் அடங்கிவிடும் புனைவுகளுமே நிமிடம் உள்ளன.
இப்படியான நிலையில் 2023 பொங்கல் தினத்தன்று தொடங்கப்பட்ட முரசொலி பாசறை பக்கத்தில் திராவிட இயக்க வரலாறு ‘திராவிடத்தால் வாழ்கிறோம்’ என்ற தலைப்பில் நாள்தோறும் படக்கதையாக வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு துணை முதலமைச்சரின் முன்னெடுப்பில் திமுக இளைஞர் அணி சார்பாக தொடங்கப்பட்ட பக்கம் இது. அண்ணன் கோவி.லெனின் அவர்களின் எழுத்தில் ஓவியர் சொக்கலிங்கம் அவர்களின் கைவண்ணத்தில் வெளிவரும் இந்த தொடர் தொகுக்கப்பட்டு இதுவரை மூன்று பாகங்களாக வெளியிடப்பட்டிருக்கிறது.
சிறுவர்கள் மட்டுமின்றி அரசியல் நூல்களைக் கண்டு மிரளும் இளம் தலைமுறையினரும் வாசித்துப் பயனடையும் வகையிலேயே இருக்கிறது இந்த தொகுப்பு.
நீதிக் கட்சியில் தொடங்கி திமு கழகம் ஆட்சியைப் பிடித்த 1967 வரையிலான ஓவியங்கள் இதுவரை மூன்று பாகங்களாகத் தொகுப்பாகியுள்ளன. ஆழமும் விரிவும் கொண்ட ஒரு பேரியக்கத்தின் வரலாறு ஓவிய வடிவில் பதிவாகி இருக்கிறது. மற்றவை முரசொலி நாளிதழின் கடைசி பக்கத்தில் அன்றாடம் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
கண்ணைக் கவரும் வண்ணங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டு, சுவாரசியமான நடையில், வரலாற்றுத் தெளிவுடன் ஆக்கம் பெற்றிருக்கும் இந்த மூன்று பாகங்களும் சென்னை புத்தக காட்சி அரங்கு எண்: 390-ல் கிடைக்கிறது. வாடிவாசல் கிராபிக் நாவலோடு இதையும் அன்பர்கள் வாங்கி வாசிக்கலாம். திராவிட இயக்க ஆர்வலர்களுக்குப் படிக்கக் கொடுக்கலாம்.
பத்திரிகைகள் வாயிலாகத் தேர்தல் அறிக்கைகளை ஓவியமாகத் தீட்டி சாமானிய மக்களுக்கு அறிவூட்டிய இயக்கம், இன்றைக்கு அதன் வரலாற்றை ஓவிய வடிவில் தீட்டி பொது மக்களுக்கு வழங்கி வருகிறது.
தமிழ்நாடு அரசியலில் மட்டுமல்ல இந்திய ஒன்றிய அரசியலிலும் இது ஒரு புது முயற்சி. போற்றத்தக்க முயற்சி.
Comments
Post a Comment