இஸ்லாமும் இன்பத் தமிழும்!!
இஸ்லாமும் இன்பத் தமிழும்!!
பெருநாள் நிகழ்வை தொடர்ந்து அதையொட்டிய சில சிந்தனைகள் மனதில் அலையாடி கொண்டிருந்தன. கடந்த வாரம் பாசறை படிப்பறை பகுதிக்காக ‘Dravidian Sahibs and Brahmin Maulanas: The Politics of the Muslims of Tamil Nadu, 1930-1967’ என்ற நூலை படித்து கொண்டிருந்தேன், அதன் விளைவாக தோன்றிய எண்ணமென்று நினைக்கிறேன்.
—------
திமு கழகம் தொடங்கப்பட்ட 1949-ஆம் ஆண்டில் 110 பேரை கொண்ட பொதுக்குழுவில் எம்.எஸ்.எம் மொய்தீன், ஹஜாபீர் என்ற இரண்டு இஸ்லாமியர்கள் இடம்பெற்றிருந்தனர். பிரிவினையின் காரணமாக இஸ்லாமியர்கள் இந்திய தேசியவாதிகளாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்த போதும், திராவிட நாடு கேட்டு கழகத்தில் பயணித்தனர். காரணம் திராவிட இயக்கம் கட்டமைத்த திராவிட-தமிழர் என்ற அடையாளம்.
1957-ஆம் ஆண்டு தி.மு.கழகத்தின் உதவியுடன் அப்துல் வஹாப் ஜானி சென்னை மாகாண மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே போல் 1947 முதல் 1962 வரையிலான தமிழ்நாட்டு காங்கிரஸ் ஆட்சியில் ஒரு இஸ்லாமிய பிரதிநிதிக்கு கூட அமைச்சர் பொறுப்பு வழங்கப்படாமல் இருந்த நிலையில், திமுகவும் அண்ணாவும் இதனை சுட்டிக்காட்டி அரசியலாக்கிய பின்னர் தான் கடையநல்லூர் மஜீதுக்கு அமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தது.
பார்ப்பனர் அல்லாதார்-திராவிடர்-தமிழர் என்று திராவிட இயக்கம் முன்னிறுத்திய அனைத்து விதமான அடையாளங்களும் சிறுபான்மையினரையும் உள்ளடக்கியதாகவே இருந்தது.
1963ல் 16-வது சட்ட திருத்தமான, ‘The Anti-DMK Ammendment’ என்று விளிக்கப்பட்ட ‘பிரிவினை தடை சட்டம்’ கொண்டுவரப்பட்டது, திராவிட நாடு என்ற இலட்சியத்தை கைவிட காரணமாக அமைந்தது. பேரறிஞர் அண்ணா, எண்ணித் துணிந்த பிறகு, திராவிட நாடு மாநில சுயாட்சியாக மாற்றம் பெற்றது.
1965 மொழிப்போரில் ஏராளமான இஸ்லாமியர்கள் கைதாகி சிறைசென்றனர். திராவிட நாடு பிரிவினையை கைவிட்டதன் விளைவாக 1967-இல் இந்தியன் முஸ்லீம் லீக் -திமுக இடையிலான கூட்டணி ஏற்பட்டது. மூன்றிடங்களை கேட்டு பெற்று மூன்றிலும் வென்றது முஸ்லீம் லீக். ஒரு மக்களவை உறுப்பினரும் நாடாளுமன்றம் சென்றார். 1972-இல் இது 7-க்கு 6-ஆனது. இந்த வெற்றி கூட்டணி இன்று வரை தொடர்வதற்கு காரணம் தமிழும்-திராவிடமும் தான்.
1967 பேரறிஞர் அண்ணா அமைத்த அமைச்சரவையில் சாதிக் பாட்சா பொது சுகாதாரத் துறை அமைச்சராக இடம்பெற்றார். அண்ணா மறைந்த பிறகு கலைஞர் அமைச்சரவையிலும் அங்கம் வகித்தார். எம்.ஜி.ஆர் பிரிந்தபோதும், நெடுஞ்செழியன் பிரிந்தபோதும், வை.கோபால்சாமி பிளவை ஏற்படுத்த முயன்றபோதும் சாதிக் பாட்சா கலைஞர் உடன் நின்றார். சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான அண்ணா மேம்பாலம் சாதிக் பாட்சா தலைமையில் தான் திறக்கப்பட்டது.
நெடுஞ்செழியன் மக்கள் திமுக தொடங்கிய போது, பேராசிரியர் வகித்த பொருளாளர் பொறுப்பை சாதிக் பாட்சா ஏற்றார். அவர் மறையும் வரை பொறுப்புடன் பொருளாளராக செயல்பட்டார். இன்று வரை கழக வரலாற்றில் அதிக காலம் பொருளாளராக பணியாற்றிய பெருமை பாட்சாவையே சேரும். அதே போல் கச்சேரிக்காரராக அல்லாமல் கட்சிக்காராகவே கடைசிவரை அறியப்பட்டவர் இசை முரசு நாகூர் ஹனிபா.
2025-இல் இந்துத்துவ அரசியல் உச்சத்தில் இருக்கும் காலகட்டத்தில் நின்றுகொண்டு இதனை எல்லாம் திரும்பிப்பார்க்கும்போது, சிலிர்க்கிறது. அதே நேரம் சிந்திக்கவும் தூண்டுகிறது.
வரலாற்றாய்வாளர் கொம்பை அன்வர் எழுதிய ஒரு கட்டுரையை இப்படி நிறைவு செய்திருப்பார், //என்னிடம் யாரேனும் முஸ்லிம்களுக்கு திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்டால், நான் சொல்லும் பதில் இதுதான். "திராவிட அரசியல் என்பது தமிழ் அரசியல். அது ஒருவகையில் நம் தாய் நிலம். அறுவடையைப் பற்றிக் கேட்கும் முன், தயவுசெய்து நிலத்தில் நம்முடைய இன்றைய பங்களிப்பு என்ன என்று யோசியுங்கள்!”//
‘சமுதாய சேவைக்கு முஸ்லீம் லீக், அரசியல் சேவைக்கு திமுக’ என்று நாகூர் ஹனிபா காலம் தொட்டே இஸ்லாமிய மக்களிடம் இருந்த இயல்பு இன்றுள்ள இஸ்லாமிய இளம் தலைமுறையினரிடம் இருக்கிறதா? என்ற கேள்வி என்னை துளைத்து கொண்டே இருக்கிறது.
இந்நூலை படிக்க கொடுத்த Abdul Raafik Ibn Bagurudeen -க்கும் அண்ணா மேம்பால திறப்பு விழா கல்வெட்டை படமெடுத்து அனுப்பிய Suriya Krishnamoorthy -க்கும் இந்நேரத்தில் அன்பும் நன்றியும்! 🙏😍
#DMK
Comments
Post a Comment