Flashback
தினமும் மேற்கொள்ளும் பல்வேறு பணிகளுள், மனதிற்கு நிறைவை அளிப்பது முரசொலி பாசறையில் வெளியாகும் Flashback பகுதிதான்.
801 நாட்களாக வெளியாகி கொண்டிருக்கும் அப்பகுதியில், நான் 750 நாட்களாவது கட்சிக்காரர்களுடன் பேசும் வாய்ப்பை பெற்றிருப்பேன். அவர்கள் வரலாற்றை விவரிக்கும் போது நம்மை அறியாமலே உடல் சிலிர்க்கும்.
அவர்கள் அனுப்பும் அந்த ஒரு புகைப்படத்தை பொக்கிஷம் போல் பாதுகாத்து வைத்திருந்த கதைகளை பெருமையுடன் பகிர்வோர் பலர். முரசொலியில் வெளியானதும் அலைபேசியில் அழைத்து நன்றி தெரிவித்து நெகிழ செய்தோரும் இருக்கிறார்கள்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, பேரறிஞர் அண்ணாவின் ஒரு சாலை மாணாக்கரான டி.எம். கிருஷ்ணசாமி பிள்ளையின் கொள்ளு பெயரன் இந்த படத்தை பகிர்ந்திருந்தார். படம் எடுக்கப்பட்ட நாள் குறித்த விவரம் பெரியளவில் இல்லை என்றாலும், படத்தில் இருப்பவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் இருக்கும் சின்னத்தம்பி பிள்ளை அவர்கள் தான் பேரறிஞர் அண்ணாவிடம் ‘நீ (3 வருட படிப்பான) பி.ஏ. ஆனர்ஸ் சேர்ந்து படி, நான் உதவுகிறேன்' என்றிருக்கிறார்.
இப்படத்தில் மேலே இருந்து முதல் வரிசையில் மூன்றாவது ஆளாக பேரறிஞர் அண்ணா. அப்போது 21 வயது இளைஞர். மெலிந்த தேகம், ஆனால் பிரமாண்ட கனவு அவரை ஆட்கொண்டிருந்திருக்கும்.
‘மாணவர்கள் அரசியல் அறிவு நிறைய உடையவர்களாகத் திகழ வேண்டும். ஆனால் அரசியல் கட்சிகளோடு தொடர்பு கொண்டு தீவிரமாகப் பணி புரிதல் கூடாது!’ என்ற கொள்கையில் உறுதியாக இருந்த காரணத்தால் அவர் அரசியல் இயக்கங்களுடன் நேரடி தொடர்பு எதையும் கொண்டிருக்க வாய்ப்பில்லை. 3-வது ஆண்டு தான் ஆங்கில சொற்பொழிவு போட்டியொன்றில் கலந்து கொள்ள சென்றிருக்கிறார்.
இந்த படம் எடுக்கப்பட்டதிலிருந்து மூன்றாண்டு கழித்து அதாவது 1934-ஆம் ஆண்டு, ஆனந்த விகடன் பத்திரிகையில் ‘சௌமியன்’ என்னும் புனைப் பெயரில் அண்ணா எழுதிய சிறுகதை வெளியாகி அதற்குப் பரிசாக ரூ. 20-ம் கிடைத்த இருக்கிறது.
இதன் பிறகு தான் நீதிக்கட்சி தொடர்பு, இந்தி எதிர்ப்பு போராட்டம், பெரியாருடனான சந்திப்பு என இலட்சியங்கள் பூர்த்தியடைகின்றன. அவர் இயங்கிய இயக்கத்தில் இன்றைக்கு நாமும் இயங்குகிறோம் என்ற பெருமையை விட வேறென்ன ஊக்கம் வேண்டும் அன்றாடங்களை அலுப்பின்றி கடக்க.
#Flashback Murasoli Paasarai
Comments
Post a Comment