Gracias Lukita!

  





Real Madrid-ன் அலங்கரிக்கப்பட்ட நடுகள ஆட்டக்காரர் Luka Modric ரியல் மாட்ரிட் உடனான தனது பிரிவை அறிவித்துள்ளார். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக தொடர்ந்து பந்தம் நிறைவுறுகிறது. 


அடை மழை பெய்து ஓய்ந்த பின் தூறும் சாரலில் நனைந்தவர் போல் ஆடுகளத்தின் இரண்டு கோல் கம்பிகளுக்கும் இடையே கால்பந்தை கொண்டு ஜாலம் நிரம்பிய நாட்டியத்தை நிகழ்த்தும் Modric-ஐ இனி அடர் வெள்ளை உடையில் தரிசிக்க முடியாது.


 Zidane மாட்ரிட் அணியின் மேலாளராக கட்டமைத்த நடுகள மும்மூர்த்திகளின்(Kroos, Modric, Casemiro) கடைசி கன்னி எதிர்கால ஆட்டக்காரர்களை தயார்படுத்திவிட்டு, வெற்றிடம் ஏதுமின்றி விலகுகிறது. Real Madrid Club-ன் Preident கட்டமைக்க விரும்பிய Second Galácticos Era-வும் இத்துடன் அஸ்தமிக்கிறது. 


தற்போது இருக்கும் இளம் பட்டாளம் இந்த கிளப்பின் எதிர்கால கனவுகளை நோக்கி பயணப்பட அனைத்து ஆற்றலையும் பெற்றிருக்கின்றன என்ற மனநிறைவோடு Modric தன்னுடைய விலகலை  அறிவித்திருப்பார் என்று தோன்றுகிறது. 


Real Madrid-ன் கால்பந்தாட்டம் அதிரடியான திருப்புமுனைகளுக்கும் எதிர்பாரா எழுச்சிக்கும் பெயர்போனது, அப்படி இந்த அணிக்கு நிகழ்ந்த மாயாஜால தருணங்கள் அனைத்திலும் தன்னுடைய சுவடை பதித்திருந்தவர் Modric. Athletico Madrid-க்கு எதிராக 92:48 வது மணித்துளியில் Ramos அடித்த கோல் Modric-ன் பாதங்களில் இருந்து நிகழ்த்தது. அது போல எண்ணற்ற தருணங்கள்.  


Bale-Benzema-Ronaldo என்ற முனகள ஆட்டக்காரர்களின் கோல் தாகம், Modric-ன் கால்களின் மூலமே தணிக்கப்பட்டன. ஆட்டத்தின் போக்கை வேகப்படுத்தவும், மந்தமாக்கவும் அந்த கால்களுக்கு தெரியும். துல்லியமாக பந்தை கடத்தவும், பகிரவும், வாய்ப்பை உருவாக்கவும் அந்த கால்கள் பழகி இருந்தன. களைப்பை துளி அளவு கூட தெரிவிக்காத முகம் அவருடையது. 


No.10 என்ற பெருமைக்குரிய எண்ணை அணிந்து ஆடும் வீரரும், அவர் சார்ந்த அணியும் ஒருவருக்கொருவர் பெயரையும் புகழையும் பெற்றுத்தருவர். விளையாட்டு துறையில் இது வருணிக்க இயலாத புரிந்துணர்வு. Modric-ம் Real Madrid-க்கு அப்படியான வீரராகவே மிளிர்ந்தார். Madrid-க்காக விளையாடிய நடுகள வீரர்களில் Zidane-க்கு பிறகு கால்பந்தாட்டத்தின் உயரிய தனிநபர் விருதான Ballon d'Or-ஐ வென்றது, 2012-ல் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது Modric-ஐ  சபித்த வாய்களுக்கு தக்க பதிலை நிச்சயம் அளித்திருக்கும். அவருடன் ஆடிய Kroos, Casemiro கூட இத்தகைய தனிநபர் புகழை எட்டவில்லை. 


Madrid-ன் First Captain-ஆக இந்தாண்டு UCL கோப்பையை அவர் பெற்று தருவார் என்ற எதிர்பார்ப்பு என் போன்ற ரசிகர்களுக்கு அதீதமாகவே இருந்தது, ஆனால் அது ஈடேறவில்லை. எல்லா நட்சத்திரங்களும் ஒளி குன்றி மங்கி மறையவேண்டும் என்று அவசியமில்லை, சிலவை பிரகாசித்து கொண்டிருக்கும் போதே மறையலாம் என்பதை தான் Modric-ன் பிரிவு தெரிவிப்பதாக நினைக்கிறேன். அவரின்றி சில காலம் Madrid பரிதவிக்கலாம், ஆனால் அதிலிருந்து மீள பழக்கப்பட்ட கிளப் இது. தற்காலிக துயரை ஒரு ரசிகனாக பரிந்துகொள்வதே இந்த பிரிவை கடக்கும் வழி!  


Gracias Lukita! 


Comments