இந்த வார பாசறை படிப்பறை பத்திக்காக ஒரு நூலை வாசித்து கொண்டிருந்தபோது அதில் தலைவர் கலைஞர் இந்நூலாசிரியருக்கு எழுதிய ஒரு கடிதத்தின் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இரு முனையங்களுக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரும் காமராஜர் பெயரும் சூட்ட பெரும் முயற்சி எடுக்கப்பட்ட நேரத்தில் எழுதிய கடிதம் இது.

ஒரு விமான நிலையத்திற்கு எதற்கு இரண்டு பெயர் என்று கேட்கப்பட்டபோது, ‘கடவுளுக்கு பல பெயர்கள் இருக்கும்போது விமான நிலையத்திற்கு இருக்க கூடாதா?’ என்று தனக்கே உரிய பாணியில் பதிலளித்தார் கலைஞர்.

அப்போது பிரதமராக இருந்த திரு.வி.பி.சிங் இதற்கு ஆதரவு அளித்தபின் விமான நிலையத்திற்கு பெயர்கள் சூட்டப்பட்டன. நிற்க.

இந்த கடிதத்தில் கவனிக்க வேண்டிய பகுதி, கலைஞரின் கையொப்பம்.

திராவிடநாடு படத்தை முடிவில் கொண்ட மு.கருணாநிதி, இறுதி காலத்தில் அவர் இட்ட மு.க, என இரண்டுமில்லாத. ‘க’ என்ற ஒற்றை எழுத்தை மட்டும் கொண்ட ஒன்று.






ஒருவேளை அந்தரங்கமான கடிதங்களுக்கு மட்டும் இப்படியான கையொப்பத்தை அவர் கடைபிடித்தாரா? அல்லது என்ன காரணமாக இருக்கும், இதே போன்ற வேறு கடிதங்கள் இருந்தால் அன்பர்கள் தெரியப்படுத்துங்கள்.





கொஞ்சம் குமுறல் : இன்றைக்கு சென்னை விமான நிலையம் என்ற பெயர்தான் நிலைத்திருக்கிறதே தவிர அண்ணாவும் காணோம் காமராஜரும் காணோம். டி.நகரும், கே.கே நகரும், மவுண்ட் ரோடும், ஜெமினி மேம்பாலமும் பழகி போன டொமெஸ்டிக் மனிதர்களிடம் வரலாற்று உணர்வை எல்லாம் எதிர்பார்க்க முடியாதுதான்!

Comments