End of Political Democracy? (Some Anxieties)
இந்தியாவின் அரசியல் ஜனநாயகம்(Political Democracy) ஒரு முட்டுச்சந்தை சந்திக்க ஆயத்தமாகி கொண்டிருக்கிறது கண்கூடாக தெரிகிறது.
வாக்காளர்களின் வாக்குரிமையை பதம் பார்க்க போகும் Special Intensive Revision (SIR) குறித்த கவர் ஸ்டோரி இம்மாத The Caravan இதழில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவின் பின்தங்கிய மாநிலங்களுள் ஒன்றான பீகாரில் செயல்படுத்தப்பட்டுவரும் இந்த திருத்தத்தில் இருக்கும் சிக்கல்கள்-அபத்தங்கள்-பிரச்சனைகள் ஆகியவற்றை கள ஆய்வின் அடிப்படையில் பட்டியலிடுகிறது இந்த கட்டுரை. இந்திய தேர்தல் ஆணையத்தால் இத்திருத்தம் அறிமுகம் செய்யப்பட்ட போது எழுந்த சந்தேகங்கள் தற்போது மேலும் வலுப்பெற்றுள்ளன.
ஆணையம் பட்டியலிட்ட 11 ஆவணங்களுமே இல்லாதவர்கள்- இந்த திருத்தம் பற்றி விழிப்புணர்வு அற்றவர்கள்- இத்திருத்தத்தை கண்டு அஞ்சுபவர்கள்- சோம்பலுடன் இத்திருத்தத்தை செயல்படுத்த சலித்து கொள்ளும் அரசு ஊழியர்கள்- தெளிவற்ற செயற்பாட்டாளர்கள் என அனைத்துமே கால் வேக்காடாக இருக்கிறது.
வெளியேற்றப்பட்ட 65 லட்சம் வாக்காளர்கள் அடங்கிய பட்டியலையும் தேர்தல் ஆணையம் உரிய காரணத்துடன் வெளியிடவேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்பளித்தலும், இத்திருத்தம் செயல்படுத்தப்பட்ட விதமே முறையற்ற ஒன்றாக இருந்துள்ளது என்பதை இக்கட்டுரை புலப்படுத்துகிறது.
மறுபுறம் இன்றையதினம் ஒன்றிய உள்துறை அமைச்சரால் மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 130-வது அரசமைப்பு திருத்த வரைவு, மக்கள் பிரதிநிதிகளால் அமைக்கப்படும் அரசின் இறையாண்மையை கேள்விக்குட்படுத்துகிறது. ஆளுநர் போன்ற எடுபிடி பதவிகளின் அதிகாரத்தை மேலும் கூட்ட வழிவகை செய்கிறது.
மக்கள், மாநில அரசுகளுக்கு வழங்கி இருக்கும் இறையாண்மையை சிதைத்து போடும் இந்த திருத்த வரைவு சட்டமானால், அது இந்திய அரசமைப்பு சட்டத்தை சவக்குழியில் தள்ளி ஆணி அரைவதற்கு நிகரான ஒன்றாக கருதப்படும்.
இன்னொருபுறம் தொண்டர்களை உயிரோட்டமாக கொண்ட வெகுஜன அரசியல் கட்சிகள் எவ்வித நிபுணத்துவமும் அற்ற அரசியல் ஆலோசகர்களை(Political Consultants & Technocrats) சார்ந்து இயங்க தொடங்கி இருப்பது தேர்தல் என்ற நடைமுறையின் மீதே நம்பிக்கையிழக்க செய்கிறது.
தேர்தலில் வாக்காளர்களை சக பங்கேற்பாளர்களாக(Stake-Holders) கருதாமல் வெறும் பார்வையாளர்களாக(Spectators) அணுகும் போக்கு கதையாடல்கள் வழி கட்டமைக்கப்படுகிறது. மெய்யான பிரச்சனைகளை முன்னிலை படுத்தாமல், அன்றாட கதையாடல்கள் மீது கவனம் குவிக்க இந்த போக்கு வழிவகுக்கிறது. தேர்தல் என்பது சினிமாவோ நாடகமோ கிடையாது என்பதையும் அது மக்கள் அவரவர் அபிலாசைகளை வெளிப்படுத்தும் அதிகாரத்தை தீர்மானிக்கும் மையம் என்பதை அரசியல் ஆர்வலர்கள் விளங்கி கொள்ள வேண்டும்.
வாக்காளர்-தேர்தல் ஆணையம்- மக்கள் பிரதிநிதிகள் - அரசியல் கட்சிகள் என ஒன்றோடொன்று பிண்ணி பிணைந்துள்ள கன்னி கொஞ்சம் கொஞ்சமாக அறுபட தொடங்கியிருக்கும் இத்தருணத்தில் அரசியல் ஜனநாயகம் குறித்து கவலை கொள்ள வேண்டிய பொறுப்பு வாக்காளர்களாகிய நம் அனைவருக்கும் உண்டு!
Comments
Post a Comment