ராபின்சன் பூங்கா கூட்டம்!
கொட்டும் மழையில் கழக முப்பெரும் விழா கரூரில் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. வழக்கமாக வாசிக்கப்படும் விருதாளர் குறிப்புகள் இம்முறை நவீன படுத்தப்பட்டு காணொளிகளாக ஒளிபரப்ப பட்டிருக்கின்றன. இந்தியாவில் வேறெந்த அரசியல் இயக்கமும் ஆண்டுதோறும் இத்தனை நேர்த்தியுடன் விழா எடுத்திருப்பார்களா என்று தெரியவில்லை.
இப்படி நெறிமுறை பிசகாத அமைப்பும் அதை உறுதியுடன் கடைபிடிக்கும் உடன்பிறப்புகளும் தான் இந்த இயக்கத்தின் முதுகெலும்புகள்.
இந்நேரத்தில் ஒரு வரலாற்று குறிப்பை தெளிவு படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஐயா க. திருநாவுக்கரசு போன்றவர்கள் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டி வந்தாலும் தொடர்ந்து தவறிழைக்கப்படுவது வருத்தமளிக்கிறது.
1949-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட தேதிகள் பல்வேறு இடங்களில் பலவாறாக பயன்படுத்தப்படுகின்றன. SouthFirst-ல் மூன்று தினங்களுக்கு முன் வெளியான ஒரு ஆங்கில கட்டுரை Spetember 16 என்றது, பலர் ராபின்சன் பூங்கா கூட்டம் செப்டம்பர் 17 மாலை நடைபெற்றதாக கருதி வருகிறார்கள்.
ஆனால் பேரறிஞர் அண்ணாவை ஆசிரியராக கொண்டு வெளியான ‘மாலை மணி’ நாளிதழை புரட்டியபோது சில செய்திகளை கவனிக்க முடிந்தது, 12/09/1949 & 13/09/1949 தேதியிட்ட நாளிதழ்கள், திராவிடர் கழகத் தோழர்களின் எதிர்கால வேலைத் திட்ட அமைப்புக்கான ஆலோசனைக் கூட்டம், 17/09/1949 சனிக்கிழமை காலை 10-மணிக்கு, சென்னை பவழக்காரத் தெரு, 7-ம் எண் இல்லத்தில் நடைபெறும் என்றும், பெரியார் போக்கினைக் கண்டித்துக் கருத்துரை வழங்கி யுள்ள, திராவிடர் கழக மத்ய நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் அனைவரும் கூடிக் கலந்து பேசி, எதிர்கால வேலத்திட்டம் பற்றி முடிவு செய்வர் என்றும் பேரறிஞர் அண்ணா பெயரில்(பொதுச் செயலாளர்) பொறுப்பு குறிப்பிடப்படாமலே வெளியாகி இருந்தது.
12/09/1949 அன்று வெளியான மாலை மணியில் திராவிடத்தின் எதிர்கால வேலைத்திட்டம் பற்றி திராவிடர் இயக்கப் பொதுக்கூட்டம், 18/09/1949, ஞாயிறு மாலை 4-மணிக்கு பெத்தாம்பாளையம் பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயபுரம் ராபின்ஸன் பார்க்கில் நடைபெறும் என்றும் அதில் பேசும் 28 தோழர்களின் பெயர் கொண்ட பட்டியல் ஒன்று அமைப்பாளர் K. கோவிந்தசாமி அவர்கள் பெயரில் வெளியாகி இருந்தது. கெடு வாய்ப்பாக 17/09 & 18/09 ஆகிய தேதிகளில் வெளியான மாலைமணி இதழ்களின் தணிக்கை செய்யப்படாத வடிவம் கிடைக்கவில்லை. எதிர்காலத்தில் கிடைத்தால் சில தெளிவுகளை எட்ட வசதியாக இருக்கும். The Hindu ஆங்கில இதழ், திமுக உருவான தினத்தை தெளிவு படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் 17/09/1949 அன்று குடந்தை பெரியார் கே.கே. நீலமேகம் தலைமையில் சென்னை பவழக்காரத் தெரு, 7-ம் எண் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பை தொடங்குவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. உள்ளறையில் கூடிய நிர்வாக உறுப்பினர்கள் பெரியாரின் மீது நம்பிக்கையில்லை என்ற தீர்மானத்தை நிறைவேற்றித் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து வைத்துள்ளனர். கட்சியை நடத்த தற்காலிகமாக சுமார் 120 பேர் கொண்ட பொதுக்குழுவிலிருந்து அமைப்புக்குழு, பிரச்சாரக்குழு, அமைப்புத் திட்டக்குழு, நிதிக்குழு இவை நிறுவப்பட்டுள்ளது. அதை பற்றி தோழர்களுக்கு தெரிவிப்பதற்கான பொதுக்கூட்டம் ஒன்று அதற்கடுத்த நாள் மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அன்று காலையிலே (18.9.1949) துணைக் குழுக்களின் கூட்டம் நடைபெற்று ஒவ்வொரு குழுவும் அதனதன் வேலைகளை ஒழுங்குபடுத்தித் திட்டங்கள் தயாரித்துக் கொண்டனர் . அன்று மாலை ராபின்சன் பார்க் மைதானத்தில் மாலை நான்கு மணிக்கே லட்சக்கணக்கில் ஜனங்கள் குவிந்திருந்தனர். மேடையில் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் பல ஜில்லாத் தலைவர்கள் பலரும் அமர்ந்திருந்தனர். 6 மணிக்கு தொடங்கிய மழை தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது, அண்ணா 6 மணிக்கு பேசத் தொடங்கி 7 மணி வரை பேசி இருக்கிறார். முன்னேற்ற கழகம் தொடங்கப் படுவதற்கான தெளிவான காரணங்களை சுட்டிக்காட்டி உரையாற்றி இருக்கிறார். எதிர்காலம் பற்றி கவலையில் தவித்த தொண்டர்களுக்கு இக்கூட்டம் தெளிவை வழங்கியது. புது அமைப்பில் பணியாற்ற அவர்களை தயார்படுத்தியது. பேரறிஞர் அண்ணாவின் பேச்சு இவற்றை சாத்திய படுத்தியது. ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழையில் தி.மு.கழகத்தின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்ற நாள் இன்று! P.S: இது தொடர்பாக கூடுதல் விவரம் தெரிந்தவர்கள் பகிரவும்! #DMK #முப்பெரும்விழா2025
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment