திருச்செங்கோடு வீழ்ந்தது திருப்பரங்குன்றம் வென்றது! Note on Kamaraj
அண்மையில் வெளியான ‘The Dravidian Pathway’ என்ற ஆய்வு நூல் திமுக-பெரியார்-காமராஜர் ஆகியிருக்கு இடையில் நிலவிய சில முக்கியமான கண்ணிகளை புலப்படுத்தியது.
1954 தேர்தலில் குடியாத்தம் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்ட போது அவரை பெரியாரும் ஆதரித்தார் தி.மு.கழகமும் ஆதரித்தது. காமராசருக்கு ஆதரவளிக்காமல் இருப்பது ராஜாஜிக்கான ஆதரவாக கருதப்படும் என்று அண்ணா கருதியிருக்கிறார். அரசியலில் தக்க நேரத்தில் முடிவெடுக்க வேண்டியது அவசியமானது.
இந்த தேர்தல் வெற்றிக்கு பிறகு தான் ‘பச்சை தமிழர்’ என்று காமராசரை விளித்தார் தந்தை பெரியார். திருச்செங்கோடு வீழ்ந்தது திருப்பரங்குன்றம் வென்றது என்று எழுதினார் அண்ணா. கல்வித்திட்ட எதிர்ப்புக் காலத்திலும், தட்சிணப் பிரதேச எதிர்ப்புக் காலத்திலும், காமராஜர் கரத்தைப் பலப்படுத்தியவர்கள் பெரியாரும் அண்ணாவும்.
1961-ஆம் ஆண்டு திருச்சியில் ‘பெரியார் நகரை’ திறந்து வைத்து உரையாற்றினார் காமராசர். பெரியாரின் ஆதரவு தான் காமராசர்-பெரியார் இடையிலான உறவை அணுக்கமான ஒன்றாக தக்கவைத்துள்ளது.
1967 தேர்தலில் மாணவ தலைவர் சீனிவாசன் காமராசரை வீழ்த்தியது இன்றளவும் பெரிய அளவில் பேசப்படுகிறது. சீனிவாசன் நிலவுடைமை கொண்ட நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். அந்நாளைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி நாயுடுவின் உறவுக்காரர். அவர் வெற்றிக்கு இரண்டு காரணங்களை இந்நூலில் குறிப்பிடுகிறார், ஒன்று அப்பகுதியை சேர்ந்த நாடார் சமூக மக்கள் காமராசர் மீதான அதிருப்தியினால் திமுக ஆதரவு மனநிலையில் இருந்தனர்.
இரண்டு, இந்தி எதிர்ப்பின் விளைவாக தமிழ்நாடு முழுவதும் உணர்வெழுச்சியுடன் இருந்த மாணவர்கள் விருதுநகர் தொகுதியில் தங்கி பிரச்சாரம் மேற்கொண்டனர். ஆனால் சீனிவாசனை முக்கியமான ஒருவராக பேரறிஞர் அண்ணா கருதவில்லை. அவரது வெற்றி அனைவருக்குமே மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.
1971, 1989 தேர்தல்களிலும் சீனிவாசன் வென்றார். சில காலம் துணை சபாநாயகராகவும் செயல்பட்டார். ஒருமுறை கூட அவர் அமைச்சராக இருந்ததில்லை. கெடுவாய்ப்பாக மறையும்போது அஇஅதிமுகவில் இருந்திருக்கிறார் . இன்றைக்கு அவரது முகம் கூட பலருக்கும் நினைவில் இருக்க வாய்ப்பில்லை. Giant Killers பலரது நிலை வரலாற்றல் இப்படி தான் எஞ்சி இருக்கிறது.
காமராசரை தோற்கடித்த கட்சி என்று தூற்றுபவர்கள், அவரை முதன்முறை சட்டமன்றம் அனுப்ப காரணமாக இருந்த கட்சியும் திமுக தான் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
தற்செயலாக இன்றைக்கு விருதுநகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பெயரும் சீனிவாசன். அவரும் திமுகவை சேர்ந்தவர்.
அவரது ஆட்சி-அரசியல் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தாலும், காமராசர் நினைவு நாளில் இதை நினைவுகூர எண்ணினேன்.
#Kamaraj #Anna #DMK #Periyar
Comments
Post a Comment