யாரும் நடுநிலையாளராக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது!

   



நக்கீரன் வெளியிட்ட சின்ன குத்தூசியின் புதையல் கட்டுரை தொகுப்பின் முதல் பாகத்தை புரட்டி கொண்டிருந்தேன். காலச்சுவடு கண்ணனும், மனுஷ்யபுத்திரனும் இணைந்து மேற்கொண்ட சின்ன குத்தூசியின் முதல்  நேர்காணலை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ‘யாரும் நடுநிலையாளராக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது’ என்று தலைப்பிடப்பட்ட  அதில் பெரியாருடன் ஏற்பட்ட தொடர்பு முதல் கலைஞருடன் ஏற்பட்ட முரணால் முரசொலியிலிருந்து விலகியது வரை பல சுவாரசியமான அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார். 2 ஆண்டுகளுக்கு முன் சலபதி இந்த நேர்காணலை குறிப்பிட்டு கவனிக்க சொன்னது நினைவுக்கு வந்தது. 

திராவிட இயக்கத்திற்காக அறிவு தளத்தில் களமாடும் அன்பர்கள் நினைவில் கொள்ள வேண்டிய சில வரிகளை சின்ன குத்தூசி இதில் இயல்பாக அவருக்கே உரிய பாணியில் உதிர்த்திருந்தார், “எங்கே இருந்து எழுதினாலும் திராவிடர் இயக்கக் கொள்கைகளை ஆதரித்தே எழுதுவேன்; தி.மு.கழக அனுதாபி என்ற முத்திரையோடுதான் எழுதுவேன். சமூக நீதிக் கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே எழுதுவேன். இந்த ஒரு நிரந்தர நிலையை மட்டுமே எனது ஒரே பெருமையாக கருதுகிறேன்!”  இந்த பிடிவாதமும், உறுதியும்தான் நம் எழுத்துக்கான அடிப்படை பண்புகளாக வரித்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன். நிற்க.   

------



நவம்பர் மாத காலச்சவடு இதழில் வெளியான சாகித்ய அகாதெமி விருதுபெற்ற ஒரு எழுத்தாளரின் நேர்காணல் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவரது அரசியல் சார்பு பற்றி அறிந்திருந்தாலும், தமிழ் சமூகத்தில் அவர் நிகழ்த்த எண்ணும் சீரழிவுகளை கூச்சமின்றி வெளிப்படுத்தி இருக்கிறார்.  ஆர்.எஸ்.எஸ் போன்ற ஒரு அமைப்பின் வழிமுறைகள் அவருக்கு பிடிக்குமாம், அதே நிறுவனக் கட்டமைப்புடன் மீனவ மக்களிடையே ‘பரதவா சேவா சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி பணியாற்ற விருப்ப படுவதாக இந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார். மோடியை ஆதரிக்க அவர் காரணங்களாக பட்டியலிட்டவைகளுள்  முதன்மையாக இருந்தது இஸ்லாமிய வெறுப்பு. அதையும் போகிற போக்கில் நேரடியாகவே அவர் கூறி இருந்தார். 

வறுமையில் இருந்து தொடங்கினேன், எளிய குடும்ப பின்னணியை சேர்ந்தவன், ஒரு வேலை மட்டும் தின்று காலம் கடத்தினேன் என்றெல்லாம் தங்களது வளர்ச்சியின் தொடக்கம் பற்றி கதை பின்னி  கூறுபவர்கள் இப்படி அடியாள் தனமாக பேச வைத்ததைதான் 21-ஆம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அடைந்துள்ள மிக பெரிய வெற்றி என்று தோன்றுகிறது. 

சின்ன குத்தூசி நேர்காணல் தலைப்பை,  சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் வாசித்திருக்க கூடுமோ என்னவோ! 

#Random_Musings

Comments