அர்த்தமற்ற கவலை!

 

சமகால இலங்கை தமிழ் சமூகம் எவ்வாறான ஒன்றாக இருக்கிறது என்பது பற்றிய சித்திரமே தமிழ்நாட்டு ஈழ உணர்வாளர்களிடம் இல்லை என்று என்னால் அறுதியிட முடியும்.

தோல்வியில் முடிவுற்ற போராட்டத்தின் நினைவுகளை போற்றுவது மட்டுமே அந்த போராட்டத்திற்கு ஆற்றும் நியதி ஆகாது, அம்மக்களின் வாழ்க்கையில் உருப்படியான மாற்றம் நிகழ்ந்துள்ளதா என்பதை உற்று நோக்கி தீர்வு காண்பதே ஆக்கம் மிகுந்த காரியமாக இருக்கும்.

இலங்கையின் ஏழைமையான மாகாணம் கிழக்கு கரையில் அமைந்துள்ள மட்டக்களப்பு. தமிழர்கள் அதிகம் உள்ள கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலும் இதே நிலை தான். புலம்பெயர் தமிழர்களின் நிலை இதை விட கொஞ்சம் மேம்பட்டதாக இருக்கலாம்.

போருக்கு பின்னான இலங்கை தமிழ் சமூகத்தின் வாழ்க்கையை விவரிக்கும் இலக்கியங்களை படிப்பவர்கள், அவர்களின் தாயக வாழ்வை காட்டிலும் புலம்பெயர் வாழ்வு எத்தனை கொடுமையானது என்பதை உணர முடியும்.

போர் நிறைவுற்று 17 ஆண்டுகள் கடந்தும் அங்கு நிலவும் ஏழ்மை, வேலைவாய்ப்பின்மை, வீழ்ச்சியுற்ற பொருளாதார சூழல், அரசாங்க அடக்குமுறை ஆகியவற்றின் விளைவாக ஈழ தமிழ் போராட்ட இயக்கங்களை சேர்ந்தவர்கள் தற்போது மேற்கொண்டுவரும் தொழில்களை கேட்டால் மனம் வெதும்பும். புலிகள் இயக்கத்தை சேர்ந்த முன்னாள் காப்டன் ஒருவர் பேருந்து நிறுத்தத்தில் பொரிகடலை விற்று வருகிறார் என்ற ஒரு உதாரணம் நான் சொல்ல வருவதன் ஆழத்தை உணர்த்தும் என்று நினைக்கிறேன்.

முன்னாள் போராளிகளுக்கு இலங்கை அரசிடமிருந்து ஏவப்படும் கண்காணிப்பு, அடக்குமுறை ஆகியவற்றுக்கு குறைபாடு இல்லை. அடுத்த தலைமுறை இளைஞர்கள் போராட்டத்தின் சுவடே இல்லாமல் அரசியலற்றவர்களாக வளர்கிறார்கள் என்பது வேறு கதை.

தமிழ் உணர்வாளர்கள் மாவீரர் நாள், முள்ளிவாய்க்கால் நினைவு தினம் ஆகியவற்றை அனுசரிப்பதில் எந்த தவறும் இல்லை, ஆனால் இலங்கை தமிழ் சமூகத்தின் சமகால வாழ்வியலை, அவர்களின் அன்றாட பாடுகளை அறிந்துவைத்து கொள்வது இத்தகைய உணர்வுகளுக்கு பொருள் உரைக்கும் ஒன்றாக அமையும்.

சினிமா வழங்கிய உணர்வெழுச்சியில் நடிகர் விஜய்யை ஆட்சி கட்டிலில் அமர்த்தி இருக்கும் தமிழ் சமூகம் இதுகுறித்தெல்லாம் கவலைப்படுவதில் எந்த அர்த்தமும் இருக்க போவதில்லைதான், இருந்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தன்று எழுதவேண்டும் போலிருந்தது.


Comments

Popular Posts