நூறு சாமி ft Right to marry
இயக்குனர் சசி அவர்கள் இயக்கிய ‘நூறு சாமி’ திரைப்படத்தை அண்மையில் பார்த்தேன். மிக அரிதாகவே தமிழ் திரையுலகம் இதுபோன்ற கதைகளை காட்சிப்படுத்த முன்வந்துள்ளது. அந்த வகையில் இது மிக துணிச்சலான முயற்சி.
கைம்பெண் மறுமணம் குடும்பத்திலும் அதை சுற்றி இருக்கும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கம்தான் கதைகளம். 26 வயதில் கணவரை இழந்த பெண்ணின் அன்றாட வாழ்க்கை பாடுகளை இந்த படம் உணர்வுபூர்வமாக கடத்தியுள்ளது. தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்றான கள்ளக்குறிச்சியில் உள்ள சங்கராபுரம் ஒன்றியத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தின் கதை இது. வாசிப்பின் வாயிலாக ஏற்படும் மனமாற்றம் எத்தகைய புரட்சிகரமான முடிவுகளையும் எடுக்க வித்திடும் என்பதற்கு சாட்சியமாக திகழ்கிறது இந்த கதை.
சாமிக்கும் மனுசனுக்கு நடுவுல பூசாரி எதுக்கு போன்ற பகுத்தறிவு மிக்க வசனங்களையும் மிக இயல்பாக பேசியது இந்த படத்தில் பலம். தாய்-மகன் பந்தத்தை கடந்து சமூகத்தில் Single Mother-ஆக இருக்கும் ஒருவரும், தந்தையின்றி வளரும் மகன்களும் அகம் சார்ந்து எவ்வித உளவியல் சிக்கல்களை எல்லாம் எதிர்கொள்கின்றனர் என்பதை யதார்த்தத்திற்கு நெருக்கமாக காட்சி படுத்தி இருந்தது இந்த படம்.
கலைஞர் கொடுத்த கலர் டிவி, பெரியார் புத்தகங்கள், ஆங்கில நூல்களை அதிகம் கொண்ட நூல் அலமாரி என அரசியல் குறியீடுகளையும், வீட்டு அறையில் Ronaldo, Virat Kohli ஆகியோரின் போஸ்டர்கள் என சாமானிய முதிர்பருவ இளைஞர்கள் பொருத்திப்பார்த்து கொள்ளும் குறியீடுகளையும் இந்த படம் நுட்பமாக பதிவு செய்திருந்தது.
ஐந்தாண்டுகளுக்கு முன் Siddharthan Karunanidhi எழுதிய ‘Right to marry’ நூலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது என்பதால் காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியது.
மிக சிறிய கதை களத்தை, 2 மணி நேர நீளம் கொண்ட படமாக காட்சிப்படுத்தியதில் ‘நூறு சாமி’ வெற்றி அடைந்துள்ளது என்றே சொல்ல வேண்டும். வாய்ப்புள்ளோர் அவசியம் பார்க்கவும். படிக்கவும்.


Comments
Post a Comment