Regrouping of Conservatives in Indian Society


 


1950-களின் பிற்பகுதியில் திமுக–காங்கிரஸ் என்று தமிழ்நாட்டின் அரசியல் சூழல் மாறத் தொடங்கியிருந்த தருணத்தில், ராஜகோபாலாச்சாரி தனது சகாக்களுடன் சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி தமிழ்நாட்டில் பெரிய அளவில் எடுபடவில்லை என்றாலும், இந்திய அளவில் கணிசமான செல்வாக்கைப் பெற்றது.

ஜூன் 4, 1959 அன்று சென்னையில் இக்கட்சி தொடங்கப்பட்டபோது, “Regrouping of Conservatives in Indian Society” என்று ஒரு எழுத்தாளர் குறிப்பிட்டார். போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தமிழ்நாட்டில் 6 இடங்களில் வென்று, 8% வாக்குகளைப் பெற்றது. (திமுகவுடன் இணைந்து ராஜாஜி சந்தித்த முதல் தேர்தல் இதுவாகும்.) சுதந்திரா கட்சி இந்தி பேசும் மாநிலங்களின் சட்டமன்றங்களில் அதிக இடங்களைப் பெற்றது. 1962 மக்களவை தேர்தலில், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு (44.9%) அடுத்து அதிக வாக்குச் சதவீதத்தை சுதந்திரா கட்சி (9.9%) பெற்றது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில்தான் இடதுசாரிகள் இருந்தனர். சோசியலிச தன்மையுடன் செயல்பட்ட காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, தாராளவாத பொருளாதாரக் கொள்கையை வலியுறுத்தும் கட்சியாக சுதந்திரா விளங்கியது. ஐந்தாண்டுத் திட்டங்களை மிகத் தீவிரமாக எதிர்த்தது. தொழில்துறையில் அரசின் தலையீடு குறைய வேண்டும் என்று வலியுறுத்தியதால், முதலாளிகளும் நிலவுடைமையாளர்களும் இக்கட்சியை ஆதரித்தனர்.


அண்ணாமலை ராஜாஜி அல்ல. ஆனால் இன்று அண்ணாமலை தொடங்கப்போவதாக அறிவித்திருக்கும் கட்சியும் சமூகத்தில் உள்ள Conservatives-ஐ இலக்காகக் கொண்டு தொடங்கப்படுவதாகத் தெரிகிறது. மேற்பூச்சாக பல நவீன கருத்துகளை அவர் முன்வைத்தாலும், அதன் ஆன்மாவாக இருப்பது சமகால இந்திய வலதுசாரிகள் தொடர்ந்து வலியுறுத்தும் ‘Civilisational Republic – பாரதம்’ என்ற கலாச்சாரக் கருத்தியல்தான். காலம் காத்திருந்து பதில் சொல்கிறதா என்று பார்ப்போம்!


Comments

Popular Posts