நீர் எழுத்து - நக்கீரன் //BOOK REVIEW//

 




தமிழகத்தில் வடகிழக்கு  பருவமழை தொடங்கிய சமயத்தில் இந்த புத்தகத்தை எடுத்துவைத்தேன். முதல் பகுதியை வாசித்தபின் ஒரு நீண்ட இடைவெளி தேவை பட்டது. நீர் சம்மந்தப்பட்ட நூல் என்று பார்த்தால் இதற்கு முன் Sunil Amrith எழுதிய Unruly Waters: How Rains, Rivers, Coasts, and Seas Have Shaped Asia's History” என்ற நூலை வாசித்திருக்கிறேன் ஆசியாவின் வரலாற்றை நீர் எப்படி வடிவமைத்ததது என்பதில் தொடங்கி இந்தியாவில் இருக்கும் நீரியல் அமைப்பு முறையையும் வரலாற்று ரீதியாக அணுகும்.  டாக்டர் கே. கே. பிள்ளை எழுதிய "தமிழக வரலாறு- மக்களும் பண்பாடும்" என்கிற புத்தகம் தமிழகத்தின் நீரியல் மட்டும் நிலவியல் பற்றிய சிறு அறிமுகத்தை கொடுத்தது. அதன் பின்னர் தான் திரு. நக்கீரன் அவர்கள் எழுதிய "நீர் எழுத்தை" வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  


இவரின் “சாதியும் சூழலும்” வாசித்து ஒரு அறிமுகம் எழுதி இருந்தேன்.  “காடோடி” பாதியில் நிற்க்கிறது. ஜெயமோகனின் "காடு" நாவலும் பாதியில் தான் இருக்கிறது. இயற்கை பற்றிய புனைவு எழுத்துக்கள் மேல் பெரிதாக ஆர்வம் ஏற்படவில்லை. கடைசியாக "வேள்பாரி" படித்ததாக நியாபகம். 


“நீர் எழுத்து” - தமிழகத்தின் நீர் நிலைகளில் தொடங்கி சங்ககால இலக்கியத்தில் இடம்பெற்ற நீர் பற்றிய பாடல்கள், நீர் நிலைகளின் கட்டுமானம், நீருக்கும் அதிகாரத்திற்கும் இருக்கும் உறவு, நீர் தனியுடைமையா பொதுவுடைமையா, எதிர்காலத்தில் நீர் சிக்கலை எப்படி தீர்ப்பது, நதிநீர் இணைப்பு  சாத்தியமா? போன்ற தலைப்புகளில் போதிய ஆதாரங்களோடு பேசுகிறது. புத்தகத்தின் இறுதி பகுதியில் பயன்படுத்தப்பட்ட தரவுகளை கொடுத்திருப்பது பெரிதும் உதவும் என்றே நினைக்கிறேன். ஆய்வு நூல் என்கிற அடிப்படையில் அணுகினால்  சில பிரச்சார தொனியை நீக்கிவிட்டால் நல்ல ஆய்வு நூலாக அமையும். 


திராவிட பண்பாடே நீரோடு தொடர்புடையது, வடக்கே இருப்பது போல் இங்கு வருடம் முழுக்க ஓடும் வற்றாத நதிகள்  இல்லை. நீர் சேமிப்பின் அவசியத்தை மக்களின் வாழ்வியலோடு சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. "ஊரில் மழை பெய்ததா?" "விளைச்சல் எல்லாம் எப்படி?" என்ற அன்றாடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பின்னல் தமிழக நீர் பண்பாட்டின் வரலாறு நீள்கிறது. 


ஆரியம் நெருப்போடு தொடர்புடைய பழக்கவழக்கங்களை கொண்டிருந்ததற்கு அதன் சூழல் முக்கிய காரணம். அதை போலவே திராவிட நாகரிகம் நீரோடு பின்னி பிணைந்தது. நீர் சம்மந்தப்பட்ட சொற்களை சங்க இலக்கியத்தில் தேடினால் தலை சுற்றும் அளவிற்கு இடம்பெற்றுள்ளது. அணைகள், குளம் ,குட்டை, ஏரி என நீர் சேமிக்கும் இடங்களும் இங்கு அதிகம்.


 திராவிட - ஆரிய போர் இதன் அடிப்படையில் நடைபெற்ற ஒன்று என்று சொல்கிறார் நூல் ஆசிரியர். மேய்ச்சல் நிலங்களை நம்பி கால்நடைகளை வளர்த்த ஆரியர்களுக்கு அணை அமைத்து நீர் சேமித்த திராவிடர்களின் நிலவியல் அமைப்பு முரண்பட்டு நிறைந்த ஒன்றாகவே இருந்திருக்கும்  என்கிறார். 



இந்தியாவில் தான் நீரை அணுக கூட தீண்டாமை இருந்தது. அம்பேத்கர் அதற்காக ஒரு சத்தியாகிரக  போராட்டமே நடத்தினார். ஆரியத்தின் பண்புகளை தமிழ் அரசர்கள் கடைபிடித்தபோது தண்ணீர் தனியுடைமையானது . சாதிக்கு ஒரு குளம் ஏற்பட்டதெல்லாம் அதன் பிறகான ஒன்று தான். 


தொ. பரமசிவன் அவர்கள் கூறிய நீர் சம்மந்தப்பட்ட செய்திகள் அவ்வப்போது வந்து செல்கிறது. மேலும் பல தண்ணீர் சார்ந்த ஆய்வுகளும் ஆய்வாளர்களும் அறிமுகப்படுத்த பட்டிருக்கிறார்கள்.


தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ள ஆறுகள், குளம், ஏரி, அணை போன்றவற்றை இந்நூல் வரலாற்று ரீதியாக ஆழமாக ஆராய்கிறது. ஆறுகளின் கலப்பட பெயர்கள் நீக்கப்பட்டு உண்மையான பெயர் காரணங்களை அடையாளம் காட்டுகிறார். பழங்கால காவிரி ஓடிய பாதைகளை பற்றி வியப்பான செய்தி இடம்பெற்றுள்ளது. வைகை, பொருநை, பாலாறு, என்று ஆறுகள் பற்றிய செய்திகள் எல்லாம் எனக்கு புதியவை, கேள்விப்படாதவை. 


ஏரிகள் நிறைந்த சென்னையும், 1920 இல் இயற்றப்பட்ட “மெட்ராஸ் டவுன் பிளானிங்” சட்டமும், பனகள் பூங்கா பெயர் காரணமும், வாக்கம் - பாக்கம் என்று இடம்பெற்ற ஊர் பெயர்களும் சென்னையின் நீர் வரலாற்றை கண் முன் நிறுத்துகிறது. 


தமிழ்நாட்டில் இருக்கும் நிலங்களில் 27%(இதில் பெரும்பாலும் நதிநீர் வாய்கால்களோடு தொடர்புடைய பகுதிகள்)  தான் நீர் ஊடுருவும் திறன் கொண்டவை, மீதமுள்ளவை எல்லாம் பாறை நிறைந்த  நில அமைப்பை கொண்டவை. சென்னையில் சிமெண்ட் கட்டுமானங்கள் நிறைந்திருப்பதால் நீர் ஊடுருவும் திறன் 4 %  நிலங்களுக்கே இருக்கிறது. மேலும் சென்னையில் பெய்யும் மழையை சேமிப்பதற்கு ஏற்ற கட்டடவியல் அமைப்பு முறையை ஏற்படுத்தி நீர் பஞ்சம் வரும்போது அதனை பயன்படுத்த முயற்சிக்க வேண்டும் என்கிற இவரது வாதம் ஏற்புடையதாக தெரிகிறது. ஆனால் இதை எல்லாம் அரசே செய்ய வேண்டும் என்பதில் எனக்கு பெரியளவில் உடன்பாடு இல்லை. 


அதிகாரத்தின் பிடியில் இருந்து நீர் Decentralize செய்யப்படும்போது மக்களுக்கு பெரிதும் உதவுவதாக இவர் கூறும் சமகால எடுத்துக்காட்டுகள் கவனம் பெறுகிறது. அதிகார பரவலாக்கம் என்பது வளர்ச்சியையும், நிர்வாகத்தையும் ஆற்றல்மிக்க ஒன்றாக மாற்றுமென்பது நீருக்கும் பொருந்தும். 


Bhakra-Nangal  அணையை திறந்து வைத்த பிரதமர்  நேரு  ஆற்றிய உரையில் அணைகளை "Temples of Modern India” என்கிறார். முதல் ஐந்தாண்டு  திட்டத்தில் விவசாயத்தோடு அணை கட்டுமானத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பது Unruly Waters நூல் மூலம் அறியமுடிந்தது. இரண்டாம் உலக போருக்கு பின் ஆசியாவில் தான் அதிகப்படியான அணை கட்டுமானங்கள் நடந்துள்ளது. நீரின் அவசியத்தை இதன் மூலம் அறியமுடிகிறது. மேலும் காலநிலை மாற்றம் அடையும் காலகட்டத்தில் நீரின் அவசியத்தை அரசியல் சக்திகள் சரியாக உணர்ந்தே உள்ளன. நீர் சிக்கல்களுக்கான சட்டங்கள் பற்றிய அறிமுகத்தையும்  இந்த புத்தகம் கொடுக்கிறது.


நூலின் பின்  இணைப்பாக ​”தமிழ்நாட்டின் நீர் கொள்கைக்கான 20 பரிந்துரைகளை” கூறியுள்ளார். தண்ணீருக்கென தனி துறை என்பதில் தொடங்கி சூழலியல் சார்ந்த பல பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளது. சாத்தியப்படும் பரிந்துரைகளை ஏற்று கொள்வது அரசின் கொள்கைகளை சீர் செய்ய உதவும். 


மழை காலத்தில் நீர் பற்றிய புத்தகம் வாசிப்பது, நூல் கூறும் கருத்தோடு நல்ல பிணைப்பை(Connect) கொடுத்தது.  பல எதிர்மறை கருத்துக்கள்  மிகைப்படுத்தப் பட்ட ஒன்றாக தெரிந்தது. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும். 



 


Comments