இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள் // Book Review
ஒரு சமூகத்தில் நிறுவனங்களின் பங்கு முக்கியமானது. அது கல்வி நிறுவனங்களானாலும் சரி இதர சமூக நிறுவனங்களானாலும்(Hospitals, relegious places, banks, industries etc..) சரி. சமூகத்தில் நல்ல மாற்றங்கள் உருவாவதற்கு தரமான நிறுவனங்கள் இன்றியமையாதவை.
அடையாரில்(காந்தி நகர்) இருக்கும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் (MIDS) அப்படிப்பட்ட ஒன்று தான். இன்றைக்கு தமிழ்நாட்டில் பெரிதும் பேசப்பட்டும் ஆளுமைகளை செதுக்கியதில் இந்நிறுவனம் முக்கியப்பங்கு வகிக்கிறது. “திராவிட மாடல்” என்று இந்தியா முழுவதும் பேசுபொருளாவதற்கான வித்து இங்கிருந்த ஆய்வறிஞர்கள் வெளியிட்ட The Dravidian Model புத்தகத்தின் விளைவாக ஏற்பட்ட ஒன்றே.
MSS.பாண்டியன், J.ஜெயரஞ்சன் , AR. வேங்கடாசலபதி, S.ஆனந்தி , C. லக்ஷ்மணன், M.விஜயபாஸ்கர், A.கலையரசன், S.நீலகண்டன் போன்றவர்கள் எல்லாம் இந்நிறுவனத்தின் மூலம் குறிப்பிடத்தக்க(முக்கியமான) சமூக அரசியல் பொருளாதார மற்றும் வரலாற்று ஆய்வுகளை மேற்கொண்டவர்கள்.
இந்நிறுவனத்தை உருவாக்கியவர் “மால்கம் ஆதிசேசய்யா”. 1971ல் தனது சொந்த முயற்சியில் இந்த ஆராய்ச்சி நிறுவனத்தை அவர் ஏற்படுத்துகிறார். பின்னாளில் ICSSR , ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதியின் மூலம் இயங்கி வருகிறது.
UNESCOவின் துணை இயக்குனர் நாயகமாகவும் இவர் பதவி வகித்தார். கலைஞர் முதல்வராக இருந்த காலத்தில் உருவாக்கப்பட்ட மாநில திட்டக்குழுவின்(1971-75) உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக துணைவேந்தராகவும்(1975-1978), மாநிலங்களவை உறுப்பினராகவும்(1978-1984) ஆதிசேசய்யா பணியாற்றினார். ஆண்டுகள் முக்கியமானவை.
YOJANAஎன்ற இதழ் "திட்டம்" என்ற பெயரில் தமிழ் உட்பட 13 மொழிகளில் 1969 முதல் திட்டக்குழு வாயிலாக வெளிவர தொடங்கியது. இந்த இதழில் மால்கம் ஆதிசேசய்யா எழுதிய கட்டுரைகள் தொடர்ச்சியாக வெளியாக தொடங்கின. அப்படி வெளியான சமகால பொருத்தப்பட்டுள்ள கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்நூல்.
பொருளாதாரம், கல்வி, வறுமை ஒழிப்பு, தொண்டு நிறுவனங்கள், நிதிக்கொள்கை, மதசார்பின்மை என பன்மைத்துவ கருத்துக்களை கொண்ட கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றிருக்கின்றன. MIDS நிறுவனத்தின் 50ஆம் ஆண்டில் இந்நூல் சிறப்பு வெளியீடாக வெளியாகியுள்ளது. ஆ.அறிவழகன் என்பவர் இதிலுள்ள கட்டுரைகளை தொகுத்துள்ளார்.
ஆழமான கருத்துக்களும் தரவுகளும் நிரம்பிய கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. அதே சமயம் இவை 80கள் 90களில் எழுதப்பட்ட கட்டுரைகள். சமகாலத்தில் இக் கட்டுரைகளின் பொருத்தப்பாடு என்பது நாம் எத்தகைய இலக்குகளை எட்டமுனைந்தோம், நாம் எவற்றை எல்லாம் அடைந்துள்ளோம், என்பதை மீளாய்வு செய்ய முக்கிய ஆவணமாக பயன்படும். பொதுவாசகர்களுக்கான கருத்துக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
எந்த ஒரு சார்புநிலையும் எடுக்காமல் மக்களின் நலனை அடிப்படையாக கொண்டே இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன . காந்தியும் இன்றைய இந்திய பொருளாதாரமும் (1993), வெளிநாட்டு முதலீடும் தாராளமயமாக்கலும்(1994) , தொண்டு நிறுவனங்கள், மதர்சார்பின்மையின் இடர்பாடுகள், வறுமை மற்றும் கல்வி பற்றிய கட்டுரைகள் எல்லாம் இன்றைய அரசியல் சூழலில் முக்கியத்துவம் வாய்ந்தவை. எட்ட நினைத்த இலக்குகளைவிட மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கிறோம்.
திட்டமிடலுக்கு அதிகாரபரவல் எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார், மாநிலங்கள் - நகராட்சிகள்- கிராம பஞ்சாயத்துகள் என படிப்படியான அதிகாரபரவலின் மூலமே திறமையாக திட்டமிடவும் செயல்படுத்தவும் முடியும் என்று குறிப்பிடுகிறார்.
பட்டதாரி மாணவர்களுக்கு உறுதியான வேலைவாய்ப்பு அவசியமாக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், கற்றலின் அவசியத்தை முன்னிலைப்படுத்துகிறார். மனப்பாட கல்வி என்பதை கடந்து கற்றலின் நோக்கம் மிக பெரியது என்பதை ஒரு கட்டுரை நிறுவுகிறது. தொடக்கக்கல்வி, உயர்கல்வி, முறைசாரா கல்வி ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடார்புடையவையாக ஆக்கப்படவேண்டும். அப்படி ஆக்குவதன் மூலம் பொருளாதார மாற்றங்களை நிகழ்த்தமுடியும் என்று சொல்கிறார். வரும்காலத்தில் சுயவேலைவாய்ப்பு(self-employment) தான் முக்கிய இடம்பெறும் என்பதை 1994லேயே கூறிச்சென்றுள்ளார்.
மக்கள்தொகை பெருக்கம் பற்றிய இவரது கட்டுரையும் முக்கியமான ஒன்று. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம் மக்கள்தொகை பெருக்கத்தை ஒரு அளவுக்கு கட்டுப்படுத்தமுடியும் என்று சொல்லி பெண்கல்வியின் அவசியத்தை முன்னிலைப்படுத்துகிறார். பயன்படுத்தப்படா வளங்களாக(Untapped Resources) பெண்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றளவும் ஒன்றிய அரசு முதற்கொண்டு பல மாநில அரசுகள் உணர்ந்தபாடில்லை.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் ரகுராம் ராஜன் பேசும்போது, தனியார் நிறுவனங்களுக்கு அதிகளவிலான மானியங்கள்(subsidies) வழங்குவதை தவிர்த்துவிட்டு, கல்வியிலும் அது சார்ந்த கட்டமைப்புகளிலும் அதிகம் செலிவிடவேண்டும் என்றார். அடுத்த 15 ஆண்டுகளுக்கான திட்டமிடலின் தொடக்கமாக இந்தியாவின் மனிதவளத்தை எப்படி பயன்படுத்துவது என்பதை நிர்ணையிப்பதன் மூலமே தீர்மானிக்கமுடியும் என்றார்.
இதே கருத்தை 1990களிலேயே பேசிய மால்கம் ஆதிசேசய்யாவின் தொலைநோக்கு பார்வையை நினைத்தால் பிரமிப்பாக இருக்கிறது. இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளும் அப்படிப்பட்டவை தான். வியப்பை ஏற்படுத்துபவை, கருத்தாழம் மிக்கவை, வாசிக்கவும் எளிமையான தமிழில் இடம்பெற்றுள்ளவை.
அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுள்ளவர்கள் தவறாமல் வாசிக்கவேண்டிய புத்தகம். வாய்பிருப்போர் அவசியம் வாசித்து பயனடையவும்.
Comments
Post a Comment