The World of Tamil Merchant // Book Review



AR ரகுமானின் "புயல் தாண்டியே விடியல்" என்ற பாடல் வெளியாகி இருக்கும் அதே சமயத்தில் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் MKS தொழில்முறை பயணமாக அரபு அமீரகத்துக்கு சென்றுள்ளார், முதலீடுகளை ஈர்ப்பது முக்கிய நோக்கம் என்றாலும் அங்கு பரிமாறிக்கொள்ளப்பட்ட அன்பளிப்புகளின் வரலாற்று முக்கியத்துவத்தை கொண்டு இந்த நூல் அறிமுகத்தை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்.

தமிழ்நாட்டில் இருந்து சென்ற முதல்வர் புத்தகங்களையும்(Journey of a Civilization: Indus to Vaigai, Karunanidhi A Life ), அரபு அமீரகத்தை சேர்ந்த அமைச்சர்கள் கப்பலின் மினியேச்சர்களையும் பரிமாறிக்கொண்டார்கள். தமிழ்நாடு இயல்பிலேயே, அதாவது ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பே அயல்நாட்டு வணிகத்திலும் வர்த்தகத்திலும் செழித்தோங்கிய மண் என்பது தெளிவு.

இங்கிருந்த பண்டங்களை தாண்டி சிந்தனைகளும், மேற்குலகோடும் தென் கிழக்கு ஆசிய நாடுகளோடும் பகிரப்பட்டே வந்துள்ளது. ஒருமுனை பகிரவாக அல்லாமல் இரு தரப்புகளும் தங்களுக்கிடையிலான பண்டங்களையும் சிந்தனைகளையும் பரிமாறிக்கொண்டார்கள். அதன் காரணமாக தான் வணிகத்தில் ஒரு நிலைத்தன்மை(balance of trade) நிலவியுள்ளது.

சங்ககாலம் முதல் 14 ஆம் நூற்றாண்டுவரையில் நடந்த உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு வணிகம் பற்றியும், வர்த்தக நடைமுறைகள் பற்றியும், அச்சமயத்தில் நிலவிய சமூக-அரசியல் சூழல் பற்றியும் இந்நூல் விவரிக்கிறது. சங்க இலக்கியங்களையும், இடைக்கால கல்வெட்டுகள் மற்றும் தொல்லியல் பொருட்களை வைத்தே இந்த அவதானிப்புகள் நிறுவப்பட்டுள்ளது. எழுத்துரு பெறாத வரலாற்றுக்கு முன்பிருந்தே இத்தகைய வணிக போக்குவரத்துகள் தமிழகத்தில் நிலவியிருக்கும் என்கிறார் நூல் ஆசிரியர் Kanakalatha Mukund.

சங்ககாலம் முதல் சோழர்களின் வீழ்ச்சி வரை தமிழகத்தின் வணிக போக்குவரத்துக்கு மற்றும் உள்நாட்டு வர்த்தகம் பற்றி புரிந்துகொள்ள முக்கிய ஆவணமாக "The World of Tamil Merchant" நூல் இருக்கும்.

Periplus of the Erythraean Sea என்ற புத்தகம் சங்க காலத்தில் நடந்த கிரேக்க வணிக தொடர்புகளை விவரிக்கிறது. “யவனம்” எப்படி ஒரு திசை பெயராக பயன்படுத்தப்பட்டதோ “திராவிடம்” என்ற சொல்லும் தென் இந்தியாவை (குறிப்பாக தமிழ்நாட்டை )குறிக்கும் திசை சொல்லே என்கிறார் முனைவர் KRS. இங்குள்ள முக்கிய துறைமுகங்களும்(புகார், கொற்கை, தொண்டி) வணிகம் நடந்ததற்கு முக்கிய சான்றாக இருக்கின்றன.

பல்லவர் காலத்திலும் பாண்டியர் காலத்திலும் அரசின் உதவியுடன் வணிகம் நடைபெற்றுவந்தது. உள்நாட்டு வணிகம் அரசியல் நிலைத்தன்மையால் சிறப்பாக நடைபெற்றது. சந்தை வர்த்தகம் தடையின்றி நடைபெற சமூக அமைதி முக்கியம். அத்தகைய சமூக அமைதி உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவித்தன என்பதை இடைக்கால பக்தி இலக்கியங்களும் விளக்குகின்றன. சோழர் காலத்தில் நடைபெற்ற படையெடுப்புகளின் மூலம் கடாரம், இலங்கை போன்ற பகுதிகளில் தமிழ் வணிகர்களின் நிரந்தர இடப்பெயர்வும் நடைபெற்றது.


தமிழகத்தின் கிழக்கு கடற்கரையில் கண்டறியப்பட்ட சீனத்து பீங்கான் மூலம் தென்கிழக்கு ஆசியாவிற்கும் தமிழகத்திற்கும் இருந்த தொடர்பு வெளிப்படுகிறது. இடைக்காலத்தில் தான் தென் கிழக்கு ஆசிய நாடுகளை இந்து மன்னர்கள் கைப்பற்றி ஆட்சி செய்ய தொடங்கினார்கள். இத்தகைய நாடுபிடிப்பும் வணிகம் அமைதியாக நடைபெற முக்கிய பங்குவகித்தது.

ஊர், ஊர் சபை, நாடு, கோட்டம், நகரம் போன்ற அமைப்புகள் வர்த்தகம் சிறப்புற நடைபெறுவதற்கான உருவாக்கப்பட்ட நிறுவனங்களாக செயல்பட்டன. நகரமும், கிராமமும் இப்போதிருப்பதை போல் முரண்பட்ட ஒன்றாக இல்லாமல் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட ஒன்றாகவே விளங்கியது. நகரம் என்பது சந்தை வர்த்தகம் நடைபெறும் இடம் என்றளவிலேயே இருந்தது.

பக்தி இயக்கம் செழித்தோங்கிய சமயத்தில், வர்த்தகம் நடைபெற கோவில்கள் நகரத்தின் முக்கியப்பகுதியாக விளங்கின. வணிகர்கள் கோவிலுக்கு நன்கொடைகளை வழங்குவதன் மூலம் மன்னர்கள் மற்றும் மக்களிடையே நன்மதிப்பை பெற்றனர். இதன்மூலம் வர்த்தகம் சிறந்த முறையில் நடைபெற்றது.

போர்கள் நடந்த சமயத்திலும் அரசியல் சூழல் நிலையற்றதாக இருந்தசமயத்திலும் அயல்நாட்டு வணிகமும் உள்நாட்டு வர்த்தகமும் தடைபடாமல் செயல்பட்டதற்கு காரணம் வணிகர்கள் பெற்ற நன்மதிப்பே ஆகும். மன்னர்களும் வணிகத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தினால் வர்த்தகத்திற்கு எவ்வித தடை இல்லாமலும் கூடுதல் வரி விதிக்காமலும் பார்த்துக்கொண்டார்கள். விஜயநகர பேரரசு காலத்திலும் சபை, ஊர், நாடு, நகரம் போன்ற அமைப்புகள் உறுதியுடன் இருந்ததை இதை வைத்து புரிந்துகொள்ளலாம்.

இப்படியாக புத்தகம் ஒரு பறவையின் பார்வையில்(Bird's-eye View) கடல் வணிகம் பற்றியும் உள்நாட்டில் நடந்த வர்த்தகம் பற்றியும் எளிமையாக விளக்குகிறது, தமிழ்ச்சமூகம் சந்தை வர்த்தகத்தில் கொண்ட ஈடுபாடுகளை இதன் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

நேற்று வெளியான ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டில் தமிழ்நாடு(score: 56.84) 4ஆம் இடத்தில உள்ளது, முதல் இரண்டு இடங்களை குஜராத்(78.86) மற்றும் மகாராஷ்டிரா(61.72) மாநிலங்கள் பிடித்துள்ளன மூன்றாவது இடத்தை கர்நாடக(61.72) பெற்றுள்ளது. இவை நான்குமே கடலோர மாநிலங்கள். நமது கடல்சர் சாத்தியங்களை 21 ஆம் நூற்றாண்டில் முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதில் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட சாத்தியங்களை மீளாய்வு செய்து ஆக்கபூர்வமாக பயன்படுத்துவதே தமிழ்நாடு கற்கவேண்டிய வரலாற்று பாடமாகும்.




அந்தவகையில் இந்நூல் முக்கியமான ஒன்றாகும், அகழாய்வுகள் மூலம்
இந்த நூலின் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் ஆதாரங்களும் எதிர்காலத்தில் கண்டெடுக்கப்படலாம். பல இடங்களை அனுமானங்கள்(Assumptions) என்ற அளவில் தான் பதிவுசெய்கிறார் நூல் ஆசிரியர். Unrecorded Historiesக்கு உள்ள குறைபாடு என்றே இதை சொல்லலாம்.

குறைகளை நிகர் செய்யும் முயற்ச்சியாகவே முதல்வரின் அமீரக பயணத்தை நான் புரிந்துகொள்கிறேன். உலகமயமாக்கல் என்பது தமிழ் சமூகம் நெடுகாலமாக பழக்கப்பட்ட ஒன்றே, எதிர்காலத்திலும் அது தொடர்வது நமது வளர்ச்சிக்கும் வளங்களுக்கும் வலு சேர்க்கும்.





வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் வாசித்து பயனடையவும்.

நன்றி : Arun Pandiyan

Comments