புதுமைப்பித்தன் வரலாறு - தொ.மு.சி ரகுநாதன்
செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு
சிந்தை அறிவினிலும்
தனி இருட்டு!
~ புதுமைப்பித்தன்
ஒரு இலக்கியவாதியின் வாழ்க்கையை வரலாற்றுப் புத்தகம் என்று நான் இதுவரை எதையும் படித்ததில்லை, தொ.மு.சி ரகுநாதன் எழுதிய "புதுமைப்பித்தன் வரலாறு" நூல் தான் இந்த வகைமையில்(Genre) நான் வாசித்த முதல் நூல். திரு.ஆ இரா வேங்கடாசலபதியின் “In those days there was no Coffee” என்ற நூலின் மூலம் புதுமைப்பித்தன் ஒரு இலக்கிய ஆளுமையாக எனக்கு அறிமுகமானார், அதற்கு முன்பு வரை 12வகுப்பு துணைப்பாடத்தின் ஆசிரியராக தான் தெரியும்.
சலிப்புத்தட்டும் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் போல் அல்லாமல், வழக்கத்திற்கு மாறான சுவாரஸ்யத்தையும், இலக்கிய சுவையையும் இந்நூல் கொண்டுள்ளது. புத்தகத்தை கிழே வைக்க முடியாமல் 100 பக்கங்களை தூக்கம் தொலைத்து ஒரு இரவில் படித்து முடித்தேன் என்றால் இதன் எழுத்து நடையை பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை.
இந்நூலில் "அவனுக்கே பிச்சனானேன்" என்ற தலைப்புடன் முன்னுரை ஒன்றை திரு.சலபதி எழுதி இருக்கிறார், இருபது பக்க கட்டுரையில் இத்தனை தகவலை கொடுத்ததோடு மட்டுமல்லாமல், இந்நூலை விரைந்து படித்து முடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்திய கட்டுரை இது. கல்கியின் வாழ்க்கை வரலாறும் புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறும் எழுதப்பட்ட வரலாற்று பின்னணியை வைத்தே அந்த காலத்து தமிழ் இலக்கிய சூழல் பற்றிய புரிதலை ஏற்படுத்திக்கொள்ள முடிகிறது.
1951இல் வெளிவந்த இந்த புத்தகத்தை, 2022இல் இலக்கியத்தை மீது பெரிய அளவில் பற்று கொள்ளாத ஒரு தமிழ் வாசகன் படித்து, புதுமைப்பித்தன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்திக்கொள்கிறான் என்றால் இந்நூலின் சமகால பொருத்தப்பாட்டை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
"புதுமைப்பித்தனது வாழ்க்கை தமிழ் எழுத்தாளர் ஒருவரின் சோக நாடகம்; உயிருள்ளள எழுத்தாளருக்கு ஒரு எச்சரிக்கை." என்ற அபாய எச்சரிக்கையுடன் தான் நூலை தொடங்குகிறார், தொ.மு.சி. ரகுநாதன். புதுமைப்பித்தனோடு நெருங்கி பழகியவர் என்பதால் இயல்பாகவே புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறு அவரது நினைவில் பதிந்துள்ளது, தரவுகளை திரட்டி,அதில் இலக்கிய சுவை கலந்து, தமிழ் வாசகர்களுக்கு இந்நூலை படைத்துள்ளார் ரகுநாதன்.
"புதுமைப்பித்தன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் இலக்கிய உலகிலே ஒரு தனி ஜாதி: தனி ஜோதி... " என்ற வரியை வைத்து தமிழ் எழுத்துலகில் அவரின் முன்னோடி நடவடிக்கைகளையும் தனித்தன்மையையும் புரிந்துகொள்ள முடிகிறது. பல இடங்களில் புதுமைப்பித்தனின் சிறுக்கதைகளை மேற்கோள்காட்டிக்கொண்டே செல்கிறார் ரகுநாதன், அவரின் வாழ்க்கை நிகழ்வுகள் எல்லாம் அவர்படைத்த சிறுகதைகளில் பிரதிபலித்திருப்பதை நுணுக்கமாக பதிவுசெய்துள்ளார். இந்நூலோடு சேர்த்து அவ்வப்போது அந்தச் சிறுகதைகளையும் படித்துக்கொண்டேன். பேரின்பம் .
புதுமைப்பித்தனின் இறுதிநாட்களைப் பற்றி படிக்கும்போது ஒரு பக்கம் வருத்தமும் மறுபக்கம் பிரமிப்பும் உண்டாகிறது. "சோதனை" என்ற பெயரில் இதழ் ஒன்றை தொடங்கவேண்டும் என்ற அவரின் ஆசை கூட நிராசையாகி போனது, சோதனை நிறைந்த சோக நிகழ்வு. புதுமைப்பித்தனின் தைரியம் கலந்த அசட்டுத்தனங்கள் அவர் வாழ்க்கையின் அர்த்தமாக மாறிப்போனாலும் அவை எல்லாம் சாகசங்கள் என்ற பட்டியலில் சேர்த்துக்கொள்ளும் அளவுக்கு வீரியமுடையவை.
அவரை இறப்பு கூட சோதனையான ஒன்று தான், ஆனால் அவர் அதை எதிகொண்ட விதம் தான் புதுமைப்பித்தனின் குணம். புதுமைப்பித்தனின் மறைவை ரகுநாதன் "30 . 06 .1948 அன்றிரவுக்கு பின் உலகுக்கெல்லாம் விடிந்தது ஆனால் புதுமைப்பித்தனுக்கு விடியவே இல்லை" என்று பதிவு செய்கிறார். புதுமைப்பித்தனது மனைவி கமலாம்பாள் " எழுதிஎழுதிக் கையும் வீங்கிற்றே உயிரும் கொடுத்தாயே" என்று ஆதங்கம் கலந்த வருத்தத்துடனே பதிவுசெய்கிறார்.
விருத்தாச்சலம், என்ற ஊர் பெயரை இயற்பெயராக கொண்டவர் பின்னாட்களில் "புதுமைப்பித்த"னாகி, அப்பெயரை தமிழ் சிறுகதை உலகின் தனித்துவமிக்க அடையாளமாக மாற்றி கொண்டதில் தெரிகிறது அவர் வாழ்ந்த வாழ்க்கையின் சுவடு.
புதுமைப்பித்தன் பற்றிய ஆழ அகலங்களை இந்நூல் பதிவுசெய்துள்ளது என்றால் அது மிகையல்ல. இது தவிர்த்து நூலின் பின்னிணைப்பாக “புதுமைப்பித்தன்: வாழ்வும் எழுதும்” என்ற தலைப்பில் சுந்தர ராமசாமிக்கு ரகுநாதன் அளித்த பேட்டி ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
ஒரு நிறைவான வாசிப்பனுபவத்தை கொடுப்பதில் அந்த பேட்டியும் முக்கிய காரணியாக அமைந்துள்ளது. நூலின் இறுதியில் புதுமைப்பித்தனின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளது, அவரின் குடும்பம், இறுதி நாட்களில் அவர் தங்கி இருந்த வீடு ஆகியவை எல்லாம் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
என்னை பொறுத்தவரை ஒரு படைப்பின் நோக்கம் என்பது அதன் கருப்பொருள் குறித்தான தேடலை வாசகருக்கு கடத்த வேண்டும், அதனடிப்படையில் பார்த்தால் இந்நூல் அதில் வெற்றி கண்டுள்ளது என்பேன்.
புதுமைப்பித்தன் படைப்புகள் மீதான ஆர்வத்தை உண்டாக்கியதால், “புதுமைப்பித்தன் வரலாறு” என்ற தலைப்புக்கு இந்நூல் நியாயம் செய்துள்ளது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசியுங்கள், புதுமைப்பித்தனின் உலகத்திற்கு தொ.மு.சி. ரகுநாதன் உங்களை கை பிடித்து அழைத்து செல்வார்.
காலச்சுவடு
Comments
Post a Comment