/நாவலும் வாசிப்பும்/


    



 கடைசியாக முழு  நாவல் படித்து 2 ஆண்டுகள் இருக்கும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நாவல்கள் தான் , சமீபத்தில் பிரான்சிஸ் கிருபா எழுதிய "கன்னி" நாவலை எடுத்துவைத்து இரண்டு நாள் படித்துவிட்டு தொடர முடியாமல் மூடிவைத்துவிட்டேன். சில சமயம் நாவல் தலைமுறை மலை ஏறி போய்விட்டதா என்று அச்சமும் ஏற்படும். 


இன்றைய சூழலில் எழுதப்படும் முகநூல் கவிதைகள் போல் 1920களில்  புற்றீசல் கணக்கில் நாவல்கள் எழுதப்பட்டிருக்கிறது. காலனியத்தின் மூலம் உருவான நவீனத்திற்கும் பூர்வீக மரபுக்கும் இடையே சிக்கிக்கொண்டு நாவல்கள் படாத பாடுபட்டுள்ளது. பின்னர் ஒரு கட்டத்திற்கு மேல் அது சமூகத்தில்  அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டு தன்னை நிலைநிறுத்திக்  கொண்டது.  


திரு. சலபதி எழுதிய “The Province of The Book: Scholars, Scribes and Scribblers in Colonial Tamilnadu” நூலின் ஒரு சில பகுதிகள் கூடுதல் தகவல்களோடும் நாவல் பற்றி 20களில் எழுதப்பட்ட கருத்துக்களை கொண்ட பின்னிணைப்புகளோடும் "நாவலும் வாசிப்பும்" என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 


நாவலின் வருகையை அச்சு பண்பாட்டின்  பெருக்கம் என்றும், வாசிப்பின் ஜனநாயகமாக்கம் என்றும், புரவலரடமிருந்து சந்தை நோக்கிய நகர்வு என்றும் புரிந்துகொள்ளலாம். நாவல்களின் வருகைக்கு பிறகு தான் வாசிப்பு முறையிலும் மாற்றம் ஏற்பட தொடங்குகிறது. 


சுவடிகளில் எழுதப்பட்ட பழங்கால இலக்கியங்கள் எல்லாம் எளிதில் மனப்பாடம் செய்யும் விதத்தில் ஓசை நயத்துடன் அமைந்திருப்பதற்கு காரணமாக, ஒற்றை ஆதாரமாக அமைந்துபோன சுவடிகளையே சொல்லவேண்டும். அந்த வகையில் நாம் அனைவரும் அச்சு தொழில்நுட்பத்திற்கு கடமைப்பட்டுள்ளோம். 


இசை கச்சேரிகள் போன்று நடந்த வாசிப்பு கூட்டங்கள் எல்லாம் மௌன வாசிப்பாக மாறி அகநிலை(Subjective) சார்ந்த ஒன்றாக மாறிபோனதற்கு நாவல்களின் வருகை முக்கிய பங்காற்றியது எனலாம். 


காலனியத்தால் அதிகம் தாக்கம்பெற்று பயனடைந்த நடுத்தர வர்கத்தின் தலையாய பண்பாட்டு வடிவமாக நாவல்களை குறிப்பிடுகிறார் சலபதி. 


‘வாசகர்கள்: பரப்பும் பின்புலமும்’ என்று ஒரு பகுதி இந்நூலில் இடம்பெற்றுள்ளது, கிடைக்கும் தரவுகளை வைத்து அந்த காலத்தில் இருந்த வாசக பரப்பையும் அவர்களின் சமூக பின்புலங்களை பதிவுசெய்துள்ளார். நகரங்களை தாண்டி சில கிராமங்களிலும் வாசக பரப்பு குறிப்பிடத்தகுந்த அளவில் இருந்துள்ளது. நடுத்தர வர்க்க பெண்கள் நாவல்களை அதிகளவில்  நுகர்வோராக இருந்துள்ளார்கள். பர்மா, சிலோன், மலேயா, போன்ற தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதிகளிலும் வாசகர் பரப்பு விரிந்துள்ளது. 


நூலின் இறுதி பகுதியில் அந்த காலத்தில் நாவல் எழுதியவர்கள் பற்றிய  (கல்கிக்கு முன்பு வரை)  சிறு குறிப்பு இடம்பெற்றுள்ளது. அவர்கள் எழுதிய நாவல்களை தழுவி சில திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன. 


அந்த காலத்தில் நாவல்களை மக்கள் எப்படி பார்த்தார்கள் என்பது பற்றி எழுதப்பட்ட சிரிப்பூட்டும் சில கட்டுரைகள் பின்இணைப்பாக இடம்பெற்றுள்ளது. 



தமிழ் சமுகத்தில் நாவலின் வருகை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் மக்களிடம் அது எத்தகைய ஏற்பு மறுப்புகளை பெற்றது என்பதை பற்றியும் இச்சிறுநூல் சுருக்கமாக பேசியுள்ளது. 



சுவாரசியமான நூல் தான். புத்தகங்கள் மீது  ஆர்வம் இருப்பவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.  



காலச்சுவடு



Comments

  1. சிறப்பான அறிமுகம் அருமையான பதிவு🙏🙏

    ReplyDelete

Post a Comment