பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும்
பெரியாரை தத்துவ நோக்கில் வாசித்தால், ஏற்படும் வியப்பை வார்த்தைகளால் சொல்ல முடியாது. தமிழ் ஆய்வு சூழலில் தத்துவ நோக்கில் பெரியார் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறைவு என்றே தோன்றுகிறது. சமகாலத்தில் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் நடந்தாலும், தரவுகளாக எஞ்சி இருப்பவை சிலவே.
பெரியாரை முழுமையாக வாசிக்காமல் , பகுதி பகுதியாக பின்நவீனத்துவ முறையில் வாசித்து பார்த்தால்(அ.மார்க்ஸ் இதை முயன்று இருக்கிறார் ) தத்துவார்த்த ரீதியாக பல புதிய பரிமாணங்கள் புலப்படும் என்று தோன்றுகிறது.
300 400 பக்கத்துக்கு எழுதப்பட வேண்டிய ஒரு நூல் 80 பக்கங்களில் முடிந்தால், அது ஏற்படுத்தும் தேடலை சுயமாக தான் தேடி தீர்க்கவேண்டும். விரிவாக ஆய்வு நோக்கில் எழுதப்படவேண்டிய அளவுக்கு ஆழ அகலங்களை இந்நூலின் ஒவ்வொரு கட்டுரைகளும் கொண்டுள்ளன. குறிப்பாக பெரியாரின் மொழி குறித்தான பார்வையாக இருக்கட்டும், அல்லது கம்யூனிஸ்டுகளுடன் அவர் கொண்டிருந்த முரணாக இருக்கட்டும், சிந்தனை அளவில் அவர் முன்வைத்த விடுதலை கோட்பாடுகளாக இருக்கட்டும் இவை எல்லாம் பெரியார் ஆய்வில் தேங்கி நிற்கும் இடங்கள்.
பெரியார் பேசிய சமதர்மத்தை - ‘சுயமரிதை சமதர்மம்’ என்று வரையறுத்து SV. ராஜதுரை மற்றும் வ.கீதா ஆகியோர் விரிவாக எழுதியுள்ளார்கள். MSS பாண்டியன் தனது ஆய்வுகளில் பெரியாரின் அரசியல் செயல்பாடுகள் குறித்து எழுதும்போது பல தத்துவ புள்ளிகளையும் தொட்டு சென்றிருப்பார்(also see: 'Denationalising' the Past: 'Nation' in E V Ramasamy's Political Discourse, EPW, 1993). அந்த வகையில் இந்நூலின் இறுதி இரண்டு இயல்கள் பேசும் கருத்துக்களை முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கிறேன்.
குறிப்பாக பெரியார் மேற்கொண்ட வர்கம்-வகுப்பு குறித்த உரையாடலாக இருக்கட்டும், அல்லது பார்ப்பனர் என்ற சமூக வகைமை ஏன் அழிய வேண்டும் என்று பெரியார் ஏன் நினைத்தார் ஆகியவை எல்லாம் சமகால அரசியல் சூழலிலும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளாவே இருக்கிறது.
சமீபத்தில் வெளியான “Periyar - A study in Political Athiesm” புத்தகத்தில் பெரியாரை Bakuninக்கு நெருக்கமாக வரும் Anarchistஎன்று நிறுவ முயன்றுள்ளார் Karthick Ram Manoharan . ஆனால் 'குடிஅரசு' என்ற பத்திரிகையை தொடங்கி, குடியை(மக்களை) மையமாக வைத்து சாதி மத வர்க்க வேறுபாடுகளற்ற ஒரு நவீன குடியரசை பெரியார் சிந்தித்திருந்தார். அப்படி இருக்கும்போது அவரை Anarchistஎன்று சொல்லிவிட முடியுமா என்ற கேள்வியும் இந்நூல் மூலம் எழுகிறது.
சிங்காரவேலரும் பெரியாரும் நவீன தமிழ் தத்துவ சிந்தனையின் முன்னோடிகளாக சொல்லலாம் என்பதற்கான காரணங்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது, அவை எல்லாம் ஒரு முனைவர் பட்ட ஆய்வுக்கான கருத்தை கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
என்னளவி,ல் இது பெரியாரியல் ஆய்வில் வெளிவந்த புத்தகங்களில் முக்கியமான ஒன்று. இன்னும் நீட்டி எழுதியிருக்கலாம், ஆனால் முன்னுரையில் அவரே இதை ஒப்புக்கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் இந்த குறை தீரும் என்று நம்பலாம்.
வாய்ப்பிருக்கும் நண்பர்கள் அவசியம் வாசிக்கவும்.
பெரியாரும் சில தத்துவ விசாரணைகளும்
க. காமராசன்
ரிவோல்ட்
Comments
Post a Comment