PERIYAR: A Study in Political Atheism // Book Review
―
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை(aka நாத்திகம்) பற்றியும் பகுத்தறிவு, பற்றியும் தத்துவார்த்த ரீதியில் எழுதப்பட்ட புத்தகம் என்றால் ஏ. எஸ். கே. எழுதிய “பகுத்தறிவின் சிகரம் பெரியார் ஈ.வெ.ரா” என்ற நூலை குறிப்பிட்டு சொல்லலாம். இந்திய தத்துவ மரபில் பெரியாரை நாத்திக மரபின் தொடர்ச்சியாக முன்னிறுத்தி இந்நூல் அமைந்திருக்கும்.
அது போலவே பெரியாரை மேற்குலக சிந்தனையாளர்களோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகம் Prof. R. Perumal எழுதிய “Periyar A comparative Study”. இது அரைகுறையான ஆய்வேயாகும்.
ஆ.மார்க்ஸ் எழுதிய “பெரியார் ?” என்கிற புத்தகத்திலும் மேலை நாட்டு கருத்துக்களோடு செய்யப்பட்ட ஒப்பீடுகள் இடம்பெற்றிருக்கும். பெரியாரை Anarchist என்பார், மேலும் நீட்சேவில் கடவுள் மறுப்பு கொள்கையுடன் பெரியாரின் நாத்திகத்தை ஒப்பிட்டிருப்பர். இது தத்துவார்த்த அடிப்படையில் குறிப்பிடத்தகுந்த படைப்பு.
M.S.S.Pandian எழுதிய “Brahmin and Non-Brahmin: Genealogies of the Tamil Political Present” என்ற புத்தகத்தில் பெரியார் குறித்த பகுதியில், பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை திராவிட இயக்க அரசியல் அணிதிரட்டலின் அடிப்படையாக குறிப்பிட்டு முன்னிலை படுத்தி இருப்பார். அயோத்திதாசராலும், மறைமலை அடிகளாலும் சாத்தியப்படாத அரசியல் அணிதிரட்டல் பெரியாரால் சாத்தியப்பட்டதற்கு பெரியாரின் பகுத்தறிவு கொள்கையே காரணம் என்பதன் அடிப்படையில் அந்த இயல் அமைந்திருக்கும்.
இந்த புத்தகங்களின் தொடர்ச்சி என்பதை விட பெரியாரின் நாத்திகத்தை அரசியல் ரீதியாக அணுகி அதை ஒரு கோட்பாடாக நிறுவும் புத்தகமாக Karthick Ram Manoharan எழுதி சமீபத்தில் வெளியான “PERIYAR: A Study in Political Atheism” என்ற நூலை குறிப்பிடலாம்.
பெரியாரின் கடவுள் மறுப்பு கொள்கை என்பது அரசியல் சார்ந்த நாத்திகம் என்பதை 5 இயல்கள் மூலம் இந்நூல் வாயிலாக நிறுவுகிறார். இவை 5 கட்டுரைகளும் தரவுகளை அடிப்படையாக வைத்து ஆய்வு நோக்கில் எழுதப்பட்டவை.
“A complete rationalist as Anti-philosopher” என்று தலைப்பிடப்பட்டிருக்கும் முதல் இயல், சமீபத்தில் பெரியார் குறித்து நான் படித்த கட்டுரைகளில் ஆகச்சிறந்த ஒன்று. சுருக்கமாக 40 பக்கங்களில் திராவிட இயக்க வரலாற்றை கூறி சென்றிருப்பார்.
இந்தியாவில் நிலவும் பார்ப்பனீயம் என்ற அரசியல் இறையியல் தத்துவத்திற்கு(Political Theology) எதிரான ஒன்றாக பெரியாரின் அரசியல் நாத்திகத்தை(Political Atheism) சொல்லலாம். அவரின் அரசியல் நாத்திகம் என்பது கடவுளுக்கும்(God), அரசுக்கும்(State) எதிரான ஒன்றாகவே இருந்தது. பார்ப்பனிய தத்துவத்தின் இறையியல் வடிவமான கடவுள் கோட்பாட்டையும்(God/hinduism/caste as the theological form of Brahminism), பார்ப்பனிய தத்துவத்தின் மதசார்பற்ற வடிவமான இந்திய அரசையும்(Indian State as Secular form of Brahminism) அவர் எதிர்க்கவே செய்தார்.
Aristotle, Kant, Hegel போன்ற தத்துவவியலாளர்கள் எல்லாம் அமைப்பை உருவாக்கும் தத்துவத்தை முன்வைத்தார்கள் என்றால் , அத்தகைய அமைப்பை மாற்றவேண்டும் என்று நினைத்த Marx, Nietzsche, Bakunin ஆகியோர் வரிசையில் பெரியாரை எதிர்- தத்துவவியலாளர்(Anti-Philosopher) என்று கொள்ளலாம். பெரியாரின் அரசியல் நாத்திகத்தை இத்தகைய எதிர்-தத்துவமாக(Anti-Philosophy) நூல் ஆசிரியர் வரையறை செய்கிறார்.
அடுத்த இயல் Political Atheism(Marxism, Anarchism, Periyarism), பெரியாரின் அரசியல் நாத்திகத்தை Marxism, Anarchism ஆகியவற்றோடு ஒப்பிட்டு மார்க்சியத்தை விட Bakunin பேசிய Anarchismஉடன் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளது என்கிறார். இதற்கான வியாக்கியனங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
கடவுளையும் அரசையும் நிராகரிக்கும் பெரியாரின் தத்துவம் என்பது எல்லாவித ஆதிக்க அமைப்புகளுக்கும் எதிரான ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு பகுத்தறிவுவாதிக்கு மனித நாகரிக முன்னேற்றத்தில் தான் பற்றுதல் இருக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.
பெரியார் ஒரு கோட்பாட்டுவியலாளரோ தத்துவவியலாளரோ இல்லை அவர் காந்தியை போல் சூழ்நிலைகளின் அடிப்படையில் முடிவுகளை எடுத்தார், திட்டங்களை தீட்டி கொள்கைகளை வகுத்துக்கொண்டார். இதன் அடிப்படையாக சாதி ஒழிப்பை முன்னிறுத்தும் பகுத்தறிவு நாத்திக கொள்கை அமைத்திருந்தது. எவ்வித ஆதிக்கமும் அற்ற ஒரு சமுதாயத்தை தான் பெரியார் சிந்தித்தார் என்பதை இந்த இயலின் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த இயலில் இந்திய கம்யூனிஸ்டுகளோடு பெரியார் கொண்டிருந்த முரண்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Ramasamy and Ramayana என்ற இயலும் Emancipation through Conversion என்ற இயலும் இந்திய அரசியலில் தாக்கம் செலுத்திய மூன்று முக்கிய மதங்களை(Buddhism, Islam, Hinduism) பெரியார் எப்படி அணுகினர் என்பதன் அடிப்படையில் அமைந்துள்ளது.
சமீபத்தில் வெளிவந்த "நான் இந்துவாக இறக்க போவதில்லை(காட்டாறு)” என்ற புத்தகம் இஸ்லாம் குறித்து பெரியார் எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பாக வெளியாகி இருந்தது, அதை வைத்து பெரியாரை தீவிர இஸ்லாம் ஆதரவாளராக சித்தரிக்கும் தொனியும் ஆங்காங்கு தென்பட்டது, பெரியாரின் இத்தகைய மதமாற்ற கொள்கை எதன் அடிப்படையில் அமைந்தது என்பதையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாத்தை விட பௌத்தத்தை பெரியார் பகுத்தறிவுக்கு உகந்த மதமாகவும், தத்துவார்த்த ரீதியில் தனது அரசியல் நாத்திகத்திற்கு நெருக்கமான மதமாகவும் கருதினார். ஆனால் தற்கால இஸ்லாமும் பௌத்தமும் பெரியாருக்கு உவப்பான ஒன்றாக அமைய வாய்ப்பில்லை. சிறந்த மதம் என்பதை விட நாத்திகத்தையே பெரியார் விரும்பினார். இந்த இரு இயல்களும் பெரியாரின் மதம் குறித்த பார்வையினை தெளிவாக விளக்குகிறது.
புத்தகத்தின் அதி முக்கியமான மற்றும் சமகால பொருத்தமுடைய பகுதி என்றால் “Periyar for our Times” என்ற இறுதி பகுதியை சொல்லலாம்.
சமகாலத்தில், ஒருபுறம் மதவாதம் உலகெங்கும் பல்வேறு வகையில் தலைவிரித்தாடுகிறது, மறுபுறம் நாத்திகம் என்பது தீவிரமான கடவுள் மறுப்பு என்பதோடு சுருங்கிவிடுகிறது.
தமிழ் நாட்டில் பெரியார் ஏற்படுத்திய திராவிட இயக்க அரசியலின் வெற்றி என்பது மதத்தை தனிநபர்க்குட்பட்ட ஒன்றாக மாற்றியதிலும் அரசியலை மதசார்பற்ற ஒன்றாக பக்குவப்படுத்தியதிலுமே இருக்கிறது. பெரியாரின் இந்த அரசியல் தமிழ்நாட்டு ஆட்சியாளர்களை மத அரசியல் செய்யாமல் மக்கள் நல அரசியலை முன்னிறுத்தும் திராவிட மாடல் அரசியலாக மாற்றியுள்ளது.
பெரியாரின் சுதந்திரவாதம்(Radical Freedom) என்பது அரசு, மதம், சாதி, பாலினம் ஆகிய ஆதிக்க அமைப்புகளிடம் இருந்து விடுவித்து கொள்வதிலும், அவற்றை எவ்வித தயக்கம் இன்றி கேள்விக்குட்படுத்துவதிலுமே இருக்கிறது. கடவுளும், மதங்களும் அரசுமற்ற ஒரு சமுதாயத்தை பெரியார் சிந்தித்தார். இவையே பெரியாரின் மானுட விடுதலை கோட்பாடாக இருந்தது. இப்படியாக இந்நூல் நிறைவுபெறுகிறது.
பெரியார் குறித்து வெளியான ஆங்கில புத்தகங்களில் இந்நூல் முக்கியமான ஒன்று, முற்போக்கு சாதி ஒழிப்பு அரசியல் பேசும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
P.S:
நூல் ஆசிரியருக்கு ஒரு கேள்வியோடு இப்பதிவை நிறைவுசெய்ய விரும்புகிறேன். Bertrand Russellன் பகுத்தறிவு பேசும் புத்தகங்களான “What i Believe”, “Political Ideals” , “Why I’m not a christian” also “Authority and Individual” ஆகியவற்றை படிக்கும் போது பெரியாரின் நாத்திக தத்துவதோடு ஏதோ ஒரு வகையில் பொருந்தி போவதை அவதானிக்க முடிகிறது. இந்நூலில் கூட பெரியார் கொண்டிருந்த மனிதநேய கோட்பாடு விளக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் இடையில் நிலவும் இந்த கோட்பாட்டு ஒற்றுமையும் பெரியாரின் நாத்திகத்தில் அடங்கும் தானே? அல்லது பெரியாரை எதிர்- தத்துவவியலாளர் என்பதால் ஒப்பிடமுடியாத?
PERIYAR: A Study in Political Atheism
Karthick Ram Manoharan
Orient Black Swan
Comments
Post a Comment