Sumitra and Anees- Tales and Recipes from a Khichdi Family

 




உணவு, உடை, மொழி, காதல், கல்வி என அனைத்திலும் சாதி மதரீதியிலான பிரிவினை உருவாக்கப்படும் இக்கட்டான காலகட்டத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம். ஒரு விதத்தில் பார்த்தால் சாதி மதம் போன்ற அடையாளங்கள் எல்லாம் தோன்றுவதற்கு முன்பிருந்தே உணவு, உடை, காதல், மொழி, கல்வி எல்லாம் மனிதனுக்கு அறிமுகமாகி இருந்தது. இவை எல்லாம் தான் மனிதனின் சிந்தனை வளர்ச்சியின் வெளிப்பாடாக இருந்துள்ளது.


சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த இஸ்லாமிய சாதிய ஆணவக்கொலையாக இருக்கட்டும், அல்லது இந்தியா முழுக்க நடக்கும் பார்ப்பனிய சாதிய ஆணவக்கொலையாக இருக்கட்டும் ஒரு தனிமனிதனின் முடிவுகளை நிராகரிக்க கொலை செய்யும் அளவுக்கே செல்லும் சமூகமாகவே இந்தியச் சமூகம் இன்றளவும் இருக்கிறது.

இன்றைய நிலை இப்படி இருக்கையில் 1960களில் நேரு மறைந்த பிறகு இந்தியா-பாகிஸ்தான் 1965 போர் நடந்து முடிந்த பிறகு லால் பகதூர் சாஸ்திரி இறந்த அடுத்தநாள், இந்தியாவின் தலைநகரத்தில் தென்னிந்தியாவை சேர்ந்த ஒரு இந்து பெண்ணும் வடஇந்திய இஸ்லாமிய ஆணும் திருமணம் செய்து கொண்டார்கள். ஆணை விட பெண் 8 வயது மூத்தவர். இவர்களின் கதையை இன்றைய அரசியல் சூழல் கருதி அவர்களது மகள் Seema Chishti புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். இதற்கு முன் இதே வகைமையில் சட்டநாதனின் நினைவுக்குறிப்பான “Plain Speaking - A Sudra Story” படித்த நியாபகம் .

“Sumitra and Anees- Tales and Recipes from a Khichdi Family”நூலில் Sumitra & Anees இருவர் பற்றிய கதைகளும், இந்நூல் ஆசிரியருக்காக அவரது அம்மா எழுதிய உணவு குறிப்புகளும், இறுதியாக உணவு பற்றி Vir Sanghviஎழுதிய அசத்தலான கட்டுரையும் இடம்பெற்றுள்ளது.

உணவு குறிப்புக்கள் எல்லாம் உள்ளடக்கிய ஒரு Family Biography புத்தகத்தை இப்போது தான் பார்க்கிறேன். அந்த உணவு குறிப்புகளை பார்க்கும் போது இந்து- முஸ்லீம் உணவு வகைகள் சங்கமிக்கும் இடமாக அவர்களது சமையல் அரை இருந்துள்ளதென்பது நிரூபணமாகிறது.

கிச்சடி என்பது இங்கு பிற நம்பிக்கைகளை ஏற்றுக்கொண்டு வாழும் ஒரு குடும்பத்தின்/சமையல் அறையின் அம்சமாக குறிப்பிடப்படுகிறது. கிச்சடியில் கறியும் சேர்த்து சமைக்கும் வழக்கம் ஒரு காலத்தில் இருந்துள்ளதாக நூலின் இறுதியில் குறிப்பிடுகிறார் Vir sanghvi.

இவர்களின் திருமணம் நடந்து முடிந்த பிறகு அவர்களின் குடும்பங்களும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை படித்தபோது மகிழ்ச்சியாக இருந்தது.

கடந்தாண்டு வெளியான ‘Whole Numbers and Half Truths’ என்ற புத்தகத்தில் திருமணம் என்று வரும்போது பெரும்பாலான இந்தியர்கள், வயது வித்தியாசங்களுக்கு அப்பாற்பட்டு, பழமைவாத மனநிலை கொண்டவர்களாகவே இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரம் ஒன்று இடம்பெற்றிருந்தது. ஒரே சாதியில் ஒரே மதத்தில் தான் திருமணம் செய்துகொள்வேன் என்று அதில் பெரும்பாலான இந்தியர்கள் கூறியுள்ளார்கள்.

இன்றைய நிலை இப்படி இருக்க அன்றைக்கு இருவருக்கிடையே இருக்கும் அன்பையும் நட்பையும் தவிர எதுவும் பெரிதல்ல என்று வலுவான முடிவை எடுத்த Sumitra & Anees நமக்கெல்லாம் உந்துசக்தி தான்.

வரலாறோடு சேர்த்து உணவு குறிப்புகளும் நூலில் சரிபாதி பக்கங்களை நிரப்பியுள்ளது, படிப்பவர்களும் கூட இதிலுள்ள உணவு வகைகளை வீட்டில் செய்துபார்க்கலாம்.

இங்கு நீண்ட நாட்களாக இருக்கும் பிரியாணி முதல் கொண்டு நேற்று வந்த Shawarma வரை அனைத்தும் பன்மைத்துவத்தின், நம்பிக்கை கலப்பின், சிந்தனை பரிமாற்றத்தின் அடையாளமாகும். உணவுக்கு பின்னுள்ள வரலாறு என்பதும் இந்த அம்சங்களின் பிரதிபலிப்பே.

வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தையில் தான் சாதி, மதம் இருக்கிறதென்றால் வாயுக்குள் செல்லும் உணவுக்கும் எதற்கு சாதி, மதம்? என்ற கேள்வியை உணவுக்கு மத சாயம் பூச முயலும் மதவாதிகளிடம் நாம் கேட்கவேண்டும்.

அத்தகைய கேள்வியை ஏன் எழுப்பவேண்டும் என்பதற்கான வரலாற்று காரணங்களை இந்நூல் பதிவுசெய்துள்ளது.

வாய்பிருப்போர் வாசிக்கவும்.

Roja Muthiah Research Library நடத்திய ஒரு நிகழ்ச்சியின் மூலம் தான் இந்நூல் எனக்கு அறிமுகமானது. அந்த நிகழ்வை ஏற்பாடு செய்த நூலகத்தாருக்கு என் அன்பும் நன்றியும்.

Sundar Ganesan








Comments