தோன்றாத் துணை


  


சலபதியை முதல் முறை சந்தித்தபோது, அவர் எனக்களித்த புத்தகங்களில் பெருமாள் முருகனின் "தோன்றாத் துணை" நூலும் இருந்தது.எனக்கு இவ்வளவு நெருக்கமாக இருக்கும் என்றெண்ணி அவர் கொடுத்தாரா என்று தெரியவில்லை.  கிட்டத்தட்ட ஒரு 8 ஆண்டுகளாக கிராம வாழ்க்கையின் சுவடையே அறியாமல் இருக்கும் எனக்கு இந்நூல் பல பால்யகால நினைவுகளை கிளறிவிட்டது. பெருமாள் முருகன் வாழ்ந்த அதே நிலவமைப்பை நான் வாழ்ந்த கிராமத்தோடு பொருத்தினால் முக்கால்வாசி பொருந்திப்போகும். மானாவாரி சாகுபடி, வானம் பார்த்த பூமி,  கிணற்று பாசனம், பஞ்சம் வரும் சமயத்தில் ஆழ்துளை  கிணற்று பாசனம், ஆடு, மாடு, அதற்கு உணவு, சுற்றி சில மரங்கள் என அத்தனையும், அதை சுற்றிய கதைகளை நானும் நேரில் வாழ்ந்திருக்கிறேன். 


 "தோன்றாத் துணை"  நூலில் பெருமாள் முருகனின் அம்மாவை பற்றிய கட்டுரைகளை படிக்கும்போது எனக்கு என் அம்மா, அம்மாவின் அம்மா, அப்பாவின் அம்மா என எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களுடனான பல நினைவுகளை இந்த நூல் கிளறிவிட்டது. கிராமம் குறித்தான நினைவுகள் ஏராளம் இன்றைக்கும் என்  நினைவில் இருப்பதை நினைத்து வியந்து கொண்டேன். 


பெருமாள் முருகன் எழுத்துக்களுக்கு நான் அறிமுகமானது, ‘மாதொருபாகன்’ சர்ச்சை எழுந்த சமயத்தில் தான். மூன்று நாள் எடுத்து அந்நூலை படித்து முடித்தது நினைவிருக்கிறது. எப்போது பூவரசன் மரத்தடியில் படுத்தாலும் அந்நூல் நினைவுக்கு வந்துவிடும். அரசியல் எல்லாம் தெரியாத வயதில் அந்நூலை வாசித்தேன். இப்போது மீண்டும் எடுத்து படிக்க வேண்டும். 


கொரோனா காலகட்ட ஊரடங்கில் ஓராண்டு வீட்டில் இருக்க நேர்ந்தது. ஆடுகளை பார்த்துக்கொள்வதும் மேய்ச்சலில் பிடித்து காட்டுவதும் வழக்கம். பூனாச்சி நாவலை அப்போது தான் வாசித்தேன். ஆடுகளுக்கு பெயர் வைக்கும் பழக்கம் எனக்கிருந்தது, செவ்வாழை, புளுகாண்டி, கருத்தம்மா, கருவாயன் என்பவை நினைவில் இருப்பவை. ஆடுகளின் மீதான பிரியம் என் வாசிப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 


பெருமாள் முருகன்  சிறுகதைகளை நேரம் கிடைக்குபோது  படிப்பேன், மாலைநேர தேநீர், உள்ளத்தில் எழுதிய முகம், எருமைச் சீமாட்டி போன்றவை சமீபத்தில் வாசித்தவை. ‘எருமை சீமாட்டி’ கதையில் வரும் பெண் பெருமாள் முருகனின் தாய் தான் என்பது படிக்கும்போதே தெரிந்தது. கண் கலங்கவைத்த கதை அது. சேத்துமான் பார்ப்பதற்கு முன்பே 'வறுகறி' சிறுகதையை வாசித்தேன், பன்றிக்கறி பற்றிய  நினைவுகளை அந்நூல் தூண்டி விட்டது. அதை சுற்றி நடக்கும் அரசியலையும் தான். 


 இவை தவிர்த்து அவர் காலச்சுவடு இதழில் எழுதும் கட்டுரைகள், நினைவு அஞ்சலி குறிப்புகளை தவறாமல் படிக்கும் பழக்கம் எனக்குண்டு. அவர் பதிப்பித்த 'சாதியும் நானும்' கட்டுரை தொகுப்பு நூலை படித்துவிட்டு சிறு அறிமுகம் எழுதி இருந்தேன். இப்படி பகுதி பகுதியாக 2016 இல் இருந்தே எனக்கு அவரது எழுத்துக்கள் பரிச்சயம். நான் இதுவரை வாசித்த அனைத்து நூல்களுமே நல்ல வாசிப்பனுபவத்தை கொடுப்பவை. 


இந்நூலின் அணிந்துரைக்கு , நூலை வாசிக்கவேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியதில் பெரும்பங்குண்டு . மாமியார் பற்றிய நூலுக்கு அணிந்துரை எழுத எதனை மருமகள்கள் முன்வருவார்கள் என்று தெரியவில்லை.  ஒரு மருமகளுக்கு மாமியார் பற்றிய எண்ணம் இவ்வளவு நேர்மறையாக இருப்பதை நினைத்து வியந்தேன். அதற்கு இருவருமே காரணம் என்பதை சொல்லி தெரியவேண்டியதில்லை. 


'அம்மாவின் இதயத்தால் சுவாசிக்கிறன்' என்று பெருமாள் முருகன்  எழுதி இருக்கும்  முன்னுரையும் 'காற்று வழி பயணம்' என்ற கடைசி இயலும் நமக்கு மிகவும் பிடித்த ஒரு உயிரின்  தோற்றத்தையும் மறைவையும் சொல்லிச் செல்லும் தலைப்புகள். 


அனைத்து கதைகளுடனும் என்னை பொருத்திக்கொள்ள முடிந்தது, முறுக்கு சுடுவது, எள்ளு வயல் பற்றிய குறிப்புக்கள், கடலை கொடி ஆய்ந்து போடுவது , ஆடுகளுடனான கதைகள், மரங்களை பராமரிக்கும் விதம்,  விதைப்பு, அறுவடை  என புற சூழலை ஒத்த கதைகள் ஏற்படுத்திய உணர்வு தனி . 


அம்மா - மகனுக்கிடையில் நிலவும் இன்பம், துன்பம், பாசம், பரிவு, சண்டை, அழுகை, பிரச்சனை, கோபம் போன்ற அகம் சார்ந்த நினைவு உணர்வுகளையும் இந்நூல் ஏற்படுத்தியது. இந்த அகம் சார்ந்த நினைவுகள் தான் எனக்கு அம்மாவோடு சேர்த்து பாட்டிகளையும் நினைவு படுத்தியது. 


இப்படி எல்லா கதைகளோடும் எனக்கு ஏற்படும் நெருக்கத்துக்கு வட்டார மொழியும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் நிலவமைப்பு, விவசாய முறை, சமூக-பொருளாதார சூழல், குடும்ப பின்னணி ஆகியவை இதர காரணங்கள் என்று நினைக்கிறேன். அம்மா பற்றிய கட்டுரைகளாக இருப்பதால் அகம் சார்ந்த கதைகளோடு படிக்கும் அனைவருக்கும் அணுக்கம் ஏற்படும் . எனக்கு புற சூழலோடும் அத்தகைய அணுக்கம்  இருந்தது. 


இன்னொருபுறம் கிராமத்து பெண்கள் சந்திக்கும் சவால்களையும் அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதத்தையும், ஆண் மயப்பட்ட சமூக சூழலில் பெண்கள் தங்களை எப்படி நிலைநிறுத்தி கொள்கிறார்கள் போன்றவற்றையும் இந்நூலை படிப்பவர்கள் அவதானிக்க முடியும். ஒரு பெண்ணின் உழைப்பை  வியக்கும் அதே வேளையில் அதில் அடைந்திருக்கும் சுரண்டல்களையும் நாம் பேசியாக வேண்டும். 


பல துணைகளை நினைவில் தோன்றவைத்த தோன்றாத் துணைக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்.  இத்தொகுப்பை எழுதிய பெருமாள் முருகனின் நினைவாற்றலை எண்ணி வியக்கிறேன். என் பால்யகால நினைவுகளை மீண்டும் அசைபோட வைத்தமைக்கு அன்பும் முத்தங்களும். 





Comments