SOUTH vs NORTH : India’s Great Divide - நூல் அறிமுகம்
திராவிட முன்னேற்றக் கழகம் 1951இல் திராவிட நாடு தனியரசு கோரிக்கையை முன்வைத்து சில கட்சிகளுக்கு(Tamilnadu Toilers Party & CommonWeal Party) தேர்தலில் ஆதரவளித்தது, இது நடந்து சற்றேறக்குறைய 70 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்நாடு அரசு, ஒன்றிய-மாநில உறவுகளை ஆராய ராஜமன்னார் தலைமையில் குழு அமைத்து இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள். இப்படி அதிகார குவிப்புக்கு எதிரான ஒரு இயக்கம் தொடர்ந்து அமைதியாகவும் வெகுண்டெழுந்தும் தமிழ்நாட்டில் நடந்துவந்திருக்கிறது.
ஒன்றியத்தில் ஒரு கட்சி கட்டற்ற அதிகாரத்துடன் ஆட்சி செய்யும்போது இவெழுச்சி பலம்பெறுகிறது. இதுபோன்ற சமயங்களில் சுற்றி நடக்கும் உரையாடல்கள் எல்லாம் பெரும்பாலும் மாநில சுயாட்சி சார்ந்த ஒன்றாகவே இருந்துவந்துள்ளது. 70களில் நடந்த மாநில சுயாட்சிக்கான சமர் அந்தச் சமயத்தில் முக்கியமான நூல்கள் வெளிவருவதற்கு காரணமாக இருந்தது. முரசொலி மாறன் எழுதிய 'மாநில சுயாட்சி' அவகையை சேர்ந்த ஒன்று. இன்றைக்கு நடக்கும் சமருக்கு வலுசேர்க்கும் வகையில் வெளியாகி இருக்கும் நூல் தான் "SOUTH vs NORTH : India’s Great Divide". Neelakandan RS இந்நூலை எழுதி இருக்கிறார். இதற்கு முன் வெளியான The Paradox of India’s North–South Divide (Kala Seetharam Sridhar, Samuel Paul) நூலும் இந்நூலும் ஒரே வகைமையை சேர்ந்தவை எனலாம்.
பொதுவாக இதுபோன்ற புத்தகங்கள், ஒரு லட்சியவாத தன்மையை கொண்டிருக்கும், இந்நூலின் இறுதி பகுதி அப்படியான ஒன்று தான். அதே வேளையில் அந்த இலட்சியத்தை நியாயப்படுத்த அதற்கான தரவுகளையும் இந்நூல் கொண்டுள்ளது.
இந்தியாவின் வட மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையில் அதிகரித்து வரும் ஏற்றத்தாழ்வுகளை இந்நூல் தரவுகளோடு பேசுபொருளாக்குகிறது. அதற்கான காரணங்களை, சொல்ல முயல்கிறது. எல்லா வகையிலும் அதிகரித்துவரும் வேற்றுமைகள்,இந்திய ஒன்றியத்தின் ஒற்றுமைக்கே தீங்கு விளைவிக்கும் ஒன்றாக அமையக்கூடும் என்ற எச்சரிக்கையும் இந்நூல் மூலம் ஒலிக்கிறது.
Gamified Direct Democracy என்ற ஒரு ஜனநாயக தத்துவார்த்த பார்வையை இந்நூல் ஒரு தீர்வாக முன்வைக்கிறது. இப்போது மாநிலங்களுக்கிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளை, இந்திய ஒன்றியத்தை பாதிக்காத வகையில் தீர்க்க முயல இந்த அணுகுமுறை உதவக்கூடும் என்கிறார் நூலாசிரியர்.
இந்நூலின் முதலிரண்டு பகுதிகள் சமகால பொருத்தமுடையவை. நிகழ்கால சிக்கலை அவை பேசுகின்றன. அதுவும் மக்களுக்கு மிக நெருக்கமான கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்ற துறைகளில் நிலவும் வட மற்றும் தென் மாநிலங்களுக்கு இடையிலான சிக்கலை, ஏற்றத்தாழ்வுகளை இந்நூலின் முதல் பகுதி முன்னிலை படுத்துகிறது.
சுகாதாரத்தில், தென் மாநிலங்களை ஒருபுறமும் வட மாநிலங்களை ஒரு புறமும் நிறுத்திக்கொண்டால். மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு இருப்பதை காணமுடியும். இந்த வேறுபாடு இந்தியா முழுமைக்கும் நடந்திருக்கும் மாற்றங்களை ஒற்றை அளவீட்டை கொண்டு மதிப்பிட கூடாது என்பதை தான் தெளிவு படுத்துகிறது.
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் நடந்த 'Sub-national political movements' மற்றும் அதனால் உருவான அரசியல் அடையாளங்கள், இத்தகைய தென் மாநிலங்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்கிறார். கேரளாவில் ஐக்கிய கேரள இயக்கமும் தமிழ்நாட்டில் திராவிட இயக்கமும் இத்தகைய மாற்றங்களை சாத்தியப்படுத்தி இருப்பதை அழுத்தமாக தெரிவிக்கிறார். இந்தியா அரசியல் விடுதலை பெற்ற சமயத்தில் தென்மாநிலங்களில் சமுக- பொருளாதார நிலை வட மாநிலங்களின் அளவுக்கு தான் இருந்துள்ளது என்பதையும் இந்நூல் தெளிவுபடுத்துகிறது. அதன் பின் நடந்த இருவேறு வளர்ச்சி மற்றும் மாற்றங்கள் தான் நூலின் முக்கிய பகுதி.
ஒரு பக்கம் வளர்ச்சி அடைந்த மாநிலங்களாக தென் மாநிலங்களும் மஹாராஷ்டிராவை உள்ளடக்கிய தீபகற்ப மாநிலங்களும்(Peninsular states) மக்கள்தொகையில் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறார்கள். தமிழ்நாட்டின் மக்கள் தொகைக்கும் உத்தரப்பிரதேசத்தின் மக்கள் தொகைக்கும் இருக்கும் வேறுபாடு பெரும் வேறுபாடுகளை கொண்டது. TFR என்ற அளவீடும் Life expectancy யும் இதர மனிதவள குறியீடுகளும் இந்த பெரும் வேற்றுமையில், கண்களுக்கு புலப்படாமல் இருக்கும் அரசியல் ஆபத்தை நமக்கு விளக்குகின்றது.
வடமாநிலங்களில் அதிகரித்துவரும் மக்கள்தொகை, நாடாளுமன்றத்தில் இடங்களை கூட்டவும், தென் மாநிலங்களில் குறைந்துவரும் மக்கள்தொகை அத்தகைய அதிகாரங்களை குறைக்கவும் செய்யும். இதன்மூலம் தென் மாநிலங்களில் அரசியல் பேரபலம்(Bargaining Power) குறையும். 2026 இல் நடத்தப்படவேண்டிய மக்களவை தொகுதிகளின் சீராய்வு நடந்தால் தமிழ்நாடு 6 மக்களவை இடங்கங்களை இழக்க கூடும். தென்மாநிலங்கள் அனைத்திற்கும் இதே நிலை தான். மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்கான தண்டனை தான் இதுபோன்ற இட குறைப்பா என்ற கேள்வியை இந்நூல் மிக அழுத்தமாக கேட்கிறது. எப்படி இருந்தாலும், 2026 இல் இதுபோல் நடந்தால் மத அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு கதையாடல்கள்(Narratives) நகரும் என்பதை மட்டும் அனுமானிக்கலாம்.
NEET, GST, National education Policy போன்ற மையப்படுத்தப்பட்ட நிர்வாக சட்டங்களையும் கொள்கைகளையும் இந்நூல் கேள்விக்குட்படுத்துகிறது, ஏற்கனவே மாநிலங்களுக்கிடையான நிறைந்திருக்கு அசமத்துவங்களில் இதுபோன்ற மையப்படுத்தப்பட்ட சட்டங்களால் எந்த நேர்மறையான முன்னேற்றமுமம் இருக்கப்போவதில்லை, மாறாக இந்த அதிகாரக்குவிப்பு அசமத்துவம் அதிகரிக்கவே உதவும் என்கிறார். ஏற்கனவே ஒரு அளவீட்டை(Index) கடந்துவிட்ட தென்மாநிலங்களுக்கு, அதிலிருந்து விலகி இருக்கும் வடமாநிலங்களுக்கு விதிக்கவேண்டிய அதே அளவீடை இலக்காக கொள்வது எவ்வகையில் நியாயம்?
மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமலும், வளர்ச்சியில் தேங்கியும், மனிதவள குறியீடுகளில் பின்தங்கியும், வரி குறைவாக அளித்துக்கொண்டிருக்கும் வட மாநிலங்களுக்கும் அதற்கு நேர மாறாக இருக்கும் தென்மாநிலங்களுக்கும் ஒரே அரசியல்-பொருளாதாரக கொள்கை எப்படி பொருந்தும்? இப்படியான கேள்விகள் நூல்முழுக்க நிறைந்துள்ளன.
மாநிலங்களிடம் இருக்கும் அதிகாரங்கள் எல்லாம், Central Sponsored schemes என்ற பெயரில் ஒருபக்கம் களவு போய் கொண்டிருக்கும்போது, இங்கிருக்கும் Constitutionally empowered Institutionsம் அதை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.
இன்னொருபுறம் இந்த அதிகார குவிப்பு, வட மாநிலங்களின் வளர்ச்சியை மேலும் மேலும் குறைக்கவே செய்கிறது. இதன் காரணமாக இடப்பெயர்வு அதிகளவில் நடந்தேறும் அபாயமும் இருக்கிறது. தென் மாநிலங்களில் நடைபெறும் இத்தகைய வட இந்திய தொழிலார்களின் இடப்பெயர்வு , இன்றைய ஐரோப்பிய நாடுகள் சந்தித்துவரும் சிக்கலை தான் நமக்கும் உருவாக்கும். Conservative அரசியல் சித்தாந்தங்களில் வளர்ச்சிக்கே இது உதவும்.
இதுபோன்ற அரசியல் சிக்கலை இனி எப்படி கையாளப் போகிறோம் என்பதை தான் நாம் சிந்திக்க வேண்டும். அதிகாரக்குவிப்பு - இந்துத்துவா- தரகு முதலீட்டியம் ஆகியவை நாம் செல்லும் பாதை இருளாக தான் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் சுயாட்சி கோரிக்கையும், அதிகார பரவலாக்கமும் இன்றியமையாத எதிர் தரப்பு வாதமாக அமைந்துவிடுவது இயல்பே.
Thomas Piketty முதல் Francis Fukuyama வரை, அனைவரும் அதிகார பரவலின் முக்கியத்துவத்தை பற்றி பேசி கொண்டிருக்கும் காலத்தில் இந்திய ஒன்றியம் அதற்கு எதிரான திசையில் பயணித்து கொண்டிருக்கிறது என்பதை தான் இந்த நூல் நிறுவுகிறது. அதே சமயம் இந்நூல் பரிந்துரைக்கும் தீர்வுகளை சாத்தியப்படுத்த முடியுமா , அல்லது திமுக 1951இல் எழுப்பிய திராவிட நாடு கோரிக்கைக்கே மீண்டும் நாம் செல்ல நேருமா என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.
Comments
Post a Comment