இளைய பெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்
தலித் இயக்க முன்னோடிகளில் ஒருவரான இளையபெருமாள் அவர்களுக்கும் நூற்றாண்டு தொடங்கி இருக்கிறது. அருஞ்சொல் இணையத்தளத்தில் மக்களவை உறுப்பினர் திரு. ரவிக்குமார், இளையபெருமாள் குறித்து வாரம் வாரம் கட்டுரை எழுதி வருகிறார்.
இந்தாண்டு ஜனவரி மாதம் நடைபெற்ற புத்தகக்கண்காட்சியில் நீலம் பதிப்பக வெளியீடாக ‘ இளைய பெருமாள் வாழ்க்கைச் சரித்திரம்’ நூல், பாலசிங்கம் இராஜேந்திரன் எழுத்தில் வெளியானது. இது ஒரு ஆளுமைக்கு எழுதப்படும் வித்தியாசமான Hagiography.
இந்நூலைப் போலவே சீர்மை பதிப்பக வெளியீடாக அ. மார்க்ஸ், தலித் போராளி டி. எம். மணி குறித்து, எழுதிய “ஒரு தலித் போராளி: வாழ்வும்-காட்டிய வழியும்” நூலும் முக்கியமானது. தலித் இயக்கம் தேங்கி இருந்த 1960-1980 வரையிலான காலகட்டத்தில் செயல்பட்ட ஆளுமைகளைப் பற்றி அறிந்துகொள்ள இவ்விரு நூல்களும் துணைபுரிகின்றன.
என்னளவில் தமிழ் அறிவு பரப்பில் தொ.மு.சி. ரகுநாதன் புதுமைப்பித்தனுக்கு எழுதியது தான் மிகச் சிறந்த Hagiography என்பேன். ஒருவர் மீது கொண்டிருக்கும் ஆதர்சம் இப்படி தான் வெளிப்பட வேண்டும் என்பது போல் அந்நூல் அமைந்திருக்கும். சுந்தர ராமசாமி எழுதிய ‘ஜே ஜே சில குறிப்புகள்’ நூலையும் ஜே.ஜே பற்றிய hagiographyஎன்று கொள்ளலாம், எனக்கு அந்நூலைப் புனைவாகப் பார்க்கத் தோன்றவே இல்லை.
இளைய பெருமாள் வாழ்க்கைச் சரித்திரம் நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ள ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம், முன்கூட்டியே நூலின் தன்மையினை சொல்லி விட்ட காரணத்தால், எனக்கு நானே ஒருஎச்சரிக்கை உணர்வை ஏற்படுத்திக் கொண்டே இந்நூலை வாசிக்கத் தொடங்கினேன். இந்நூலும் அத்தகைய எச்சரிக்கைக்கு வலு சேர்ந்ததே ஒழிய அதை மாற்றவெல்லாம் இல்லை.
ஒருவரது வாழ்க்கையை அவரது சமகாலத்தில் வாழ்ந்த ஒருவரால் மட்டும் தான் துல்லியத்திற்கு மிக அருகில் நின்று எழுத இயலும், பின்னாட்களில் எழுதப்படும் வாழ்க்கை வரலாறுகள் பல காரணிகளால் அழுத்தத்திற்கு உட்பட வேண்டி இருக்கிறது. இதனால் துல்லிய தன்மை குறித்து மிகை தன்மை அதிரித்துவிடுகிறது. இந்நூல் அதற்கு ஒரு சான்று. திராவிட இயக்க வெறுப்பும், சாதி பற்றும், முன்முடிவுகளும் அதிகம் வெளிப்படும் ஒரு புகழுரை என்றே இந்நூலை மதிப்பிட விரும்புகிறேன். எம்ஜிஆர்ருக்கு எம்.எஸ்.எஸ் பாண்டியன் ‘பிம்பச் சிறை’ எழுதுவதற்கு முன்பு வரை வெளியான எம்.ஜி.ஆர் வாழ்க்கை வரலாறுகளோடு இந்நூலை ஒப்பிடலாம்.
மேலும் இந்நூல் உள்ளூர் ‘பேச்சு’ தரவுகளை அதிகம் கொண்டிருக்கிறது. அதிலும் முறையான அடிக்குறிப்புகள் இன்றி, பல தகவல்கள் நூல் முழுக்க நிரம்பி இருக்கிறது. நூல் ஆசிரியர் பிறப்பதற்கு முன்பு நடந்த வரலாற்று நிகழ்வுகளை உரையாடல் வடிவில் படிக்கும்போது மிகப்பாடுகளை மிகச் சுலபமாக அறிய முடிகிறது. வெகுஜன சினிமா நடிகர்கள் பேசும் வசனங்கள் போன்ற வாக்கியங்கள் இந்நூலில் பல இடங்களில் காண முடிகிறது. இளையபெருமாள் தான் உண்மையான ‘மாமன்னன்’ போன்ற ஸ்டேட்மெண்டுகளை சமீபத்தில் கேட்க முடிந்தது. இந்நூல் கொண்டிருக்கும் சினிமா தன்மை அதற்குக் காரணமாக இருக்கலாம்.
மேலும் இந்நூல் தர்க்க அடிப்படையில் பல இடங்களில் முரண்படுகிறது, இளையபெருமாள் கமிட்டி அறிக்கையைத் தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா நிறைவேற்றுவோம் என்று சொன்னதாகவும், ஆனால் கலைஞர் அதை நிறைவேற்றவில்லை என்று 64ம் பக்கத்தில் சொல்லி விட்டு, 89ம் பக்கத்தில் 1970ம் ஆண்டு இளையபெருமாள் கமிட்டி அறிக்கை அடிப்படையில் தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் நிறைவேற்றப்பட்டது என்கிறார். அதைப் போலவே ராமதாஸ் குறித்து நூல் ஆசிரியர் கொண்டிருக்கும் கருத்திற்கும் இளையபெருமாள் கொண்டிருந்த அபிமானத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கும் காரணத்திலேயே பல முரண்படும் இடங்களை நம்மால் காண முடிகிறது. நூலாசிரியரின் முன் முடிவுகளை வழியத் திணிக்கும் இடங்களில் ராமதாஸ்- இளையபெருமாள் இடையே நடைபெற்ற கூட்டு-எதிர் நடவடிக்கைகளும் அடங்கும். இப்பகுதி தெளிவற்ற ஒன்றாகவே வெளிப்படுகிறது.
இது போன்ற திராவிட இயக்க இருட்டடிப்பு/முன்முடிவு என்பது பெரும்பாலான தலித் வரலாற்று ஆசிரியர்களின் எழுத்தில் வெளிப்படுகிறது. அம்பேத்கரின் AISCF குறித்து ‘நெடுவழி விளக்குகள்’ நூலில் எழுதி இருக்கும் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம் கூட, முதல் தேர்தலில் திமுக, வந்தவாசி SCF வேட்பாளர் தசரதன் அவர்களை ஆதரித்த தகவலைக் குறிப்பிட தவறுகிறார்.(திராவிட நாடு 3-2-1952) ராமசாமி படையாச்சியின் உழைப்பாளர் கட்சி SCFக்கு ஆதரவளித்த நிகழ்வைக் குறிப்பிடுகையில், திமுக தேர்தலில் பங்கேற்கத் தொடங்கு முன்பே SCFக்கு அளித்த ஆதரவை குடிப்பிடதவறும் காரணம் புரியவில்லை. திராவிட இயக்கம் ‘இதைச் செய்யவில்லை’ என்று சொல்லும்போது வரும் தைரியம் ஏனோ திராவிட இயக்கம் நியாயமாகச் செயல்பட்டதைக் குறிப்பிட வேண்டிய நேரங்களில் வருவதில்லை. மே மாத காலச்சுவடு இதழில் அன்னை சத்தியவாணி முத்து பற்றி ஸ்டாலின் ராஜாங்கம் எழுதி இருந்த கட்டுரையிலும் இத்தன்மை வெளிப்பட்டது. ரவிக்குமார் இத்தன்மையிலிருந்து வெளியேறி வருவது அவரது சமீபத்திய கட்டுரைகளில் காண முடிகிறது.
திராவிட இயக்க விமர்சனம் தலித் தரப்பிலிருந்து வெளிப்படுவது இரண்டு தரப்புக்கும் ஆரோக்கியமான ஒன்றே என்றாலும், நியாயமாகக் கிடைக்கவேண்டிய பாராட்டுகளும் மறுக்கப்படுவது ஒரு வரலாற்று ஆர்வலனாக எனக்கு வருத்தமளிக்கவே செய்கிறது. (இரு தரப்புக்கும் இது பொருந்தும் )
சாதி ரீதியாக அரசியல் அணிதிரட்சிகள் அதிகமாக நடைபெறத் தொடங்கிய பசுமைப் புரட்சிக்கு பின்னான 1980களில் காங்கிரஸ் கட்சியை விட்டு இளையபெருமாள் விலகி இந்திய மனித உரிமை கட்சியைத் தொடங்கிச் செயல்பட்டார், பாமக உட்படப் பல காட்சிகள் இதே காலகட்டத்தில் தோற்றுவிக்கப்பட்டுச் செயல்பட்டது. வட தமிழகத்தில் புரட்சி இயக்கங்களின் செயல்பாடுகளை இத்தகைய ‘சாதி’ ‘உரிமை’ ரீதியிலான அணிதிரட்சியும் அதன் மூலம் நடைபெற்ற அரசியல் ஜனநாயகமயமாக்கலும் ஒரு அளவுக்குக் கட்டுப்படுத்தியது எனலாம். இளையபெருமாள் இப்போக்கில் முக்கிய பங்கு வகித்தார்.
1989ம் ஆண்டு வன்னியர்களுக்கு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு வன்னியர்- ஆதி திராவிடர் மக்களிடையே நடைபெற்ற பிரச்சனைகளுக்கு சுமுக தீர்வுகளை எட்டிக்கொள்ள வழிவகுத்தது. அரசியல் வர்க்கம் சிவில் தன்மைக்கு உட்படத் தொடங்கிய இக்காரணத்தால் தான் பின்னாட்களில் நேர்மறையான தேர்தல் பேரங்களை இரு சமூக அரசியல் பிரதிநிதிகளாலும் எட்ட முடிந்தது. திருமாவளவன்- ராமதாஸ் கூட்டணிக்கு இளையபெருமாள்- ராமதாஸ் கூட்டணி ஒரு முன்னோடி என்றே சொல்லலாம்.
வட்டார அளவில் நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகளில், குறிப்பாக ஆதி திராவிடர் - வன்னியர் அரசியல் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெற்ற கூட்டு- எதிர் நடவடிக்கைகளைப் பக்கச் சார்பு கண்ணோட்டத்தில் இந்நூல் மூலம் நம்மால் அறிய முடிகிறது.
பேச்சு சான்றுகளை மட்டுமே அதிகம் கொண்டிருப்பது இந்நூலில் பிரதான குறைபாடு, இதனாலேயே பல தகவல் ரீதியிலான முரண்பாடுகளை இந்நூல் கொண்டிருக்கிறது. வட்டார அளவில் நடைபெற்ற சாதிய- ஜனநாயக அரசியலைப் புரிந்துகொள்ளவும், இளையபெருமாள் கமிட்டி பற்றித் தெரிந்துகொள்ளவும், ஒரு ஆளுமையாக அவர் செயல்பட்ட விதத்தை அறிந்துகொள்ளவும் இந்நூல் துணை புரியும்.
அரசியல் சார்புகளை பின்னுக்குத் தள்ளி, அடிக்குறிப்புகளோடு எழுதப் பட்டிருந்தால் இந்நூல் ஒரு நல்ல Hagiographyஆக இருந்திருக்கும்.
Comments
Post a Comment