Sheikh Abdullah: The Caged Lion of Kashmir


 

அஇஅதிமுகவை நிறுவிய எம்ஜி ராமச்சந்திரன் நடிப்பில் 1972ம் ஆண்டு வெளியான திரைப்படம், இதய வீணை. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும்  “காஷ்மீர் பியுடிஃபுல் காஷ்மீர்” பாடல் வரிகள் அர்த்தம் பொதிந்தவை, அதே நேரத்தில் கவனிக்கப்பட வேண்டியவை, அண்ணாவுக்குக் காஞ்சியைப் போல் நேருவுக்குக் காஷ்மீர் என்ற பொருள் கொண்ட வரிகள் அதில் வரும், நேரு ஒரு காஷ்மீர் பண்டிட் என்ற வகையில் பார்ப்பது ஒரு விதம் என்றால் காஷ்மீர் அரசியலில் நேரு செலுத்திய தாக்கத்தை வைத்து இவ்வரிகளைக் கவனிப்பது மற்றொரு வகை.  அதே பாடலில்  “வாடைக்கு பயந்தாரோ இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ மடியினில் நெருப்பை கட்டிக் கொள்வார் என்னும் பழமொழி இவர் தான் படைத்தாரோ” என்று காஷ்மீர் மக்களை குறித்து வரும் வரிகள் இன்று வரையிலான காஷ்மீரின் வரலாற்றை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. இந்த பாடல் வரிகளில் குறிப்பிடப்படுவதைப் போல் காஷ்மீர்(மக்கள்) பியுடிஃபுல்லாகவெல்லாம் இருக்கவில்லை. Kashmir: The Case for Freedom என்ற Arundhati Royன் புத்தகத்தை படிப்பதன் மூலம் இதை உணர்ந்து கொள்ள முடியும். 



 Ramchandra Guha வின் Literary Memoirஆன Cooking of the Books மூலமாக அறிமுகமான புத்தகம் Sheikh Abdullah: The Caged Lion of Kashmir. காஷ்மீரின் வரலாற்று எழுத்தியலில் ஆழங்கால் பதித்தவராக அறியப்படும் Chitralekha Zutsh இந்நூலை எழுதியுள்ளார். 


 தனது பேச்சாற்றலால் காஷ்மீரத்து சிங்கம் என்று அறியப்பட்டவர் ஷேக் முகமது அப்துல்லா. குரான் வரிகளோடு அரசியல் சிக்கல்களையும்  இணைத்துச் சொற்பொழிவாற்றும்  திறமை  அவருக்கு வாய்த்தது. எளிய குடும்ப பின்னணியில் பிறந்திருந்தாலும், அரசியலில் மிகப்பெரிய இடத்தை அடைந்தவர்.  காஷ்மீர் என்ற நெருப்பு அவர் மடியிலும் பல காலம் கனன்று கொண்டிருந்தது. ஆனால் அது யாருக்குமே இதம் அளிக்கவில்லை.  பேரறிஞர் அண்ணா திராவிட நாடு கேட்டதற்கு எத்தனை நியாயமான காரணங்கள் இருந்தனவோ  அதைவிட அதிகமான காரணங்கள் காஷ்மீருக்கு இருந்தது. 


பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து விடுபட்ட, புதிதாக உருவான இரண்டு தேசங்களுக்கு இடையில் சிக்கிக் கொண்ட பிராந்தியம் காஷ்மீர். நேருவின் நிறைவேற்ற முடியாத உத்தரவாதத்தால் வஞ்சிக்கப்பட்ட பகுதியும்கூட. இன்றைக்கு Article 370 நீக்கப் பட்டு ஒன்றிய பிரதேசமாக இருக்கும் காஷ்மீருக்கு முதல் பிரதமராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்  ஷேக் முகமது அப்துல்லா. 


காஷ்மீரின் விதியை  மக்கள் தான் தீர்மானிக்கவேண்டும் என்பதில் மிக உறுதியாக இருந்து, அதன் காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டு, நேருவின் மறைவுக்குப் பிறகு நம்பிக்கையை இழந்து, பல்வேறு அக மற்றும் புற நெருக்கடிகளால் இந்திரா காந்தியுடன் சமரசம் செய்துகொண்டு முதலமைச்சரானவர் அப்துல்லா. சமரசத்திற்கு வயது மூப்பு முக்கிய காரணமாக இருந்தது. சிங்கம் கடிக்க முடியாமல் உறுமவும் இயலாமல் இருந்த அமைதியான காலகட்டத்தில் இவை எல்லாம் நடந்து முடிந்தன. 


அப்துல்லாவின் மறைவு காஷ்மீரில் பெரும் வெற்றிடத்தை உருவாக்கியது, இந்திய அரசிடமும் காஷ்மீர் மக்களிடமும் சமைத்தன்மையுடன் கட்டமைக்கப்பட்ட அப்துல்லா என்ற பாலம் உடைந்தும், ஆயுதம் தங்கிய தீவிரவாதமும் அதை எதிர்கொள்ள அரச வன்முறையும் கோலோச்சத் தொடங்கின. 


பனிப் பொழிவை விடவும் பெல்லட் பொழிவை அதிகம் பார்த்த காஷ்மீரைப் போலவே  ஷேக் முகமது அப்துல்லாவின் வாழ்க்கையும் சூழ்ச்சிகளும் துரோகங்களும் நிறைந்த சிக்கலான ஒன்று என்பதை இப்புத்தகம் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. ஒரு கட்டத்தில் அப்துல்லா  சர்வதேச அளவில்  காஷ்மீரின் முகமாகத் திகழ்ந்தார். அவர் காஷ்மீரில் ஒரு இஸ்லாமியராகவும் இந்தியாவிற்கு மதச்சார்பற்றவராகவும் இருக்க வேண்டியதாக இருந்தது. இரண்டு அடையாளங்களிற்கும் நியாயம் செய்பவராக அவர் விளங்கினார்.  


இந்த வாழ்க்கை வரலாற்று நூல், இந்தியா என்ற உருவாகாத தேசத்தின் வரலாற்றையும் காஷ்மீர் என்ற உருவாகத் தவறிய தேசத்தின் வரலாற்றையும் இந்த இரண்டுக்கும் இடையில் தனது இறுதிக்  காலம் வரை சிக்கித் தவித்த காஷ்மீரத்துச் சிங்கம் ஷேக் அப்துல்லாவின் வரலாற்றையும்  கொண்ட ஒன்றாக வெளியாகி இருக்கிறது. 


8 அத்தியாயங்களாக விரியும் இந்நூல், ஷேக் அப்துல்லாவின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை நிகழ்வுகளைக் கோர்வையாக நமக்குத் தெரிவிக்கிறது. 


Guha edit செய்யும் Indian Lives Series-ல் இந்நூலோடு சேர்த்து இதுவரை 3 புத்தகங்கள் வெளியாகி உள்ளன.  Ashoka, Kamaladevi Chattopadhyay ஆகியோர் இதில் அடக்கம். இந்த இரண்டு புத்தகங்களையும் வாசித்து வருகிறேன். தரமான ஆய்வோடு இலகுவான வாசிப்பனுபவத்தை வழங்குகின்றன. 

இதே வரிசையில்  Jayaprakash  Narayan,  Kasturba Gandhi,  Buddha,  Subramanyan Chandrasekhar,  Anand Ram 'Mukhlis', Ramkrishna Dalmia,  Bal Gangadhar Tilak,  Rajaraja Chola ஆகியோரது வாழ்க்கை வரலாறுகளும் தயாராகி கொண்டிருப்பதை அறியமுடிகிறது. இந்த புத்தகத்தில் வெளிப்படும் ஆய்வு தரம் இவற்றிலும் பிரதிபலிக்கும் என்று நம்பலாம். (பெரியாரின் வாழ்க்கை வரலாறும் இந்த வரிசையில் வெளிவர வாய்ப்பிருப்பதாக சொல்லி பறந்தார் கழுகார்!)


 காஷ்மீரின் விடுதலையை அந்த பகுதி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும், அதற்காக பொதுவாக்கெடுப்பை(plebiscite) நடத்த வேண்டும் என்று கர்ஜித்த அப்துல்லாவின் மறைவை ஒட்டி  அவருக்கு இந்திய மூவர்ண கொடி போர்த்தி மரியாதை செய்யப்பட்டது, காஷ்மீர் அரசியலில் இந்திய அரசு எந்த அளவிலான தாக்கம் செலுத்தியது என்பதை இந்த நிகழ்ச்சி துல்லியமான பிரதிபலிப்பதாக கொள்ளலாம்.  


Comments