பெயரழிந்த வரலாறு : அயோத்திதாசரும் அவர் கால ஆளுமைகளும்
இன்றைக்கு முகநூலில் பெயர் குறிப்பிடப்படாமல் ஆற்றப்படும் எதிர்வினைகள் என்பது தமிழ் எழுத்து பண்பாட்டில் நீண்ட நெடிய மரபின் தொடர்ச்சியை கொண்டுள்ளது. பெயரை நேரடியாக குறிப்பிடாமல் நிகழ்ச்சி குறியீடுகள் மூலம் சுட்டுவது ஆரம்பகால தமிழ் இதழியலிலும் படைப்புகளிலும் காணக் கிடைக்கிறது.இது போன்று எழுதப்பட்டிருப்பதால் நிகழ்காலத்தில் இருந்து கடந்த காலத்தை பார்க்கும்போது இரண்டு சமகால ஆளுமைகளுக்கு இடையில் எவ்வித தொடர்பும் இல்லாதது போன்று தோன்றலாம், ஆனால் அவ்வாறான எழுத்துக்களை நுணுக்கமாக கவனித்தால் பெயர் குறிப்பிடப்படாமல் எழுதப்பட்ட ஏராளமான தரவுகள் காணக் கிடைக்கிறது. இதை தான் ‘பெயரழிந்த வரலாறு’ என்கிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.
திராவிட இயக்கம் பற்றிய ஆய்வு எழுத்துக்களின் வழியாக அயோத்திதாசர் மீது ஏற்பட்ட அர்வம் என்னை "அயோத்திதாசர் வாழும் பௌத்தம்" நூலை வாசிக்க தூண்டியது. எம்.எஸ்.எஸ் பாண்டியன், ஆ.இரா. வேங்கடாசலபதி, எஸ்.வி ராஜதுரை, வ. கீதா போன்றவர்களின் எழுத்துக்கள் இதில் முதன்மையானவை. அந்நூலை படித்துவிட்டு ஒரு சிறு அறிமுகம் எழுதி இருந்தேன். ஸ்டாலின் ராஜாங்கத்தின் ஆய்வு முறைமை என்னை கவர்ந்திருந்தது. பிரதிகளாக எஞ்சி நிற்கும் தரவுகளுக்குள் மட்டும் அவரின் ஆய்வு முறைமை(Methodology) சுருங்கி விடுவதில்லை. பண்பாட்டின் அங்கமான இருக்கும் பழக்கவழக்கங்கள் குறியீடுகள் அதில் இருக்கும் உள்மெய்(உண்மை) தான் அவரது ஆய்வின் மூலம். இதை அயோத்திதாசரிடம் இருந்து பெற்று கொண்டதாக சொல்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
சினிமா குறித்தும் சமகால அரசியல் குறித்தும் அவர் எழுதும் கட்டுரைகளை வாசித்திருந்தாலும் அவை பற்றி எழுத ஒரு வித தயக்கம் இருக்கும், சில சமயம் யதார்த்தம் மூஞ்சில் அறைந்திருக்கும், பல நேரம் அந்த எழுத்து எனக்குள் பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கும். 'ஆணவ கொலைகளின் காலம்' அந்த வகையை சேர்ந்தது.
“தமிழ் சினிமா புனைவில் இயங்கும் சமூகம்” நூல் சினிமா குறித்த வேறொரு பார்வையை எனக்குள் ஏற்படுத்தி இருந்தது. “எண்பதுகளில் தமிழ் சினிமா” நூலை வாசித்தால் இந்த பார்வை வலுப்படும் என்று நினைக்கிறேன்.
“பண்பாட்டின் பலகணி” நூலை பண்டிகை சமயத்தில் மட்டும் எடுத்து வாசிப்பேன். காரத்துல தீபம், ஆடி பெருக்கு ஆகிய கட்டுரைகள் அபாரம். நீத்தார் சடங்குகளோடு பண்டிகைகளை கோர்த்து எழுதும் விதம் என்னை கவர்ந்தது.
இவற்றை தாண்டி அயோத்திதாசர் குறித்தும் அவரது சமகால ஆளுமைகள் குறித்தும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் வரலாற்று எழுத்து தமிழ் சமூக அரசியலில் வரலாற்றில் முக்கியமான வருகை என்பேன்.
எந்த ஒரு வளர்ச்சியும் சட்டென நடந்துவிடுவதில்லை, ஒரு அரசியல் இயக்கத்தின் வளர்ச்சியும் அப்படி தான். சமூகத்தில் சிதறி கிடக்கும் அறிவு ஒரு இடத்தில குவியும்போது இயக்கம் வலுப்பெறுகிறது. அத்தகைய அறிவு பரவி கிடைக்கும்போது அந்த இயக்கம் தேய்மானம் அடைகிறது, சில நேரம் இயக்கமாக மாறாமலே நீர்த்துபோகிறது.. அறிவு என்பது இங்கு சிந்தனையை குறிக்கிறது. கீழிருந்து மேலெழும்பும்(Bottom-up ideas) எல்லாச் சிந்தனையும் இந்த வகையை சேர்ந்தது என்பது என் அனுமானம்.
1930களை திராவிட இயக்கத்தின் எழுச்சி காலகட்டம் என்று எடுத்துக்கொண்டால், 19 நூற்றாண்டின் கடைசி இரண்டு பத்தாண்டுகள் திராவிடம் என்ற சமூக அரசியல் சிந்தனையின் தோற்ற காலகட்டம் எனலாம். அயோத்திதாசர் இந்த காலகட்டத்தை சேர்ந்தவர். பண்பாட்டு பௌத்தத்தின் வழியாக பார்ப்பன எதிப்பையும் சாதி எதிர்ப்பையும் அவர் முன்னெடுத்தார். அவரது சமகால நவீன பௌத்தர்களான லட்சுமி நரசு, சிங்காரவேலர் போன்றவர்களுடனும் அவர் முரண்பாடுகளை கொண்டிருந்தார். முரண்பட்டாலும் பல்வேறு சமயங்களில் இவர்கள் சேர்ந்து இயங்கினர்.
உ.வே.சா, பாரதியார், மயிலை சீனிவேங்கடசாமி, இரட்டைமலை சீனிவாசன், டி டி கோசாம்பி, லட்சுமி நரசு, ம சிங்காரவேலர் போன்றோருடன் அயோத்திதாசர் கொண்டிருந்த தொடர்புகளை இந்நூலிலுள்ள கட்டுரைகள் புலப்படுத்துகிறது. இதை தவிர்த்து ஜி. அப்பாதுரையாரின் செயல்பாடுகள், சுதேசிய பிரசங்கத்தில் இருந்த சாதியம், நவீன கால பௌத்த மறுமலர்ச்சி, பரோடா மன்னரை பாராட்டி அயோத்திதாசர் எழுதிய கட்டுரைகள், மாசிலாமணி எழுதிய ‘வருணபேத விளக்கம்’ ஆகிய கட்டுரைகள் முக்கியமானவை.
பரோடா மன்னர் குறித்த கட்டுரை என்ன மிகவும் கவர்ந்தது, அம்பேத்கர் பரோடா சமஸ்தானத்தின் கல்வி உதவி தொகை பெற்று தான் வெளிநாட்டுக்கு படிக்க செல்கிறார், இந்த கல்வி உதவி தொகைக்கான தொடக்கம் பூலேவின் முயற்சியால் உருவான ஒன்று என்பதை மனு.எஸ்.பிள்ளையின் "False Allies" நூல் மூலம் அறிந்துகொண்டேன், அயோத்திதாசர் பரோடா மன்னரின் செயல்பாடுகளை பாராட்டி எழுதியுள்ளார் என்பது இந்த தொடர்பை சுவாரசியமான ஒன்றாக ஆக்குகிறது.
1880களில் மாசிலாமணி எழுதிய “வருணபேத விளக்கம்” இன்றைக்கு நாம் பேசு சாதி எதிர்ப்பு அரசியலின் தொடக்கமாக இருந்துள்ளது. தொடக்கத்தில் ‘தத்துவவிவேசினியில் தொடராக வெளியான இந்த படைப்பு, 1930 களில் சாக்கிய பௌத்தம் கோலோச்சிய கோலார் தங்க வயலில் மறுபதிப்பு காண்கிறது. இதே சமயத்தில் தான் ஜி. அப்பாதுரையார் போன்றவர்கள் சுயமரியாதை இயக்க தொடர்பை பெற்று சேர்ந்து பயணிக்கிறார்கள். அயோத்திதாசருக்கு பிறகான பௌத்தம் பெரும்பாலும் மேற்கத்திய வகையை அடிப்படையாக கொண்ட நீவீன பௌத்தமாகவே இருந்துள்ளது. ஜி. அப்பாதுரையார் போன்றவர்களும் இவ்வகை நவீன பௌத்தத்தையே முன்வைத்து இயங்கினார்கள் என்பதை அறிய முடிகிறது.
டி.டி.கோசாம்பியும் அயோத்திதாசரும் சந்தித்த தகவலை முதல் முதலில் சலபதி 'The telegraph ' இதழுக்கு எழுதிய 'Close encounters of the Buddhist kind-
Nooks of the past ' கட்டுரை மூலம் அறிந்தேன், ஆனால் இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரை அதன் அரசியல் பின்னணியை மேலும் விளக்குகிறது.
அயோத்திதாசருக்கும் ரெட்டைமலை சீனிவாசனுக்கும் இருந்த முரண்பாடுகளையும் வெவ்வேறு வகையில் அவர்கள் பேசிய சமூக விடுதலை அரசியலையும் ஒரு கட்டுரை விளக்குகிறது. வரலாற்றில் இரண்டு ஆளுமைகளிடம் இருந்த முரண்பாட்டை அவரவர் வாழ்க்கை பின்னணியை அடிப்படையாக வைத்தும் அவர்கள் இயங்கிய சமூக-அரசியல் சூழலை அடிப்படையாக வைத்துமே புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இக்கட்டுரை சாட்சி.
ஒரு பண்பாட்டு இயக்கமாக அயோத்திதாசரின் பௌத்த செயல்பாடுகள் இருந்துள்ளது, அவரது சமகால ஆளுமைகளில் பெரும்பாலானோர் அவர் மறைவுக்கு பின் சுயமரியாதை இயக்க தொடர்பை கொண்டிருந்தார்கள். பௌத்தமும், சீர்திருத்த சைவமும், நவீன பகுத்தறிவும், பெண் விடுதலை சிந்தனையும், தமிழுணர்வும் ஒரு இடத்தில குவியும்போது பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் உச்சத்தை அடைகிறது. இத்தகைய Hybridityஐ கொண்டதாலேயே இவ்வியக்கம் வெற்றிபெற்றது. சுயமரியாதை இயக்கம் பின்னாட்களில் பண்பாட்டு அரசியலையும் ஒரு அங்கமாக கொண்டு அதில் பல சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கு அயோத்திதாசரின் தொடக்ககால செயல்பாடுகள் மூலம் தாக்கம் பெற்றவர்கள் அச்சாக அமைத்துள்ளார்கள் என்பதை அவதானிக்க முடிகிறது.
அந்த வகையில் இந்நூலில் உள்ள கட்டுரைகளை அந்த காலகட்டத்தை பற்றி அறிந்துகொள்ளவும் ஆளுமைகளுக்கிடையிலான உறவை புரிந்துகொள்ளவும் பயன்படும் ஒன்றாக நிச்சயம் அமையும்.
வாய்ப்புள்ளவர்கள் அவசியம் வாசித்து பயனடையவும்.
காலச்சுவடு.
Comments
Post a Comment