‘முரசொலி’ மாறன்.

 




திமுகவின் வரலாற்று போக்கில் அதன் தலைவர்களை தவிர்த்து சில தனிநபர்களின் பங்கு இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது. இன்றைக்கு பிடிஆர் இருப்பதை போல் துறை சார் நிபுணத்துவத்தோடு சேர்த்து, கட்சி கொள்கையில் ஆழமான பிடிப்பும், அரசியல் சூழலுக்கேற்ப முடிவெடுக்கும் திறனையும் கொண்டிருந்தவர் ‘முரசொலி’ மாறன்.


கலைஞரின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர், மனசாட்சி என்று சொல்வது மிகையல்ல. தலைவரின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர். பொட்டில் அடித்தார் போல் பேசுபவர். திமுகவின் டெல்லி முகம். ‘முரசொலி’ பத்திரிகை ஆசிரியராக, சினிமா வசனகர்த்தாவாக, இயக்குனராக, தயாரிப்பாளராக, மூன்று முக்கிய புத்தகங்களின் ஆசிரியராக மாறனுக்கு பல முகங்கள் உண்டு. Organic Intellectual என்று சொல்லும் அளவுக்கான அறிவாளுமையை மாறன் கொண்டிருந்தார்.

இந்தி எதிர்ப்பின் போது முரசொலியில் உணர்வெழுச்சி மிகுந்த கட்டுரைகளை எழுதிய மாறன். அதன் காரணமாக அவர் கைதும் செய்யப்பட்டார். ராஜாஜி, அண்ணா, காயிதே மில்லத் ஆகிய மூன்று முக்கிய தலைவர்களாலும் முரசொலி மாறனின் 1967 தென் சென்னை மக்களவை தொகுதி வேட்புமனு தாக்கல்(Proposed) செய்யப்பட்டது. தென் சென்னை மக்களவை இடைத்தேர்தலில் மாறனை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது " மாறன் மக்களவையில் பேசும்போது மாறன் பேசுகிறார் என்று யாரும் நினைக்க மாட்டார்கள், நான் பேசுவதாக தான் நினைப்பார்கள்" என்றாராம் பேரறிஞர் அண்ணா. அண்ணாவிடம் அந்த அளவுக்கான மதிப்பை பெற்றிருந்தவர், மாறன் .

டைடல் பார்க் அமைவதற்க்கும், 1996லேயே தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப கொள்கை உருவாவதற்கும் மாறனின் பங்கு இன்றியமையாத ஒன்று. கலைஞரின் மறு உருவமாக தான் மாறன் இருந்தார். 1990களுக்கு பிறகு திமுகவின் பொருளாதார கொள்கையை காலத்திற்க்கு ஏற்றார் நவீன படுத்திய பெருமை மாறனை சேரும் என்று உறுதியாக சொல்லலாம். தமிழ்நாட்டுக்கு அந்நிய முதலீட்டை ஈர்ப்பதிலும், தனியார் துறை நிறுவனங்களை ஊக்குவிப்பதில் இவரது பங்களிப்பு அதிகம். அந்தளவுக்கு யதார்த்த வாதியாக அவர் செயல்பட்டார்.

இன்றைக்கு மாவட்டந்தோறும் நடக்கும் ‘திராவிட மாடல்’ பயிற்சி பாசறைகளை போலவே கூட்டம் நடத்துவதற்கு 2000 சமயத்திலேயே அவர் திட்டமிட்டிருந்தார் என்பதை அறிய முடிகிறது. பாஜக -காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணியை கட்டியெழுப்பும் முயற்சியில் அவர் இறங்கி இருந்தார். கலைஞருக்கு பிறகு மாறன் தான் என்ற நிலை அச்சமயத்தில் உருவாகி இருந்தது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். கெடு வாய்ப்பாக அது நிகழவில்லை.

“மாநில சுயாட்சியை எனது பிறப்புரிமை” என்று சொல்லும் அளவுக்கு சுயாட்சி கொள்கையின் மீது வேட்கையை(Passion) மாறன் கொண்டிருந்தார். இதற்கு அவரின் மாநில சுயாட்சி நூலே சாட்சி. இரண்டாண்டு உழைப்பின் அறுவடை அந்நூல்.

'ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்', 'திராவிட இயக்க வரலாறு முதல் பாகம்' ஆகிய புத்தகங்கள் அவரது முக்கியமான கருத்தியல் பங்களிப்புகளாக சொல்லலாம் . திராவிட இயக்க வரலாறு இரண்டாம் பாகமும் முக்கால்வாசி முடித்திருந்தார் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அவர் எழுதிய புத்தகங்கள் மூன்று.
அவரை பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் இரண்டு.

அவரது கட்டுரைகள், பேட்டிகள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உரைகள் எல்லாம் தொகுக்கப்பட வேண்டும். கலைஞரின் நூற்றாண்டுக்குள் இவை எல்லாம் நடந்தால் சிறப்பாக இருக்கும்.

எனக்கு புத்தகங்கள் மூலம் அறிமுகமாகி, ஒரு படைப்பின் மூலம் இதர படைப்புகளை தேடி தேடி படிக்க வைத்த வெகு சில எழுத்தாளர்களில் முரசொலி மாறனும் ஒருவர். முக்கியமானவர் .

இன்று அவரது பிறந்தநாள்.

அவர் புத்தகங்கள் குறித்தும் அவரை பற்றிய புத்தகங்கள் குறித்தும் நான் எழுதிய அறிமுகங்களை இந்த பதிவோடு பகிர்கிறேன்.

மாநில சுயாட்சி - முரசொலி மாறன்






 




Comments