வ.உ.சி.யின் சிவஞான போத உரை //Book review//


 


கப்பலோட்டிய தமிழன் என்றும் செக்கிழுத்த செம்மல் என்றும் தென்னாட்டு திலகர் என்றும் அறியப்பட்ட வ.உ.சிக்கு சைவ சமய முகமும் இருந்துள்ளது. இன்னும் அறியப்படாத பல முகங்கள் இருக்கலாம், அவற்றை எல்லாம் அறிவதற்கு இது போன்ற புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு படிக்கப்படவேண்டும். 1935இல் வெளியான ஒரு உரை நூலை தேடிப்பிடித்தது 1999ல் பதிப்பித்திருக்கிறார் சலபதி. மெய்கண்டார் எழுதிய ‘சிவ ஞான போதம்’ என்ற சைவ சமய நூலுக்கு நாளொன்றிற்கு 2 மணிநேரம் செலவழித்து 12 நாட்களில் எழுதி முடித்த இவ்வுரை வ.உ.சியின் சைவ சமய ஈடுபாட்டை காட்டுகிறது.


இந்நூலுக்கு சலபதி எழுதியுள்ள "வ.உ.சியும் சைவ சித்தாந்தமும்" என்ற அறிமுகவுரை வ.உ.சியின் சமகால அரசியல் செயல்பாடுகளோடு சைவம் சித்தாந்த ரீதியிலாக அடைந்த மாற்றங்களை விளக்குகிறது. ‘திராவிட இயக்கமும் வேளாளரும்’ என்ற நூலோடு இந்த அறிமுகவுரையையும் சேர்த்துப் படிக்க வேண்டும்.

சுயமரியாதை இயக்கம் தீவிரமாக இயங்கிய காலகட்டத்தில்(1930s) இந்நூல் வெளியாகி இருக்கிறதென்பதையும், சைவத்தில் இருந்த பலதரப்பட்ட கொள்கை ரீதியிலான பிரிவுகளில் வ.உ.சி அவர்கள் ‘சீர்திருத்த சைவர்’ என்ற பிரிவை சேர்ந்தவராக இருந்தார் என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும். மனிதனுக்காக தான் சமயமே அன்றி சமயத்துக்காக மனிதனில்லை என்பதில் வ.உ.சி தெளிவாக இருந்தார்.

வ.உ.சி இந்த ‘சிவாஞான போத உரை’ நூல் ஒன்றை தெளிவு படுத்துகிறது. சைவம் என்பதை வெறும் சமயமாக பார்க்காமல் தத்துவமாக பார்த்துள்ளார் வ.உ.சி. இந்தியாவில் இருக்கும் தத்துவங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் மதங்களோடும் சமயங்களோடும் தொடர்புள்ளவையாகவே இருந்து வந்துள்ளதது. இதன் காரணமாக தான் மேற்கத்திய தத்துவங்களை மதம்சாராமல் விளக்கமுடிவதை போல் இங்குள்ள தத்துவங்களை விளக்க முடிவதில்லை. சமயங்களோடு தத்துவங்கள் கொண்டிருக்கும் தொடர்பினால் பின்னாட்களில் தத்துவம் குறைவாகவும் சடங்குகள் அதிகளவிலும் வெளிப்படும் போக்கினை பார்க்கமுடிகிறது. இதை சாபக்கேடு என்றே சொல்லவேண்டும்.

“சித்தாந்த மரபும் வ.உ.சின் உரையும்” என்ற தலைப்பில் சி.சு.மணி எழுதிய அறிமுகவுரை இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. 'நம்பமுடியாத புலமையாளர்'(தீராநதி, செப், 2003) என்ற தலைப்பில் சி.சு.மணி மறைந்த போது தொ.பரமசிவன் எழுதிய நினைவு குறிப்பு இதை வாசித்த சமயத்தில் மெய்யானது. வ.உ.சியின் உரை தோன்றியதன் பின்னணியை அவர் விளக்கும் விதம் சைவ சமயத்தில் சி.சு.மணி’க்கு இருந்த புலமையை காட்டுகிறது. சலபதி மற்றும் சி.சு.மணி ஆகியோரின் அறிமுகவுரை இன்றி இந்நூலை புரிந்து கொள்வது கடினம்.

சுதேசிமித்திரன், சிவநேசன் ஆகிய இதழ்களில் மதிப்புரை வெளியான ஒரு நூலுக்கு நான் மதிப்புரை எழுதுவது முறையல்ல, தமிழ் இலக்கிய புலமையும் தற்சமயத்தில் எனக்கில்லை சைவ சமய ஈடுபாடும் எனக்கில்லை. தகுதியுடையோர் அதைச் செய்தால் மகிழ்ச்சி . தத்துவ ரீதியாக இந்நூல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பேன்.

பிற்சேர்க்கைகளாக பல முக்கிய ஆவணங்கள் இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது. குறிப்பாக 'கடவுளைக் காண்டல்' மற்றும் 'உண்மையில் சமயங்களெல்லாம் ஒன்றே' போன்ற கட்டுரைகளை எல்லாம் படித்து பார்க்கும்போது வ.உ.சியிடம் சுயமரியாதை இயக்கத்தின் தாக்கம் இருப்பதை அறியலாம். கடுஞ்சைவர்களோடு வ.உ.சிக்கு நடந்த விவாதங்களும் இந்நூலின் இறுதியில் இடம்பெற்றிருக்கிறது. அவையும் தவறவிட கூடாதவை.

ஒரு நூலை தேடி பிடித்து கடமைக்கு பதிப்பிக்காமல், அதன் பின்னணியில் உள்ள வரலாறை விளக்கியும் அது சம்மந்தப்பட்ட ஆவணங்களை திரட்டி இணைத்தும் பதிப்பித்த விதம் பதிப்புத் துறையில் சலபதி கொண்டுள்ள தனித்துவமென்பேன். "புது நெறி வகுத்த பதிப்பாசிரியர்" என்று சலபதியின் பதிப்பு பணிகளை பற்றி 'சலபதி- 50' நூலில் பெருமாள் முருகன் எழுதியுள்ள கட்டுரை இக்கூற்றை வலுவாக்கும்.

அரசியல், சமயம், தத்துவம் என்ற கோணத்தில் தமிழ்நாட்டின் வரலாறை அறிய விரும்புபவர்கள் தவறவிடக் கூடாத நூல்.








Comments