சலபதி 50: தொடரும் பயணம்
சலபதி-50 புத்தகம் பற்றிய வெளியீட்டு பதிவை காலச்சுவடு முகநூல் பக்கத்தில் பார்த்தபோது எங்கு கிடைக்கும் என்று Google செய்தேன், எந்த ஆன்லைன் புத்தக விற்பனை நிலையத்திலும் அந்நூல் அப்போது விற்பனைக்கு வரவில்லை . அதன் பின் இஸ்க்ர விடம் கோவை புத்தக கண்காட்சியில் கிடைத்தால் எனக்கு ஒரு பிரதி வாங்கி அனுப்ப முடியுமா என்று கேட்டேன், அவர் காலச்சுவடு அரங்கில் விசாரித்து விட்டு நாளை தான் விற்பனைக்கு வரும் என்பதாக சொன்னார். அதன் பின் திருவான்மியூரில் இருக்கும் பனுவல் புத்தக நிலையத்தில் திங்கட்கிழமை தொடங்கி ‘நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’ நூல் வந்துவிட்டதா என்று நச்சரித்து கொண்டே இருந்தேன், சனிக்கிழமை கிடைக்கும் என்று கூறினார்கள். சனிக்கிழமை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு நிகழ்வுக்காக சென்றிருந்தேன் அங்கு ஒரே ஒரு பிரதி இருந்தது உடனே பணம் கொடுத்து வாங்கி, அன்று மதியமே படிக்க தொடங்கினேன்.
நூலை பற்றி சொல்வதற்கு முன்பு சலபதியின் படைப்புகள் எனக்கு எப்படி அறிமுகமாயின என்பதை பற்றி சில தகவல்களை சொல்லி விடுகிறேன். திராவிட இயக்கம் குறித்து தமிழில் வெளியான ஆராய்ச்சி எழுத்துக்களை தேடி தேடி படித்து கொண்டிருந்தேன். பழ. அதியமான் எழுதிய “சேரன்மாதேவி குருகுல போராட்டம் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்” , ஆ. திருநீலகண்டன் எழுதிய “நீடாமங்கலம் சாதிய கொடுமையும் திராவிட இயக்கமும்” போன்ற புத்தகங்களில் சலபதியை குறிப்பிட்டு எழுதி இருந்தார்கள். முதலில் ஆ.இரா. வேங்கடாசலபதி பெயரை தான் சலபதி என்று அழைக்கிறார்களா என்று அறிந்த போது என் அறியாமையை திட்டிக்கொண்டேன்.
நதி கடலில் கலக்க போகிறது என்பதை இந்த தருணம் எனக்கு உணர்த்தியிருந்தது.
“திராவிட இயக்கமும் வேளாளரும்” என்ற நூலை வாங்கும் முன்பே “வ. உ. சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா” நூலை படித்து முடித்திருந்தேன், ஒரு சிறு அறிமுகமும் எழுதி இருந்தேன். அவரின் எழுத்து எந்த ஒரு இடைவெளியும் இன்றி தொடர்ந்து வாசிக்கும் தன்மையை கொண்டிருந்தது. இத்தனைக்கும் தரவுகள் நிறைந்த ஒரு புத்தகத்தை இவ்வளவு சுவாரசியமான நடையில் படித்தது புத்துணர்ச்சியை கொடுத்தது. அதன் பின் அவரது படைப்புகள் அனைத்தையும் தேடி தேடி படிக்க தொடங்கி இருந்தேன். 2022 தொடக்கத்தில் தான் சலபதியின் எழுத்துக்கு அறிமுகமாகி இருந்தேன்.
அவர் எழுதியவை பதிப்பித்தவை என 14 தமிழ் மற்றும் ஆங்கில நூல்களை இதுவரை படித்து அறிமுகமும் எழுதி இருக்கிறேன். இவை அனைத்தும் நடந்தது 3 மாத இடைவெளியில். மின் கம்பியை தேடி தேடி அமரும் பறவையை போல், சலபதியின் ஒவ்வொரு புத்தகங்களையும் படித்தேன். நான் அமர்ந்த மின் கம்பிகள் மின்சாரத்தோடு சேர்த்து என்னையும் கடத்தி இருந்ததை அப்போது நான் உணரவில்லை. ஜனவரி மாதம் நான் எழுதிய கட்டுரைகளுக்கும் இப்போது நான் எழுதும் கட்டுரைகளுக்குமான பெரும் வித்தியாசத்தை தொடர்ந்து படிப்பவர்கள் உணரமுடியும். காரணம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
புத்தகங்களை குறிப்பிட்ட அளவுக்கு வாசித்து கொண்டிருக்கும்போதே அவர் எழுதிய ஆய்வு கட்டுரைகள், காணொளிகள் என பிற விஷயங்களையும் நுகர தொடங்கி இருந்தேன். நேரில் சந்திக்க வேண்டும் போல் இருந்தது. முகநூலில் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு நேரில் சந்திக்க வரலாமா என்று கேட்டேன். நிச்சயம் சந்திக்கலாம் என்றார்.
காதலியை முதல்முறை சந்திக்கும்போது இருக்கும் அதே படபடப்பும் எதிர்பார்ப்பும் சலபதியை முதல் முறை சந்திக்க சென்றபோது ஏற்பட்டது. புதுமைப்பித்தனின் 112 ஆம் பிறந்தநாளில் எங்கள் முதல் சந்திப்பு நடந்தது. இது வரை 4 முறை சந்தித்துள்ளேன், அதில் இரண்டுமுறை எதிர்பாரா சந்திப்பு. இரண்டு சந்திப்புகள் திட்டமிட்டு நடைபெற்றது. திட்டமிட்டு சந்திக்கும்போதேல்லாம் நான் கடிதம் எழுதுவது என் காதலிக்கு பிறகு சலபதிக்கு தான்.
சலபதி-50 நிகழ்ச்சி இந்தாண்டு நடந்திருந்தால் நானும் வாய்ப்பு கேட்டு ஒரு கட்டுரை வாசித்திருப்பேன். இந்நூலில் இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளை வாசிக்கும்போது ஒரு பக்கம் ஏக்கத்தையும் இன்னொருபக்கம் கட்டுரை வாசித்த அன்பர்கள் மீது பொறாமையையும் உண்டாக்குகிறது. 70களில் பிறந்திருக்கலாமோ என்று தோன்றியது. (நிறைய தோன்றுகிறது, “எல்லாத்தையும் பொதுவில் எழுதிவிட்டால் எனக்கென எஞ்சி நிற்பது தான் என்ன?” என்ற கேள்வியை எனக்கு நானே எழுப்பிக்கொண்டு, நூல் அறிமுகத்திற்குள் நுழைகிறேன்.)
“கற்பக் கழிமடம் அஃகும்..” என்ற தலைப்பில் பழ அதியமான் எழுதியுள்ள முன்னுரை நூலின் சாரத்தை கூறி செல்கிறது. சலபதி அவர்களின் பணிகளையும், அவரின் குணாதிசயங்களையும் பட்டியலிடுகிறார் . இந்த கட்டுரை தொகுப்பு தொட்ட இடங்களையும் தொடாமல் விட்ட இடங்களையும் குறிப்பிடுவது 'முக நக நட்பது நட்பு ' என்ற குறளை நினைவூட்டியது. பழ. அதியமான் தவிர்த்து வேற எவராலும் இந்த நூலுக்கு இப்படி ஒரு முன்னுரையை எழுதி இருக்க முடியாது.
“நிறைமொழியாளன்” என்ற தலைப்பில், சேரன் எழுதியுள்ள கட்டுரையில் சலபதியின் ஆய்வுத்துறை பங்களிப்புகளை குறிப்பிட்டு ‘organic intellectual’ என்கிறார். சலபதியின் ஆங்கில மற்றும் தமிழ் புலமை ஆகியவற்றையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக குறிப்பிட்டு அவரை ஒரு நிறைமொழியாளன் என்கிறார்.
சலபதியின் பதிப்பு பணிகள் மற்றும் அவர் அதற்கென வகுத்த நெறிமுறைகள், பிற்காலத்தில் பதிப்பு பணியை மேற்கொண்டவர்களுக்கு அந்த நெறிமுறை எப்படி ஒரு முன்னோடியாக இருந்தது என்பதை குறிப்பிட்டு பெருமாள் முருகன் நீண்ட நெடிய கட்டுரை ஒன்றினை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான 'சாதிக்கு பாதி நாளா? ' என்ற நூலை படிக்கும்போது அவர் எவ்வளவு சிரத்தை எடுத்து ஒரு நூலை பதிப்பிக்கிறார் என்பதை விளங்கி கொள்ள முடிந்தது.
நவீன ஆய்வுலகின் முன்னோடியாக சலபதியை குறிப்பிட்டு சுகுமாரன் எழுதியுள்ள கட்டுரை, சலபதியின் ஆய்வு முறை பற்றியும் அவர் எப்படி வெகுஜன வாசிப்புக்கான ஆய்வுநூல்களை படைக்கிறார் என்பதை 7 புள்ளிகளாக பட்டியலிடுகிறார். சலபதி உருவாக்கிய இந்த முறையியலை அடுத்து வருபவர்கள் முன்னெடுத்து செல்லவேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்.
சலபதி பதிப்பித்த உ.வே.சாமிநாதையர் கடித கருவூலத்தை முன்வைத்து ப. சரவணன் எழுதியுள்ள கட்டுரை அந்நூலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்துகிறது.
பா. மதிவாணன் சலபதியின் எழுத்து நடையை பாகுபாய்கிறார், நான் சிலாகித்து படித்த பல மேற்கோள்கள் இதில் இடம்பெற்றிருந்தது, அப்படி படிக்கும்போது கவனிக்கத் தவறிய இடங்களை குறிப்பிடும்போது மீண்டும் அந்நூட்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இக்கட்டுரை
ஏற்படுத்தியது. இலக்கணம் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற படிப்பினையையும் இந்த கட்டுரை ஏற்படுத்துகிறது.
முச்சந்தி இலக்கியம் குறித்து அ. கா. பெருமாள் எழுதியுள்ள கட்டுரையில் அந்த காலகட்ட அரசியலோடு பொருத்தி குஜிலி பதிப்புகளின் வீழ்ச்சியை தேசிய உணர்வு வளர்ச்சியோடு ஒப்பிடுகிறார்.
சலபதி தனது புத்தகங்களுக்கு எழுதும் முன்னுரைகள் தனி சிறப்பு வாய்ந்தவை, பிறரது நூலுக்கு எழுதும் அணிந்துரைகள், மதிப்புரைகள் போன்றவையும் அப்படிப்பட்டவை தான். சமீபத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியான தாமஸ் ட்ரவுட்மனின் "யானைகளும் அரசர்களும்" நூலுக்கு அவர் எழுதியுள்ள அணிந்துரை அவர் வாசிப்பின் ஆழத்தை காட்டுகிறது . ட்ரவுட்மனின் திராவிட சான்று, பெர்னார்ட் பேட்’ன் “Protestant Textuality and the Tamil Modern” ஆகிய நூல்களுக்கு சலபதி எழுதிய மதிப்புரைகளும் அபாரமானவை. சலபதியின் முன்னுரைகள் குறித்து சுடர்விழி எழுதியுள்ள கட்டுரையும் அருமையான ஒன்று.
சலபதியின் பன்முக ஆளுமை குறித்து அரவிந்தன் எழுதியுள்ள கட்டுரை எனக்கு பல நினைவுகளை தூண்டி விட்டது, பெரிதும் வெளிப்படாத கூறுகளாக அவர் குறிப்பிடும் சலபதியின் நகைச்சுவை உணர்வு சமீபத்தில் ஒரு மேடையில் வெளிப்பட்டதை இங்கு குறிப்பிடவேண்டும். ரோஜா முத்தையா நூலகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தியோடர் பாஸ்கரனுடனான நெருக்கத்தை குறிப்பிடும்போது "நான் அடுத்த ஜென்மத்தில் உங்கள் வீட்டில் நாய்யாக பிறக்கவேண்டும்”, என்றவர் அதை தெடர்ந்து "அப்படி நடந்தால் எனக்கு நீங்கள் தமிழில் பெயர் வைக்க வேண்டும்" என்றார். இந்த பேச்சை கேட்டவுடன் சிரித்த நான் தற்போது தியோடர் பாஸ்கரன் எழுதிய "இந்தியாவில் நாயினங்கள்" நூலை படித்து கொண்டிருக்கிறேன்.
சலபதியிடம் தென்படும் முக்கியமான பண்பாக மற்றொன்றையும் குறிப்பிடவேண்டும், பாராட்டுக்குறியோரை பாராட்ட தயங்க மாட்டார். வயதில் இளையவர்களையும் மரியாதையுடன் நடத்துவார். அவரது அணுகுமுறையில் ஆறுதலும் ஊக்கமும் இயல்பாக இடம்பெற்றிருக்கும். திராவிட இயக்கத்தவர் கூட தயங்காமல் குறிப்பிடும் K.K நகரை, கலைஞர் கருணாநிதி நகர் என்று விரித்து கூறும் அவரின் பண்பு வரலாற்று அடையாளங்கள் மீது அவர் கொண்டுள்ள மதிப்புக்கு முக்கிய சாட்சி.
ஜே.பாலசுப்ரமணியம், ஆனந்த செல்லையா, க. ரவிச்சந்திரன், ஆ. குருசாமி ஆகியோர் சலபதியை ஆசானாக குறிப்பிட்டு எழுதியுள்ள கட்டுரைகள் எனக்கு ஏக்கத்தை அதிகம் உண்டாக்கியவை. அவரை நெருக்கமாக இருந்து கவனித்தவர்கள் என்ற முறையில் மாணவர்கள் எழுதிய இந்த நான்கு கட்டுரைகளும் உணர்வுபூர்வமானவை.
கே. எம். வேணுகோபால் மற்றும் கிருஷ்ணா பிரபு ஆகியோர் சலபதியுடனான நட்பை பற்றியும் அவரது பழமொழி புலமை பற்றியும் குறிப்பிட்டு எழுதியுள்ளார்கள். இதுவரை நான் அறிந்திராத செய்திகள் இந்த கட்டுரையில் இடம்பெற்றிருந்தன.
சலபதியின் ஆங்கில நூல்களையும், அதில் அவர் எடுத்தாளும் மொழி பற்றியும் தனி ஆய்வே செய்யலாம், சந்திக்கும் போதெல்லாம் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழியிலும் பயிற்சி மற்றும் புலமை பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் குறிப்பிடுவார். தமிழ் மேடைகளில் ஆங்கிலம் கலக்காத தமிழிலும், ஆங்கில ஆய்வரங்கங்களில் திக்கு திணராத ஆங்கிலத்திலும் அவர் பேசும் விதத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பை எனக்கு ஊக்கமாக எடுத்துக்கொள்வேன்.
பெர்னார்ட் சந்திரா சலபதியின் புகழ்பெற்ற புத்தகங்களில் ஒன்றான "In those days there was no Coffee" நூலை முன்வைத்து ஒரு அருமையான அறிமுகத்தை எழுதியுள்ளார்.
“The province of the Book ”பற்றி மருதன் எழுதியுள்ள கட்டுரை அந்த நூலை மறுவாசிப்பு செய்தது போன்ற உணர்வை உண்டாக்கியது. முதல் முதலில் நான் 1000 வார்த்தைகளில் எழுதிய நூல் அறிமுகம் சலபதியின் இந்நூலுக்கு தான். இது இவரின் முனைவர் பட்ட ஆய்வு என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அந்த ஆய்வை அவர் இரண்டரை ஆண்டில் முடித்தார் என்பது அவரது திட்டமிடலுக்கும் உழைப்புக்கும் சான்றாகும்.
"கவிஞனும் காப்புரிமையும்" என்ற நூலை தமிழில் படித்திருந்தாலும் அதன் ஆங்கில பிரதியை இன்னும் வாசிக்கவில்லை, அந்நூலை வாசிக்கவேண்டிய அவசியத்தை ஆர். சிவகுமார் எழுதியுள்ள வரலாற்றின் நாடகமாக்கம் கட்டுரை ஏற்படுத்தியுள்ளது.
ஜி. குப்புசாமி "Tamil Characters" நூல் பற்றிய மதிப்புரையை ‘தமிழ்நாடு: கூட்டத்தில் தனித்தீவு’ என்ற தலைப்பில் எழுதியுள்ளார். இந்நூலுக்கு பிறகு தான் சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே சில குறிப்புக்கள்” என்ற நூலை படித்தேன். சி.எஸ் என்ற கம்யூனிஸ்ட் தலைவரை பற்றி அறிந்துகொண்டேன். தமிழ்நாட்டு ஆளுமைகள் பலரை இந்நூல் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது. இந்த நூலோடு சேர்த்து படிக்க வேண்டிய மற்றொரு நூல் எம்.எஸ்.எஸ் பாண்டியனின் "Strangeness of Tamilnadu ".
“இலுப்பைப்பூ” என்ற தலைப்பிட்ட ஏற்புரையை ஏற்கனவே காணொளி வடிவில் கேட்டிருக்கிறேன், அவற்றை வார்த்தைகளாக படிப்பது அதே உணர்வை ஏற்படுத்துகிறது. காதால் கேட்டு ஒன்றை நுகர்வதற்கும், கண்களால் படித்து ஒன்றை நுகர்வதற்குமான வேறுபாட்டையும் அவற்றிக்கிடையே இருக்கும் உணர்வு ரீதியான ஒற்றுமை போக்கையும் இந்த இரண்டு வடிவங்களும் வெளிப்படுத்துகின்றன.
சலபதியை விட நான் கால் நூற்றாண்டு இளையவன், அவரது எழுத்துக்கள் எனக்கான தேடலை பல மடங்கு அதிகமாகியுள்ளது. வெகு சிலரின் எழுத்துக்களே இப்படிப்பட்ட தேடலை உண்டாக்கும். தேடலின் வழியே நான் எனது சுயத்தை அமைத்துக்கொள்கிறேன். அத்தகைய தேடலுக்கு ஊற்றாக அமைந்த சலபதிக்கு நான் கடன் பட்டிருக்கிறேன்.
தொடர்ந்து எழுதுங்கள் சலபதி சார், உங்களை முதல் முறை சந்தித்த அதே உணர்வோடு உங்களது படைப்புகளை வாசிக்க எங்கோ ஒரு மூலையில் நான் காத்துகொண்டிருப்பேன். என்றைக்கும் எனக்கு நீங்கள் ‘சக்கரை’ தான்.
இந்நூலை பதிப்பித்த பழ. அதியமான் அவர்களுக்கும் தொகுத்துள்ள ப. சரவணன் மற்றும் கிருஷ்ணா பிரபு ஆகியோருக்கும் வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகத்திற்கு வாழ்த்துகளும், நன்றியும், அன்பும்.
Comments
Post a Comment