வ.உ.சி: வாராது வந்த மாமணி

 


தமிழ்நாட்டில் 20 ஆம் நூற்றாண்டை எடுத்துக்கொண்டால் முதல் தசாப்தம் சுதேசி இயக்கத்தினரும், இரண்டாம் தசாப்தம் நீதிக்கட்சியினரும் மூன்று மற்றும் நான்காம் தசாப்தம் சுயமரியாதை இயக்கத்தினரும் ஆதிக்கம் செலுத்தினர் என முறையே வரையறுக்கலாம். இந்த வரையறை சமகாலத்தில் இருந்து கடந்த காலத்தை ஒரு சட்டகத்திற்குள் அடைக்க முயல்வதால் உருவான ஒன்றாக இருந்தாலும். அந்தந்த தசாப்தங்களில் ஆதிக்கம் செலுத்திய கருத்தியல்களை  வைத்தே இந்த அவதானிப்பை எழுப்பிக்கொண்டேன். அதே போல் இந்த சுதேச- பார்ப்பனரல்லாத- சுயமரிதை மற்றும் சமதர்ம கருத்தியல்கள் எல்லாம் ஒன்றோடொன்று ஊடாடியும் வந்திருக்கின்றன. 


சுதேசி இயக்கத்தில் வ.உ .சிதம்பரனார், பாரதியார், சுப்ரமணிய சிவா போன்றவர்கள் தாக்கம் செலுத்தும் தனிமனித தலைமைகளாக விளங்கினார். நீதிக்கட்சிக்கு டி.எம் நாயர், பிட்டி தியாகராயர், நடேசனார், எம்.சி.ராஜா போன்றவர்கள் இருந்தனர். சுயமரியாதை இயக்கத்திற்கு பெரியார், ராமநாதன், அண்ணா, சிங்காரவேலர், ஜீவா போன்றவர்களை சொல்லலாம். 


இந்நிலையில் சுதேசி இயக்கத்தை சேர்ந்த வ.உ.சி  அதற்கு பின் வந்த இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பினை கொண்டிருந்தார். அவர் பார்ப்பனர் அல்லாதாராக இருந்தது ஒரு காரணம் என்றாலும், அவருக்குள் இருந்த, அனைவரையும் அனுசரிக்கும் பண்பு தான் இந்த ஊடாட்டத்தை சாத்தியப்படுத்தி இருக்கிறது எனலாம். 


அவர் காலத்தில் வெளியான வாழ்க்கை வரலாறுகள். அவர் மறைந்த சமயத்தில் வெளியான இரங்கலுரைகள், இரங்கல் கடிதங்கள் மற்றும் தீர்மானங்களின் தொகுப்பு தான், “வ.உ.சி: வாராது வந்த மாமணி”. ஆ இரா வேங்கடாசலபதி இந்நூலை செம்மையாக தொகுத்து பதிப்பித்துள்ளார். 


வ.உ.சி பற்றி சலபதி எழுதி தான் படித்திருக்கிறேன். இதற்கு முன் அவரெழுதி வெளியான  வெளியான  “வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா”  “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்” அவர் பதிப்பித்த  “ வ.உ.சியின் சிவ ஞான போத உரை” போன்ற நூல்களை வாசித்த அனுபவமுண்டு. தவறவிட கூடாத நூல்கள் இவை. ‘வாராது வந்த மாமணி’ நூலை “திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்”  படித்து விட்டும் “வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா” நூலை படிப்பதற்கு முன்பும் படிக்கலாம். 


வ.உ.சி வாராது வந்த மாமணி, இந்நூலின் முன்னுரை, என்னை வேறொரு நூலை(தந்தை பெரியாரின் இறுதி நாள்களும் இதழ்களும்) நோக்கி செலுத்திவிட்ட காரணத்தால் தாமதாகவே அறிமுகம் எழுத முடிந்தது. அன்பர்கள் மன்னித்தருள்க. 


 வ.உ.சி யின்  150ஆம் ஆண்டினை தனக்கே உரிய பாணியில் மௌனமாக  கொண்டாடி வருகிறது, தமிழ்நாடு. தமிழ் இணைய நூலகம் ‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனார் (1872-1936) அவர்களின் 150-வது பிறந்தநாள் சிறப்பு இணையப் பக்கம் என்ற ஒன்றை வெளியிட்டிருக்கிறது.  இந்தாண்டு வ.உ.சி அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5 அன்று தான் இந்நூலும் வெளியாகி இருக்கிறது. 


இருபதாம் நூற்றாண்டுக்கு இரண்டாண்டு முன்பே வ.உ.சி யின் பெயர் காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவின் வழியாக நமக்கு கிடைப்பதாக சொல்கிறார் சலபதி. 1907இல் வ.உ.சி பற்றிய “ரகசிய போலீஸ் குறிப்பு” முதல் பகுதியின் தொடகித்தலிலேயே இடம்பெற்றுள்ளது. இது தவிர்த்து வ.உ.சி வாழ்ந்த காலத்தில் அவருக்கு எழுதப்பட்ட வரலாறுகளில் ஒன்று சி.ஐ.டி  எழுதியது. சி. ஐ.டியின்  “History of V.O. Chidambaram Pillai (Secret)” என்று தலைப்பிடப்பட்ட குறிப்பை சலபதி நமக்களித்துள்ளார். இதில் As a Man Thinketh என்ற James Allen

நூலை வ.உ.சி மொழிபெயர்த்த குறிப்பும் இடம்பெற்றுகிறது, பரலி.சு. நெல்லையப்பர் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் James Allenன் பிற நூல்களையும் வ.உ.சி மொழி பெயர்த்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது. 


  எம்.கிருஷ்ணசாமி ஐயர் என்பவர் எஸ். வேதமூர்த்தி முதலியார் எழுதிய வரலாற்று குறிப்புகளின் அடிப்படையில் எழுதிய வாழ்க்கை வரலாறு  “ஸ்ரீமான்  வ.ஓ.சிதம்பரம் பிள்ளை ஜீவிய சரித்திர சுருக்கம்(1908) ” என்று தமிழிலும் பின்னர் “The Life-sketch of Sjt V.O. Chidambaram Pillai(1909)” என்று ஆங்கிலத்திலும் வெளியாகி இருக்கிறது. ஆங்கில பதிப்பின் முகப்பில் Sir W. Scott அவர்களது “Breathes there the man, with soul so dead, who never to himself has said, This is my own, my native land!” மேற்கோளும் தமிழ் பதிப்பில் 'மன்னிய புகழ்மா பாரத தேவி தன்னிரு தாளிணைக் கடிமை யாளனால் ' என்ற மேற்கோளும் இடம்பெற்றுள்ளது.  இரண்டு நூல்களின் முகப்பு புகைப்படமும் இடம்பெற்றுகிறது. பல சுவாரசிய வரலாற்று தகவல்கள் இதிலடங்கி உள்ளது, திருநெல்வேலி எழுச்சிக்கு முன்னும் பின்னுமான வரலாறு நம் கண்முன் விரிகிறது. 


வ.உ.சி மறைந்து 8 ஆண்டுகள் கழித்து திரு.வி.கவின் முன்னுரையுடன் பரலி சு.நெல்லையப்பர் எழுதிய 'வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம் ' என்ற நூல் வெளியாகி இருக்கிறது. அந்நூலும் இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சுருக்கமாகவும் அதே சமயத்தில் கருத்தாழம் மிகுந்த ஒன்றாகவும் இது வெளிப்படுகிறது. 


இரண்டாம் பகுதி வ.உ.சி மறைந்த சமயத்தில் வெளியான இரங்களுரைகளின் தொகுப்பாக இடம்பெற்றுள்ளது. ஆனந்த போதினி, ஆனந்த விகடன், ஊழியன், குடிஅரசு, குமரன், சிவநேசன், சுதேசமித்திரன், செந்தமிழ் செல்வி, தினமணி, நகரத்தூதன், நவசக்தி, மணிக்கொடி, விடுதலை, கொழும்புவில் இருந்த வெளிவந்த வீரகேசரி, ஜெயபாரதி, ஆகிய தமிழ் பத்திரிகைகளும். The Hindu, Justice, The Madras Mail ஆகிய ஆங்கில பத்திரிகைகளும். பெரியதாகவும் சிறியதாகவும் குறிப்புகளை வெளியிட்டு இருக்கின்றன. 


 1936ல் வ.உ.சி மறைகிறார். அப்போது காங்கிரஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களான காந்தி, நேரு, ராஜாஜி ஆகியோர் எந்த இரங்கல் செய்திகளையும் வெளியிடவில்லை என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.  C. Vijayaraghavachariar, S. Satyamurthy, J.B Kripalani ஆகியோர் இரங்கல் கடிதங்களை வ.உ.சி யின் மகனாருக்கு அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் இரங்கல் குறிப்புகளை வெளியிட்டிருக்கின்றன. 


இது தவிர்த்து மெட்ராஸ் மாகாணத்தின் பல பகுதிகளில், காங்கிரஸ் இயக்கத்தவர் தொடங்கி சுயமரியாதை இயக்கத்தவர், தொழிற்சங்ககாரர்கள், சைவர்கள், இலக்கியவாதிகள்  என பலதரப்பட்டவர்கள் இரங்கல் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நிகழ்த்தியுள்ளார்கள். இதுகுறித்து The Hindu விரிவாக சில குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது. 


அந்தந்த இயக்கத்தவரும் தங்களுக்கு உகந்த வ.உ.சி யின் கொள்கைகளை நினைவூ கூர்ந்து அஞ்சலி செலுத்தி இருப்பது வியப்பானதல்ல என்றாலும், அனைத்து தரப்பாரிடமும் வ.உ.சி நன்மதிப்பை பெற்றிருந்தார் என்பதை நாம் வியக்க தான் வேண்டும். அந்த காலகட்டம் முரண்பாடுகள் மிகுந்த காலகட்டமாக இருந்ததை மனதில் கொண்டு பார்த்தால் வியக்காமல் இருக்க முடியாது. 


இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கும் வரை அவர் வாழ்ந்திருந்தால் நிச்சயம் மொழி உரிமைக்காக அதிலும்  பங்கேற்றிருப்பார் எனலாம். தேசிய இயக்கத்தில் திலகர் அணியை சேர்ந்தவராக இருந்தாலும் 6 ஆண்டு சிறை அனுபவம், சைவ பற்று, சுயமரியாதை இயக்க தொடர்பு ஆகியவை  இந்த நெகிழ்வுத்தன்மை கொண்ட பக்குவத்தை வ.உ.சிக்கு ஏற்படுத்தி இருப்பது என்பது எனது  யூகம். 


நூலின் முன்னுரையை முதல் முறை வாசித்தபோது வியப்பும், நூலை முழுமையாக படித்து முடித்த பின் முன்னுரையை மீண்டும் படித்தபோது திருப்தியும் ஏற்படுகிறது. இதற்கு முன் காண கிடைக்காத சில படங்களும் இந்த தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. 


'பதிப்பித்தால் இப்படி பதிப்பிக்கவேண்டும்' என்பது போல் இந்நூல் வெளியாகி இருக்கிறது. 40 ஆண்டு தேடலின் விளைச்சல், வீண்போகவில்லை. 


“ஓராயிர வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்

வாராது போலவந்த மாமணியைத் தோற்போமோ?” என்று வ.உ.சி பற்றி பாரதி எழுதிய வரிகளை சலபதி மெய்ப்பித்துள்ளார்.  


இந்தாண்டு வெளியான தமிழ்நூல்களுள் தவறவிடக்கூட நூல்.

வாய்ப்புள்ளோர் வாசிக்கவும். 






Comments