அரசியல் பிழைத்தோர்
தமிழில் சுவாரசியமான அரசியல் கட்டுரைகளை வாசித்தே நெடுநாட்கள் ஆனது, கடைசியாகச் சின்ன குத்தூசியின் ‘பூக்கூடை’ கட்டுரை தொகுப்பை வாசித்ததாக நியாபகம். சமகால அரசியலையும் முந்தைய வரலாற்றையும் கோர்த்து இரண்டுக்கும் இடையும் நிலவும் ஒற்றுமைகளைச் சுட்டிக் காட்டி ஒரு கதையாடலைக் கட்டமைத்து, வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் அரசியல் கட்டுரை எழுத்தாளர்கள் தமிழ் சூழலில் அருகி விட்டதாகவே படுகிறது. அண்மையில் அலுவலக நூலகத்திலிருந்து ‘அரசியல் பிழைத்தோர்’ என்ற கட்டுரை தொகுப்பை எடுத்துப் படித்தேன், R.P. ராஜநாயஹம் எழுதி இருந்தார். கலைஞருக்கு சமர்ப்பித்திருந்தார். அதுவே நூலுக்குள் சுண்டி இழுத்தது. இவரது எழுத்துக்களில் கிசுகிசு தன்மை வெளிப்பட்டாலும், அவை வதந்தி அல்ல உண்மை என்ற உணர்வைக் கட்டுரையின் ஏதோ ஒரு பகுதி ஏற்படுத்தி விடுகிறது. வாசகனின் சுவாரஸ்யத்திற்காக அந்த கிசுகிசு பயன்பட்டாலும், அந்த கட்டுரை கொண்டிருக்கும் ஆழத்தை எவ்வகையிலும் அந்த நடை தொந்தரவு செய்வதில்லை. கண்ணதாசன், மதுரை முத்து, ஈ. வெ. கி. சம்பத் , தீப்பொறியார், நாவலர், வெற்றிகொண்டான், காளிமுத்து என இந்த தொகுப்பில் இட...